சீரக சம்பா முதல் செங்கரும்பு வரை… இயற்கை விவசாயத்தில் கலக்கும் மருத்துவத் தம்பதி!

மருத்துவத்தொழிலைப் போல விவசாயத்தையும் சேவை மனப்பான்மையுடன் செய்ய வேண்டும். நாம் உற்பத்தி செய்கிற உணவு மற்றவர்களின் ஆரோக்கியத்தைக் காக்க வேண்டும் என்பதற்காகவே இயற்கை விவசாயத்தில் இறங்கினோம். இந்த இயற்கை விவசாயம் எங்களுக்கு நெகிழ்ச்சியான உணர்வுகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. எங்கள் வயலில் எங்கு தோண்டினாலும் மண்புழுதான் இருக்கும். அந்தளவுக்கு செயற்கையான பொருட்கள் எதையும் போடாமல் மண்ணை வளமாக்கி இருக்கிறோம். இங்கு விளைவது எல்லாமே ஆரோக்கியம் தரும் தானியங்கள்தான்’’ என மகிழ்வுடன் பேசத்தொடங்கினர் பாலாஜி- கவுசல்யா தம்பதியினர். பாலாஜி எலும்பு மூட்டு மருத்துவர். கவுசல்யா கண் மருத்துவர். மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள கள்ளந்திரி பகுதியைச் சேர்ந்த இந்த மருத்துவத் தம்பதி தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் முழுக்க முழுக்க இயற்கை வழியில் விவசாயம் செய்து வருகிறார்கள்.

ரசாயனக் கலப்பு கொஞ்சம் கூட கிடையாது. நெல், கரும்பு, தென்னை, மஞ்சள், சின்ன வெங்காயம் என பல பயிர்கள் செழித்து வளர்ந்திருக்கின்றன இவர்களது இயற்கை பண்ணையில். இந்தப் பயிர்களை பார்க்கும்போதே இயற்கை விவசாயத்தின் மகிமையை அறிந்துகொள்ளலாம். ஒவ்வொரு பயிரையும் நமக்கு காண்பித்தவாறே தொடர்ந்து பேசினர் பாலாஜி-கவுசல்யா தம்பதியினர்.`நாங்கள் இருவருமே விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான். எங்கள் பெற்றோர் வெவ்வேறு தொழில்களைச் செய்தாலும் விவசாயத்தையும் விட்டுவிடாமல் செய்து வந்தனர். விவசாயக்குடும்பம் என்பதால் நாங்களும் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறோம். இந்தப்பகுதியில் எங்களுக்குச் சொந்தமாக ஏழரை ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் பல்வேறு பயிர்களை சாகுபடி செய்வோம். ரசாயன உரங்களின் தீமைகளையும், இயற்கை விவசாயத்தின் நன்மைகளையும் உணர்ந்து கடந்த 2017ம் ஆண்டில் இயற்கை விவசாயத்தில் இறங்கினோம். இயற்கை விவசாயம் என்றால் முழுக்க முழுக்க இயற்கையான இடுபொருட்களையே பயன்படுத்த வேண்டும், எந்த சந்தர்ப்பத்திலும் ரசாயன இடுபொருட்களை பயன்படுத்தவே கூடாது என உறுதியெடுத்தோம். அதை இன்று வரை கடைபிடிக்கிறோம்.

இயற்கை விவசாயம்தான் என்று முடிவெடுத்தவுடன் சணப்பை உள்ளிட்டவற்றை விதைத்து மடக்கி உழுதோம். இந்த பசுந்தாள் உரங்களால் மண் நன்றாக வளம் பெற்றது. பின்னர் அதில் அக்சயா பொன்னி ரக நெல்லைப் பயிரிட்டோம். ஆரம்பத்தில் குறைவாகத்தான் மகசூல் கிடைத்தது. அறுவடை முடிந்து நிலத்தை மேலும் வளப்படுத்தி வேறு வேறு பயிர்களை சாகுபடி செய்தோம். கடந்த 2019ம் ஆண்டில் போர்வெல் அமைத்தோம். தற்போது நாங்கள் ஆற்றுப்பாசனம் மற்றும் கிணற்று பாசன முறையில் விவசாயம் செய்கிறோம். கடந்த 2020ம் ஆண்டில் தென்னை உள்ளிட்ட மர வகைகளை நட்டோம். இப்போது 160 கொய்யா, 30 நாட்டு நெல்லி இருக்கிறது. ஆரம்பத்தில்தான் அக்சயா பொன்னி பயிரிட்டோம். இப்போது சீரக சம்பாதான். அதேபோல இட்லி அரிசிக்கான நெல்லும் பயிரிடுகிறோம். இந்த 2 வகை நெல்லை வீட்டு உபயோகத்துக்காக வைத்துக்கொள்கிறோம். மேலும் எங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு தருகிறோம். இதன்மூலம் சுவையான, ஆரோக்கியமான உணவைச் சாப்பிடுகிறோம் என்ற நிறைவு ஏற்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டில் 55 சென்ட் நிலத்தில் செங்கரும்பு பயிரிட்டோம். மதுரை பகுதியில் விளையும் செங்கரும்புக்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது. அத்தகைய செங்கரும்பை முழுக்க முழுக்க இயற்கை முறையில் சாகுபடி செய்கிறோம். எந்த வித ரசாயன உரமும் கலக்காததால் கரும்பு அட்டகாச சுவையில் இருக்கிறது. விளைச்சலும் கூடுதலாக கிடைத்தது. இயற்கையான கரும்பு என்பதால் வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். அவர்கள் தொடர்ந்து இந்தக் கரும்பைப் பயிரிடுங்கள் என வேண்டுகோள் வைத்தார்கள். இதனால் இப்போது மீண்டும் செங்கரும்பை பயிரிட்டு இருக்கிறோம். ஜனவரி மாதத்தில் அறுவடை செய்ய இருக்கிறோம். கடந்த ஆண்டை விட இப்போது நல்ல
விளைச்சல்.

தற்போது சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை பயிரிட்டு இருக்கிறோம். மந்தாரை துளசி, கருநொச்சி, முடக்கத்தான், தூதுவளை உள்ளிட்ட மருத்துவக்குணம் கொண்ட மூலிகைப் பயிர்களையும் வைத்திருக்கிறோம். சிறுதானியங்கள் எல்லாம் மகத்துவம் மிகுந்தவை. நம் உணவில் சிறுதானியங்கள் கண்டிப்பாக இடம் பிடிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு சிறுதானியப் பயிர்களையும் ஆங்காங்கு பயிரிடுகிறோம். விவசாயத்தைப் போல விவசாயத்தின் துணைத்தொழிலான கால்நடை வளர்ப்பிலும் எங்களுக்கு ஆர்வம் அதிகம். இயற்கை விவசாயத்திற்கு கால்நடை வளர்ப்பு அவசியமும் கூட. அவற்றின் கழிவுகள் நல்ல எரு. இதற்காக 4 நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறோம். மேலும் ஆடுகள், வான்கோழி, வாத்து உள்ளிட்டவற்றையும் வளர்க்கிறோம். இவற்றின் கழிவுகளை உரமாக பயன்படுத்துகிறோம். ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், மீன் அமிலம் போன்றவற்றை நாங்களே தயாரித்து பயிர்களுக்கு தெளிக்கிறோம். நாங்கள் கோ கிருபா எனும் அமிர்த கரைசலைத் தயாரித்து பயன்படுத்துகிறோம். இது நல்ல பலனைத் தருகிறது. கரும்பைப் போலவே நெல்லிக்காய் மற்றும் கொய்யாப்பழங்களை வியாபாரிகள் விரும்பி வாங்கிச் செல்கிறார்கள். சிலர் தங்கள் வீட்டுப் பயன்பாட்டுக்காக எங்கள் நிலத்தைத் தேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள். ஒருமுறை வருபவர்கள் மறுமுறையும் வருகிறார்கள். இதுதான் இயற்கை விவசாயத்தின் மகத்துவம். நாங்கள் இயற்கை முறையில் செய்யும் விவசாயத்தைப் பற்றி அறிந்துகொள்வதற்காக, மதுரை மட்டுமின்றி அருகில் உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் எங்கள் வயலுக்கு வருகிறார்கள். பலர் போனில் தொடர்புகொண்டு விளக்கம் கேட்கிறார்கள். அதேபோல இயற்கை வேளாண்மையில் அனுபவம் கொண்டவர்கள் எங்களைத் தொடர்புகொண்டு அவர்களின் அனுபத்தைப் பகிர்ந்துகொள்கிறார்கள். பாரம்பரிய ரக விதைகளை அனுப்பி பயிரிடச் சொல்வார்கள். நாங்கள் ஒவ்வொரு முறையும் வெளியூர் செல்லும்போது,

அந்தப் பகுதியில் கிடைக்கும் செடி மற்றும் மரக்கன்றுகளை வாங்கி வந்து இங்கு பயிரிடுகிறோம். விவசாயத்தைப் பாடமாக படித்தவர்களையும், விவசாயத்தில் நல்ல அனுபவம் உள்ளவர்களையும் பண்ணை பராமரிப்புக்காக நியமித்து இருக்கிறோம். அவர்களுடன் சேர்ந்து நாங்களும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுகிறோம். நாங்கள் டாக்டர்கள் என்றபோதும், உணவே மருந்து என்ற பழமொழியை ஏற்பவர்களாக இருக்கிறோம். இதுதான் நாங்கள் இயற்கை விவசாயத்தில் ஈடுபடக் காரணம். இயற்கை விவசாயத்தை எல்லோரும் செய்ய வேண்டும். இயற்கை விவசாய முறை பரவலானால் ஆரோக்கியமான தலைமுறை நிச்சயம் கிடைக்கும். இயற்கை விவசாயத்தை நாங்கள் ஒரு சேவையாகவே பார்ப்பதால், இதில் லாப நஷ்டத்தைக் கணக்கு பார்ப்பதில்லை. ஆனாலும் எங்களுக்கு இந்த இயற்கை விவசாயம் லாபத்தைத்தான் தருகிறது’’ என நிறைவாக பேசுகிறார்கள் இந்த மருத்துவத் தம்பதியினர்.
தொடர்புக்கு:
டாக்டர் கவுசல்யா – 90039 20209

கோ கிருபா தயாரிப்பு

தேவையான பொருட்கள்:

200 லிட்டர் கொள்ளளவு கொண்ட சுத்தமான குவளை (அ) பாரல், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வெல்லம் 2 கிலோ, நாட்டுப்பசுவின் பால் மூலம் தயாரிக்கப்பட்ட மோர் 2 லிட்டர், டிரம்-மை மேல்பகுதியில் மூடுவதற்கான பருத்தியாலான துணி, திரவத்தைக் கலக்குவதற்கான சுழி, ஒரு லிட்டர் கோ கிருபா அமிர்தம்.

தயாரிக்கும் முறை:

குவளையில் 200 லிட்டர் சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொள்ளவும். மற்றொரு சிறிய வாளியில் 5 லிட்டர் தண்ணீரில் 2 கிலோ வெல்லத்தைக் கரைத்துக்கொள்ளவும். 1 லிட்டர் கோ கிருபா அமிர்தம், 2 லிட்டர் மோர் இரண்டையும் குவளையில் சேர்த்துக் கலக்கவும். பின்னர் வெல்லக்கரைசலையும் அதில் சேர்த்துக் கலக்கவும். குவளையின் வாயில் துணியால் இறுக்கிக் கட்டி மர நிழலில் வைக்கவும். குவளையில் உள்ள கரைசலை தினமும் 2 முறை சுத்தமான கழியால் வலப்பக்கமாக 5 முதல் 7 முறை சுற்றிக் கலக்கவும். இந்தக்கரைசலில் மழைநீர் படாமல் பாதுகாக்கவும். இந்த 200 லிட்டர் கோ கிருபா அமிர்தக்கரைசல் 7 (அ) 8 நாட்களில் தயாராகிவிடும். கலக்கிவிடுவதற்கு சுத்தமான மரத்தாலான கழிக்கு பதிலாக மீன் வளர்ப்புத் தொட்டியில் பயன்படும் சிறிய மோட்டாரையும் பயன்படுத்தலாம். இதன்மூலம் 4 அல்லது 5 நாட்களிலேயே கரைசலைத் தயாரித்து விடலாம். இந்த 200 லிட்டர் கோ கிருபா அமிர்தக் கரைசலை பயிர்களுக்குத் தேவையான இயற்கையான சக்திமிக்க உரமாகவும், நோய் மற்றும் பூச்சித் தாக்குதலை கட்டுப் படுத்தவும் பயன்படுத்தலாம்.

Related posts

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு