“8 மாதம் சிறையில் இருப்பதால் செந்தில்பாலாஜி மீதான வழக்கை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்” : உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்களாக சிறையில் உள்ளார். இதையடுத்து, ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் என்.பரணிகுமார் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம், அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன.

செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை தற்போது மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாக தெரிவிக்கின்றனர். வேலை வாங்கி தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாக அமலாக்க துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்டதாக அமலாக்க துறையினரே கூறுகின்றனர். செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை. நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று வாதிட்டார்.

அமலாக்க துறை தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆஜராகி, ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்நிலையில், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்களாக சிறையில் இருப்பதால் வழக்கை 3 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க சென்னை முதன்மை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார். செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 5 முறை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. 3 முறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் 2 வது முறையாக சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருச்சியில் ரூ.87 ஆயிரம் மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்.!!

மகளின் காதல் திருமணத்தால் வேதனை கழிவறைக்குள் கழுத்தறுத்து தந்தை தற்கொலை

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கெஜ்ரிவால் கைது குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவு