சிவில் நீதிபதிகள் தேர்வு பட்டியல் ரத்து தீர்ப்பை சீராய்வு செய்ய உயர் நீதிமன்றம் மறுப்பு

சென்னை: இட ஒதுக்கீடு குளறுபடியால் தமிழகத்தில் சிவில் நீதிபதி பதவியிடங்களுக்கான தற்காலிக பட்டியலை ரத்து செய்த தீர்ப்பை சீராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. தமிழகத்தில் கீழமை நீதிமன்றங்களில் உள்ள சிவில் நீதிபதி பதவிகளில் உள்ள 245 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான இறுதி நேர்முகத் தேர்வுக்கு மொத்தம் 472 பேரை டி.என்.பி.எஸ்.சி தேர்வுசெய்தது. இவர்களில் 245 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்வு எழுதிய தர்ஷினி, தினேஷ் உள்ளிட்டோர் தற்காலிக தேர்வு பட்டியலில் இடஒதுக்கீடு முறை முறையாக பின்பற்றவில்லை என்றும் மாற்றியமைக்கப்பட்ட புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள, தற்போதைய பட்டியலை ரத்து செய்து மாற்றியமைக்கப்பட்ட திருத்த பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிடவேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இந்தத் தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டும் என்று கரிஷ்மா என்ற மாணவி தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சிங்காரவேலன் ஆஜராகி முதலில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்பட்டு பின்னடைவு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதன் பிறகுதான் நடப்பு காலி பணியிடங்களில் பொதுப்பிரிவினையும், இனவாரி சுழற்சி பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட மூத்த வழக்கறிஞர் ஜி.சங்கரன், இது அனைவருக்கும் பொதுவான தனி தேர்வு முறை. இதில் இட ஒதுக்கீடு முறை அமல்படுத்துவதில் எந்த மாறுதலும் இருக்காது. இந்த தீர்ப்பை சீராய்வு செய்ய வேண்டியதில்லை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர். ஏற்கனவே உத்தரவிட்டபடி, டிஎன்பிஎஸ்சி திருத்தப்பட்ட பட்டியலை வெளியிடுமாறும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

திருப்பதி தரிசன முன்பதிவுக்கு ஆதார் இணைக்க ஆலோசனை

மபி, டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் அவலம்: ராஜ்கோட் விமான நிலையத்தின் மேற்கூரை சரிந்து விழுந்தது

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்