அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு : சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை : அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மனுவை விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமும் மறுத்து விட்டன. ஜாமீன் மனுவை விசாரிக்க அதிகாரம் இருக்கிறதா என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வருமாறும் சிறப்பு நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அமர்வில் முறையிட்டார். அப்போது, இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி ஆர்.சக்திவேல் ஏற்கனவே விலகிய நிலையில் இந்த முறையீட்டை எப்படி ஏற்பது என்று நீதிபதி எம்.சுந்தர் கேள்வி எழுப்பினார். மேலும் இந்த வழக்கை யார் விசாரிப்பது என்பது குறித்து தலைமை நீதிபதி தான் முடிவு செய்வார் என்று கூறிய நீதிபதி எம்.சுந்தர், இந்த வழக்கு தொடர்பாக தலைமை நீதிபதியிடம் முறையிடுங்கள் என்றார்.

இந்நிலையில், இந்த மனு இன்று நீதிபதிகள் சுரேஷ்குமார், குமரேஷ் பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், “உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் தான் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் படி, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் தான் முதன்மை அமர்வு நீதிமன்றம். அந்த வகையில், ஒன்றிய அரசின் சட்டத்தின்படி, அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றமான முதன்மை அமர்வு நீதிமன்றம் தான் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கு அதிகாரம் உள்ளது. எனவே ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்,”என்று உத்தரவிட்டனர்.இந்த வழக்கை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதே தவறு என்றும் அனைத்து கோப்புகளையும் மீண்டும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கே மாற்றவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் விரைந்து ஜாமீன் மனு மீது முடிவு எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related posts

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் அரிவாளால் வெட்டி படுகொலை!

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது