தற்காப்பு பயிற்சி பெற்ற பழங்குடியின சிறுமிகளுக்கு பரிசு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் எஸ்பி சண்முகம் உத்தரவின்பேரில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு ஏடிஎஸ்பி சாம் ராஜதுரை அறிவுரைப்படி, “பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’’ என்ற திட்டத்தின் கீழ் காஞ்சிபுரம் மாவட்டம், ஓரிக்கை மற்றும் ஏகனாம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் பழங்குடி இனத்தை சார்ந்த 80 பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சியான கராத்தே, சிலம்பம் மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி ஜூலை 10ம்தேதி தொடங்கி ஆகஸ்ட் 7ம்தேதி வரை நடைபெற்றது.

இப்பயிற்சி முகாமில், தற்காப்பு பயிற்சி மட்டுமின்றி பெண் குழந்தைகளின் கல்வி, பாதுகாப்பு, குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்த வீடியோ படத்தொகுப்பினை ஒளிபரப்புதல் மூலம் பழங்குடியின மக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மாவட்ட காவல்துறை சார்பில், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் 30 நாட்களாக நடந்து வருந்த தற்காப்பு பயிற்சி முகாம் நிறைவு விழா நேற்று முன்தினம் ஓரிக்கை அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், போலீஸ் எஸ்பி சண்முகம் ஆகியோர் கலந்துகொண்டு, வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசு கோப்பை, பாராட்டு சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர் சக்திகாவ்யா, சமூக நல பாதுகாப்புத்துறை அலுவலர் சியாமளா, முதன்மை கல்வி அலுவலர் வெற்றிசெல்வி, மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் சசிரேகா, காஞ்சிபுரம் மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்ஐ பிரபாவதி, சோமசுந்தரம், சுப்ரமணி, கலைச்செல்வி, ஏகனாம்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சுகுணாதேவி, ஓரிக்கை ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தமிழரசி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விழாவினை, சிறப்பாக ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட காவல் துறையை, காஞ்சிபுரம் பொறுப்பு காவல்துறை துணை தலைவர் திஷா மிட்டல் வெகுவாக பாராட்டினார்.

Related posts

மணல் கடத்திய டிராக்டர் டிப்பர் பறிமுதல்

உளுந்தூர்பேட்டையில் அக். 2ம் தேதி விசிக மது ஒழிப்பு மகளிர் மாநாடு ஆயத்தப் பணி

ஆசிரியரை பீர் பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல்