பிடிவாதம் பிடிக்கும் சேலத்துக்காரரை இணங்க வைத்தே ஆவோம் என கங்கணம் கட்டியிருக்கும் மாஜி மந்திரிகளை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கும், ஒப்பந்ததாரர்களுக்கும் இடையே மல்லுக்கட்டாமே எங்கே..’’ எனக்கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘கடைகோடி மாவட்டத்தில் கடந்த மாதம் விவசாயிகள் கோரிக்கை தின கூட்டம் நடந்துச்சாம்.. இதில் கலந்துகொண்ட விவசாயிங்க, சானல்களை முறையாக தூர்வார வில்லை, தண்ணீர் வழங்கவில்லைன்னு காரணம் சொல்லி செயற்பொறியாளரை குற்றம் சுமத்திவிட்டு வெளிநடப்பு செய்தாங்க… இந்த தடவையும் அணைகளில் நிரம்ப தண்ணீர் இருந்தும் ஒன்றரை மாதமாகியும் பல்வேறு கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை.

ஆனால் மழை பெய்தால் உபரியாக வீணாக ஆற்றில் அணை தண்ணீர் திறந்து விடப்படுகிறதுனு குற்றச்சாட்டு இருக்கு.. இப்போது நீர்வளத்துறையில் ஒப்பந்ததாரர்கள்- செயற்பொறியாளர் இடையேயான மல்லுக்கட்டு ஆரம்பமாகி உள்ளதாம்.. தாங்கள் செய்த பணிகளுக்கு ரூ.5 கோடிக்கு மேல் நிதியை பாக்கி வைத்துள்ளதாக கூறும் ஒப்பந்ததாரர்கள் போராட்டத்தை தொடங்கி இருக்காங்க.. குமரி மாவட்ட நீர்வளத்துறை செயற்பொறியாளருக்கு என்னதான் ஆச்சுன்னு கேள்வி எழுப்புறாங்க விவசாயிகள்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘டாஸ்மாக்கில என்ன பிரச்னை ‘’ என கேட்டார் பீட்டர் மாமா.

‘‘கோவை மாவட்ட டாஸ்மாக் நிர்வாகத்தில் பெரும் சர்ச்சை நிலவி வருகிறதாம்.. அதாவது, டாஸ்மாக் துறை சார்பில் எப்.எல்2 என்கிற தனியார் ‘பார்’களுக்கு அனுமதி வழங்குறாங்க.. இந்த ‘பார்’களுக்கான அனுமதி பெற்றவர்கள், கோவை புறநகர் பகுதிகளில் முகாமிட்டு இருக்காங்களாம்.. நெடுஞ்சாலை ஓரங்களை மையப்படுத்தி, அங்கு சொகுசு ‘பார்’ அமைத்து, கூடுதல் விலைக்கு சரக்கு விற்பனை செய்றாங்களாம்.. இதில், மதுரையில் இருந்து வந்த ஒரு கும்பல், சமீப காலமாக கோலோச்சிட்டு வருதாம்.. மாஜி இலைக்கட்சி அமைச்சர் ஒருவருக்கு வேண்டப்பட்ட நபர்களும் எப்.எல்2 ‘பார்’கள் அதிகளவில் எடுத்துள்ளார்களாம்..

இவர்கள், ‘குடிமகன்’களின் கூட்டத்தை அந்த பக்கம் இழுத்து விடுவதால், ரெகுலர் டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறையுதாம்.. இதனால், டாஸ்மாக் நிர்வாகத்தின் மேலிடம், கோவை மாவட்ட மேலாளர்கள் மற்றும் கடை சூபர்வைசர்களுக்கு கடும் நெருக்கடி கொடுக்க தொடங்கிவிட்டதாம்.. அதாவது, ‘‘ஏன் விற்பனை குறைகிறது?’’ன்னு கேள்வி மேல் கேள்வி கேட்டு குடைச்சல் கொடுக்கிறார்களாம்.. ‘‘எப்.எல்2 பார்’’களுக்கு அனுமதி கொடுப்பதே மேலிட அதிகாரிகள்தான்.

அப்படி அனுமதி கொடுத்துவிட்டு, விற்பனை ஏன் குறைகிறதுன்னு எங்களை கேள்விகேட்டால், நாங்கள் என்னதான் செய்வது?’’ என்று மாவட்ட அளவிலான மேலாளர்கள் மற்றும் கடை சூபர்வைசர்கள் புலம்பி தள்ளுவதுடன் ‘பாவம் ஒரு பக்கம்… பழி இன்னொரு பக்கமான்னு..’’ கதறுகின்றனர் என்றார் விக்கியானந்தா. ‘‘தேசிய கட்சி கூட்டணியில இணைக்க இலைக்கட்சி தலைவரை கரைய வைக்கும் முயற்சி உறுதியாக வெற்றிபெறும் என மாஜிக்கள் சொல்றாங்களாமே..’’ என அடுத்த கேள்வியை தொடுத்தார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் இயற்கையாக ரொம்பவே அமைதியானவராம்.. சின்னமம்மியை சந்திக்கும் போதெல்லாம் மிகவும் பணிவாகவே இருப்பாராம்.. அப்படிப்பட்டவருக்கு எப்படி இவ்வளவு தைரியம் வந்ததுன்னு தெரியாம இலைக்கட்சிக்காரங்க இப்போ திணறுறாங்களாம்.. முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளும் முன்பாக எம்எல்ஏக்களுக்கு கோல்டு, கரன்சியை உடனடியாக கொடுக்க முடியுமான்னு கேட்டதும் இதோ ஒரு நொடியில் அனைத்தையும் செய்து முடிக்கிறேன்னு சொல்லியவாறு செஞ்சாராம்.. அதன்பிறகு தான் தைரியம் அவருக்கு வந்ததாம்..

இதற்கிடையில் தேனிக்காரரையும், சின்னமம்மியையும் கட்சியில் சேர்ப்பதுடன், எங்களுடன்தான் கூட்டணி வைக்கவேண்டும்னு பாஜ மிரட்டியும் அவர் கொஞ்சமும் பயப்படலையாம்.. அசைஞ்சும் கொடுக்கலையாம்.. அவருடன் பேச்சுவார்த்தை நடத்திய ஆறு மாஜிக்களும் அவரது பேச்சை கேட்டு ரொம்பவே ஷாக்காயிட்டாங்களாம்.. என்றாலும் சந்திப்பு தொடருமுன்னு சொல்லிட்டு வெளியே வந்தாங்களாம்.. ஆனால் எதுவுமே நடக்காதது போல இலைக்கட்சி தலைவர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை கூட்டி தில் காட்டிக்கிட்டிருக்காராம்..

இதனால அவரை சந்திச்ச மாஜிக்கள், ‘தலைக்குமேல கத்தி தொங்குது. ஆனா இவரோ ரோம் பற்றி எரியும்போது பிடில் வாசிப்பதுபோல’ எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருக்காறேன்னு சொல்றாங்களாம்.. என்றாலும் அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பதைப்போல கொஞ்சம் கொஞ்சமா பேசி பாஜ கூட்டணியில இலைக்கட்சி தலைவரை சேர்த்திடுவோமுன்னு உறுதியா சொல்றாங்களாம் மாஜிக்கள்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காக்கிகளுக்குள்ளேயே சாக்குபோக்கு சொல்லி மிரட்டல் விடுவதால் காக்கிகளும் புலம்புறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.  ‘‘கிரிவலம் மாவட்டம் வந்தா வாசி சப் டிவிஷன்ல 8 காக்கிகள் நிலையம் இருக்குது.. இங்க ஒவ்வொரு காக்கிகள் நிலையத்துலயும் தனி பிரிவு காக்கிகளை நியமிச்சிருக்காங்க.. இவங்க அந்த எல்லைக்கு உட்பட்டு நடக்குற சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளை மாவட்ட காக்கியோட கவனத்துக்கு முன்கூட்டியே கொண்டு போவாங்க.. இதனால ஸ்டார் காக்கிகள் கூட இந்த தனிப்பிரிவு காக்கிகளுக்கு மரியாதை கலந்த பயத்தோட வேலை செய்வாங்க..

ஆனா வாசி சப் டிவிஷன்ல இதுக்கு நேர்மாறாக, தனிப்பிரிவு காக்கி தகவலை உயர் அதிகாரிக்கு ஏன் சொன்னீங்க? அதனால தான் குற்றவாளிகளை பிடிக்க முடியலைன்னு நொண்டி சாக்கு சொல்லி மிரட்டுறாங்களாம்.. இதனால் வாசி சப்- டிவிஷன்ல தனி காக்கிகள் என்ன செய்றதுன்னே தெரியாம மனகஷ்டத்துல இருக்குறாங்களாம்.. இவங்க இப்படி இருந்தா, இதே பிரிவுல, வர்ற தகவலை மாவட்ட காக்கிக்கு சொல்லாம மூடி மறைச்சி, சம்திங் பார்க்குறவங்களும் இருக்குறாங்கன்னு காக்கிகள் வட்டாரத்துலயே புலம்பல் சத்தம் ஓவரா கேட்குது..’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூரில் ஹெச்.பி. லேப்டாப் தொழிற்சாலை அமைகிறது: ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

எரிபொருள் டேங்கர் – லாரி மோதி விபத்து; நைஜீரியாவில் 48 பேர் தீயில் கருகி பலி: 50 மாடுகளும் எரிந்து கருகியது