சேலத்துக்காரரின் அதிரடியால் கலங்கிப்போன தெர்மாகோலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சம்திங் கிடைப்பதால், பணி மாறுதலாகி போக மனசே வருவதில்லையாமே…’’ என கேட்டு சிரித்தார் பீட்டர் மாமா. ‘‘குயின்பேட்டை மாவட்டத்துல தி என்று தொடங்குற காவல்நிலைய லிமிட்ல 12 இடங்கள்ல சூது ஆட்டம் படுஜோரா நடக்குதாம். இந்த ஏரியாக்கள்ல தினக்கூலிகள் அதிகளவுல இருக்குறாங்க. தினமும் 400, 500ன்னு சம்பாதிக்குறாங்க. வர்றத சூதுலயே விட்டுறாங்க. ஆறு காடான ஏரியாவுல இருக்குற பண முதலைகள் ஒவ்வொரு ஏரியாவுக்கு சூது ஆட்டத்துக்கு குறைந்த பணத்தொகைய எழுதி கொடுத்து, ஏழை தொழிலாளிகள் கிட்ட இருந்து லட்சக்கணக்குல சம்பாதிக்குறாங்களாம்.

இதை கவனிக்க வேண்டிய தி காவல்நிலைய ஸ்டார் காக்கி, சம்திங் வாங்கிட்டு கண்டுகொள்வதில்லையாம். இப்படி சம்திங் வர்றதனால, இந்த காவல் நிலையத்துக்கு மாறுதலாகி வர்ற காக்கிகள் ரொம் சந்தோஷமா வர்றாங்களாம். இங்க இருந்து பணி மாறுதலாகி போக காக்கிகளுக்கு மனசே வருவதில்லையாம். இதனால ஏழை தொழிலாளர்களின் ரத்தத்தை உறிஞ்சும் சூதை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பதவிக்காக இலைக்கட்சி தலைவர் ஊரில் கடும் போட்டி என்கிறார்களே..’’ என இழுத்தார் பீட்டர் மாமா.. ‘‘மாம்பழத்திற்கு பேமசான ஊருல, இலைக்கட்சி நிர்வாகி ஒருவர் இருதரப்பினருக்கு இடையே நடந்த தகராறில் கொலை செய்யப்பட்டாரு. இது தொடர்பாக குற்றவாளிகளை, நாலு மணி நேரத்துல போலீசார் கைது செஞ்சிட்டாங்க. ஆனால் சம்பவம் நடந்து முழுசா ஒரு மாதம் கூட ஆகல. அதற்குள் இறந்துபோன பகுதி செயலாளர் பதவியை பிடிக்க , இலைக்கட்சியிலேயே கடும் போட்டி ஏற்பட்டிருக்காம்.

இதற்காகத்தான் இத்தனை நாளாக காத்திருந்தேன் என்பதை போல, முக்கிய நிர்வாகிகளின் ஆதரவை திரட்டும் வேலையில இறங்கியிருக்காங்களாம். இதில் சிலர் இலைக்கட்சி தலைவரின் நிழலானவரின் ஆதரவை பெறும் வகையில், ஆறுதல் கூற அழைச்சிட்டு வந்துட்டாங்களாம். அதுவும் மாநகர முக்கிய நிர்வாகிகளுக்கு தெரியாமலேயே அவரும் வந்துட்டு போயிட்டாராம். இதனால பதவி எங்களுக்குத்தான் என்ற மேட்டரை, சிலர் கசிய விட்டிருக்காங்களாம்.

இன்னும் சிலரோ இந்த பதவி எங்களுக்கு ஒதுக்கப்பட்டு விட்டது என மார் தட்டுறாங்களாம். இதில் நிழலானவரின் ஆதரவு பெற்றவருக்குத் தான் பதவி என்பது உறுதியாகியிருக்காம். ஆனால் பதவி காலியாக இருக்கும் பகுதியில், 8 வார்டு வருதாம். இதில் ஒரு சமூகத்தை சேர்ந்த பீப்பிள் அதிகமாக இருக்காங்களாம். அவர்களோ தங்களுக்குத்தான் பதவி என்பதில் உறுதியா இருக்காங்களாம். இதில் யாருக்கு பதவி என்பது போக போகத்தான் தெரியுமென இலைக்கட்சி தொண்டர்கள் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தனது ஆதரவாளர்களை இழுக்கும் வேலையில் இறங்கிய சேலத்துக்காரருக்கு பதிலடி கொடுக்க வைத்தியானவர் முடி பண்ணியிருக்காராமே..’’ ‘‘டெல்டா மாவட்டத்தில் இலை கட்சியில் முக்கிய நபராக வலம் வந்த நெற்களஞ்சியத்தை சேர்ந்த மாஜி அமைச்சரான வைத்தியானவர் தேனிக்காரர் அணியில் இருந்து வருகிறார். டெல்டாவில் உள்ள வைத்தியானவரின் ஆதரவாளர்களை தங்களது பக்கம் இழுப்பதன் மூலம் அவருக்கு செக் வைக்க சேலத்துக்காரர் முடிவு செய்துள்ளாராம்….

வைத்தியானவருக்கு அதிர்ச்சி கொடுத்தால் அவர் தேனிக்காரருக்கு நெருக்கடி கொடுக்க வாய்ப்பு உள்ளது என சேலத்துக்காரர் கணக்கு போட்டுள்ளார். சில தினங்களுக்கு முன் வைத்தியானவரின் ஆதரவாளர்கள் சேலத்துக்காரர் அணியில் ஐக்கியமானதால் உச்சகட்ட கோபத்தில் வைத்தியானவர் இருந்து வருகிறாராம்… இதனால் சேலத்துக்காரருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் திறைமறைவான வேலையில் வைத்தியானவர் இறங்கியுள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘தூங்கா நகரின் இலைக்கட்சியின் மாவட்ட நிர்வாகி மாஜி மந்திரி தெர்மாகோல் மேலே ஏகப்பட்ட பிராது என்று சேதி வருதே..’’‘‘ஆமா.. இந்நகரத்து அரசியல் களம் இப்போது இவரை குறிவைத்தே சுற்றுகிறது. சமீபத்தில் நகருக்கு வந்து திரும்பிய கட்சித்தலைமையான சேலத்தாரை கண்டதும், கோஷங்கள் எழுப்பி தெர்மாகோல் குறித்து ஏகப்பட்ட விஷயங்களை பட்டியலிட்டு, மாநில பதவியை கொடுத்து, மாவட்டத்திலிருந்து அனுப்பி விடுங்கள் என இளைஞரணிக்காரர் ஒருவரின் ஆதரவாளர்கள் 9 விஷயங்களை அடுக்கி எழுதி மனு கொடுத்தனராம்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தூங்காநகரில் மூன்றாமிடத்திற்கு கட்சி போவதற்கு பிரசாரத்தில் ஒத்துழைக்காமல், வேட்பாளரை கிண்டலடித்தபடி, திட்டங்களையும் எடுத்துச் சொல்லாமல் இருந்தார் என்பதே பிரதான குற்றச்சாட்டாம். வேட்பாளரான டாக்டரானவரும் இப்போது தெர்மாகோலுடன் அதிருப்தியில் மற்றொரு மாஜி மந்திரியுடன் சுற்றி வருவதையும் தெரிவித்தனராம்.

இதுபற்றி அறிந்து போனில் தெர்மாகோல் அந்த இளைஞரணிக்காரரை வெளுத்து வாங்கிய ஆடியோவும் வைரலான நிலையில், மூன்றாம் இடத்திற்கு சென்றது ஏன் என ஆலோசனைக் கூட்டத்திலும் சேலத்துக்காரர் அதிரடியாக கேள்வியெழுப்பியதில் தெர்மகோல் கலங்கி விட்டாராம். ஒரு சில நாட்களில் தலைமை என்ன அதிரடி முடிவெடுக்கப் போகிறதோ என்ற அச்சத்துடனேயே தெர்மாகோல் காத்திருக்கிறார் என்கின்றனர்..’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

மோடி குறித்து அவதூறு கருத்து; சசிதரூர் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு

வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் நாகர்கோவிலில் மழைநீர் வடிகால் ஓடைகளில் மண் அகற்றம்

டெல்லி அளவிற்கு லடாக்கில் ஆக்கிரமிப்பு; மோடியால் சீனாவை சரியாக கையாள முடியவில்லை: அமெரிக்காவில் ராகுல் கடும் குற்றச்சாட்டு