பறிமுதல் வாகனங்களில் உதிரி பாகங்கள் திருட்டு: மாநகராட்சி சார்பில் போலீசில் புகார்

அண்ணா நகர்: மாநகராட்சி உதவி பொறியாளர் சங்கர், அமைந்தகரை காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: மத்திய வட்டாரத்துக்கு உட்பட்ட 5 மண்டலங்களில் பழுதான வாகனங்கள் சாலையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால், இடையூறு ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதன்பேரில், பல்வேறு இடங்களில் பழுதான நிலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 2 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் மாநகராட்சி சார்பில் கைப்பற்றப்பட்டது.

அவற்றை அமைந்தகரை பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைத்துள்ளோம். இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் கைப்பற்ற வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். மேலும், வாகங்களில் இருந்த ஆடியோ சிஸ்டம், பேட்டரி, டயர்கள் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஏடிஎம்மில் பணம் எடுத்து கொடுப்பதுபோல் ஏமாற்றி பெண் அக்கவுண்டில் ரூ.90 ஆயிரம் அபேஸ்

செங்கல் சூளையில் கொத்தடிமையாக இருந்த பெண் மீட்பு

பிளாஸ்டிக் பைப்புகள் தயாரிக்கும் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து