செய்யூரில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் ஏற்றி சென்ற லாரிகளுக்கு அபராதம்: வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நல்லூர் கிராம ஏரியில் இருந்து சவுடு மண் அதிக அளவில் ஏற்றிக்கொண்டு தினமும் 300க்கும் மேற்பட்ட லாரிகள் செய்யூர் பஜார் வழியாக தார்ப்பாய் போடாமல் செல்கின்றன. இதனால், பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலர் லாரியிலிருந்து கொட்டப்படும் மண்ணால் பாதிப்படைந்தனர். இதனால், இந்த லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், செய்யூர் பஜார் வழியாக சென்ற இரண்டு லாரிகளை செய்யூர் தாசில்தார் சரவணன் பிடித்து அபராதம் விதித்திட காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், இதுபோன்று செல்லும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி