செய்யாறு அருகே ஒரே நாளில் அடுத்தடுத்து 5 கோயில்களில் அம்மன் தாலிகள், உண்டியல் பணம் திருட்டு: மர்ம ஆசாமிகளுக்கு வலை


செய்யாறு: செய்யாறு அருகே தூசி கிராமத்தில் அடுத்தடுத்து 5 கோயில்களின் பூட்டுகளை உடைத்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்த அம்மன் தாலிகள் மற்றும் உண்டியல் பணத்தை திருடிச்சென்றுள்னர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த தூசி கிராமத்தில் அபிமூர்த்தி ஈஸ்வரன், செங்கையம்மன், கெங்கையம்மன், மாரியம்மன், அங்காளம்மன் ஆகிய கோயில்கள் உள்ளன. இந்த கோயில்கள் அனைத்தும் அருகருகே அமைந்துள்ளன. இங்கு சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி, செவ்வாய்க்கிழமையான நேற்று முன்தினம் கோயில்களில் பூஜைகள் முடிந்த பின்னர் பூசாரிகள் பூட்டிவிட்டு சென்றனர்.

இந்நிலையில், நேற்று காலை அப்பகுதி மக்கள் சென்று பார்த்தபோது 5 கோயில்களின் பூட்டும் உடைக்கப்பட்டு, திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது உண்டியலும், பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தன. மேலும், காணிக்கை பணம் ₹10,000, அம்மன் கழுத்தில் இருந்த சுமார் 3 சவரன் தாலிகள் மற்றும் வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தூசி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். 5 கோயில்களிலும் ஒரே கும்பல் கைவரிசை காட்டியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். அடுத்தடுத்து 5 கோயில்களில் திருடுபோன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பொங்கல் பண்டிகை: ரயில் டிக்கெட் முன்பதிவு செப்.12 முதல் தொடக்கம்

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்