செய்யாறு வேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்: பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது

செய்யாறு: செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோயிலில் ரத சப்தமி பிரமோற்சவம் விழா நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து நேற்றிரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் திருஞானசம்பந்தர் பாடல் பெற்ற திருத்தலமான பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் கோயிலில், ரத சப்தமி பிரமோற்சவ விழாவில் நேற்று அதிகாலை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கொடி மரத்திற்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டு விமரிசையாக கொடியேற்றம் நடந்தது. கொடி ஏற்றத்தை தொடர்ந்து 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இதையொட்டி கடந்த 8ம் தேதி கிராம தேவதையான காங்கியம்மன் சிம்ம வாகனத்தில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பேட்டை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து நேற்று முன்தினம் விநாயகர் மூஷிக வாகனத்தில் உற்சவ வீதி உலாவும் விக்னேஸ்வரர் வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரனம் அதிவாச கிரியை நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் தொடர்ச்சியாக நேற்று அதிகாலை பிரதமை திதியில் கோயில் கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் கொடி மரத்திற்கு அபிஷேகம் மற்றும் பல்வேறு பூஜைகளை செய்து வேத மந்திரம் ஓத கொடியேற்றும் நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது‌. கொடியேற்றும் விழாவில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகளும், ஊர் பிரமுகர்களும், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். இதையொட்டி சுவாமிக்கு பகல் அபிஷேகம், கேடய உற்சவமும், இரவு கற்பக விருட்சம், காமதேனு, மயில், மூஷிக, ரிஷப வாகன பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து இன்று 2வது நாள் விழாவில் காலை சூரிய பிரபை உற்சவமும், இரவு சந்திர பிரபை உற்சவமும், நாளை 3வது நாள் பூத வாகன சேவையும், 4வது நாள் பெரிய நாக வாகன சேவையும், 5வது நாள் காலை அதிகார நந்தி வாகன சேவை புறப்பாடும், இரவு பெரிய ரிஷப வாகன சேவையும், 6வது நாள் காலையில் 63 நாயன்மார்கள் புறப்பாடும், பகல் சந்திரசேகர சுவாமி அபிஷேகம் மற்றும் புறப்பாடு, இரவு அம்மன் தோட்ட உற்சவமும் தொடர்ந்து திருக்கல்யாண வைபவமும் யானை வாகன சேவையும் நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக 7வது நாள் விடியற்காலையில் இரத சப்தமி ரதம் புறப்பாடு தேர் வடம் பிடித்து தொடங்கி வைக்கும் நிகழ்வுடன் தேர் திருவிழா நடைபெறுகிறது.

மேலும், 8வது நாள் காலையில் சந்திரசேகர சுவாமி திருவீதி உலா வருதலும், இரவு குதிரை வாகன சேவை திருவீதி உலா வருதலும், 9வது நாள் பகல் பிட்சாடனர் உற்சவம் பேட்டை வீதி வலமும், இரவு அபிஷேகம் அதிகார நந்தி வாகன சேவையும், 10வது நாள் பகல் நடராசர் உற்சவம் வீதி உலாவும், மாலை தீர்த்தவாரியும், இரவு கொடி இறங்குதல் நிகழ்வும், ராவணோஸ்வர திருக்கயிலை சேவை பஞ்ச மூர்த்திகள் புறப்பாடுடன் இரத சப்தமி பிரம்மோற்சவ விழா முடிவடைகிறது. விழா நாட்களில் தினமும் மாலை ஆலய சொற்பொழிவும், திருஞானசம்பந்தர் அரங்கத்தில் சமயத் தொண்டு மன்றத்தினரால் சமயச் சொற்பொழிவுயும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும் அந்தந்த திருவிழா விழா கமிட்டி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Related posts

கேரள கூட்டுறவு வங்கி ஊழல்; மார்க்சிஸ்ட் கட்சியின் நிலம், வங்கி டெபாசிட்டுகள் முடக்கம்: அமலாக்கத்துறை அதிரடி

ராஜஸ்தான் அமைச்சரை கண்டித்து ரத்த மாதிரியுடன் எம்பி போராட்டம்

அமர்நாத் யாத்திரை தொடங்கியது