மழைநீர் சூழ்ந்த செம்பியம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து, மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார் காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர்


சென்னை: சென்னை பெரு நகர காவல் ஆணையாளர் அவர்கள் செம்பியம் காவலர் குடியிருப்புக்கு சென்று ஆய்வு செய்து, மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கினார். மேலும், பெரம்பூரில் உள்ள அரசு பள்ளி நிவாரண மையத்திற்கு சென்று பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். மிக்ஜாம் புயல் காரணமாக, கடந்த 03.12.2023 அன்று இரவு முதல் 04.12.2023 இரவு வரை, சென்னை பெருநகரில் இடைவிடாது மழை பெய்து, அநேக இடங்களில் மழைநீர் சூழ்ந்தது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், சென்னை பெருநகர காவல் மாவட்ட பேரிடர் மீட்புக் குழுக்கள் மற்றும் காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் என சுமார் 18,400 காவல் அலுவலர்கள், சென்னை பெருநகரில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் மேற்கொண்டும், சாலைகளில் விழுந்த மரங்களை அகற்றியும் வருகின்றனர்.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள் இன்று (08.12.2023) காலை, செம்பியம் காவலர் குடியிருப்புக்கு காவல் அதிகாரிகளுடன் நேரில் சென்று காவலர் குடியிருப்பை ஆய்வு செய்தார். பின்னர் காவலர் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்து, காவலர் குடும்பத்தினரின் குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய காவல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, காவலர் குடும்பத்தினருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினார்.

பின்னர், காவல் ஆணையாளர் அவர்கள் பெரம்பூர், மாதவரம் நெடுஞ்சாலை, பள்ளி சாலையிலுள்ள, சென்னை பெண்கள் மேல்நிலை பள்ளி நிவாரண மையத்திற்கு சென்று, மழைநீரால் சூழ்ந்த பகுதிகளில் இருந்து மீட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு பாய், போர்வை, தலையணை, துணிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது, கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) அஸ்ரா கார்க், இணை ஆணையாளர் (வடக்கு) திரு.அபிஷேக் திக்‌ஷித், அடையாறு, துணை ஆணையாளர் (புளியந்தோப்பு) ஈஸ்வரன் மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.

 

 

Related posts

ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.11லட்சம் : சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து

6 போலீசார் சஸ்பெண்ட்

நாடாளுமன்றத்தில் வெளி விவகாரம் உள்பட 4 நிலைக்குழுக்களின் தலைவர் பதவி காங்கிரசுக்கு கிடைக்கும்