உலகத்தை என் ஓவியங்கள் மூலமாக பார்க்கிறேன்!

நன்றி குங்குமம் தோழி

‘‘நான் பார்க்கிற இந்த உலகத்தைதான் என் ஓவியங்கள் வழியாக வெளிக்காட்டுகிறேன்’’ என்கிறார் டோராதி. கருப்பு வெள்ளைகளில் இவர் வரையும் ஓவியங்கள் தனித்துவமானவையாக இருக்கின்றன. ஓவ்வொரு ஓவியமும் நம்மை அது பற்றி சிந்திக்க வைக்கிறது. பார்ப்பதற்கு அழகாக மட்டுமில்லாமல் ஒவ்வொரு ஓவியமும் ஒரு உரையாடலை நிகழ்த்துகிறது. அதனாலயே இந்த ஓவியங்கள் தனிக்கவனம் பெறுகிறது. இவருடைய ஓவியங்கள் குறித்து அவரிடம் பேசும் போது…

‘‘சொந்த ஊர் கன்னியாகுமரி. சின்ன வயசுல நிறைய கனவுகள் இருந்தது. ஆனா, எல்லார் மாதிரியும் நானும் இன்ஜினியரிங் படிச்சேன். சின்ன வயசில் இருந்தே எனக்கு வரையும் பழக்கம் இருந்ததால், எனக்கு ஓவியங்கள் மீது ஆர்வம் இருந்தது. என் நண்பர்களுக்கு எல்லாம் ஓவியங்கள் வரைந்து கொடுப்பேன். அதே போல் வீட்டில் பொழுது போக்காகவும் ஓவியங்கள் வரைய துவங்கினேன். ஆனா, படிப்பு முடிச்சதும் அதற்கேற்ப வேலை கிடைச்சதால், நான் அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தேன்.

ஓவியங்கள் வரைய எனக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை. இரண்டு வருஷம் வேலை பார்த்தேன். ஆனால் அதில் ஏற்பட்ட மன அழுத்தத்தை போக்க நேரம் கிடைக்கும் போது மற்றும் விடுமுறை நாட்களில் ஓவியங்களை வரைய ஆரம்பிச்சேன். அதைப் பார்த்த என் நண்பர்கள் ஓவியங்கள் எல்லாமே நல்லா இருப்பதாகவும், என்னை தொடர்ந்து வரையச் சொல்லி ஊக்குவிச்சாங்க. நானும் தொடர்ந்து வரைய ஆரம்பித்தேன்.

ஒரு கட்டத்தில் வேலை கொடுத்த அழுத்தம் காரணமாக நான் அந்த வேலையை விட வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு நான் வீட்டில் சில மாதங்கள் சும்மா இருந்தேன். அந்த காலகட்டத்தில் நான் எனக்கு மனசுக்குள் தோணும் ஓவியங்களை வரைவேன். அதன் பிறகு ஓவியங்கள் குறித்து படிக்கும் எண்ணம் ஏற்பட்டது. டிசைனிங் சம்பந்தமாக படிக்க தொடங்கினேன். நான் வரைகிற ஓவியங்களை எப்படி டிஜிட்டலில் வரைவது என்று தெரிந்து கொண்டேன். அதன் பிறகு ஸ்டார்ட் அப் நிறுவனம் ஒன்றில் டிசைனராக வேலைக்கு சேர்ந்தேன். என் தொழில் மற்றும் எனக்கு பிடித்த துறை என இரண்டுமே ஒரே வேலையாக அமைந்தது’’ என்றவர் தன்னுடைய ஓவியங்கள் குறித்து பேசத் தொடங்கினார்.

‘‘நான் ஆரம்பத்தில் ஒன்றை பார்த்து தான் வரைந்து கொண்டிருந்தேன். அந்த சமயத்தில் ஒரு ஓவியரிடம் வரைய கற்றுக் கொள்ள தொடங்கினேன். அவர்தான் எனக்கு ஓவியங்கள் பற்றிய அடிப்படை நுணுக்கங்களை கற்றுக் கொடுத்தார். ஓவியங்கள் வரையும் போது உங்களுக்கு என்ன கற்பனை வருதோ அதை அழிக்காமல் அப்படியே வரையுங்கள் என சொல்வார். சின்ன வயசில் நான் ஓவியம் வரைய ஆரம்பித்த போது அப்படியேதான் வரைவேன். அதன் பிறகுதான் மற்ற ஓவியங்களை பார்த்து வரையத் தொடங்கினேன்.

இவரும் அதையே கூற, எனக்குள் ஒரு ஆர்வம் வந்தது. என் மனதில் தோன்றியதை வரையத் தொடங்கினேன். நான் தொடர்ந்து வரைய ஆரம்பித்ததும் என் கற்பனை திறனும் விரிவடைய தொடங்கியது. கருப்பு வெள்ளை ஓவியங்கள் வரையும் போது எந்த இடத்தில் வெளிச்சம் கொடுக்க வேண்டும், எந்த இடத்தில் ஓவியத்தின் நிழல் இருக்க வேண்டும் என தெளிவான கற்பனை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த ஓவியம் பார்க்க அழகாக இருக்கும். இந்த அடிப்படை விஷயத்தை செய்துவிட்டாலே ஓவியம் உயிர் பெற்று விடும். அதன் பிறகு வண்ணம் கொடுக்கும் போது ஓவியத்தின் தன்மை மேலும் மேம்படும். என் கண்களுக்கு தெரியும் உலகத்தை ஓவியமாக வெளிப்படுத்தினேன்.

ஒரு நாள் கவிதை ஒன்றை படித்தேன். ஓர் உயிர் வளர்வதை யாராலும் தடுக்க முடியாது என்பதுதான் அந்த கவிதையின் கரு. அதை மரத்தின் அடிப்பாகத்தில் ஒரு குழந்தை இருப்பது போலவும் அந்த மரம் செழித்து வளர்வது போலவும் வரைந்தேன். அந்த மரமே பார்க்க பெண் போல இருக்கும். ஒரு மரத்தை நாம் வெட்டலாம். ஆனால் அந்த மரம் வளர்வதை தடுக்க முடியாது என்பதை என் ஓவியம் மூலம் உணர்த்தினேன். நான் ஆசையாக வளர்த்த என் செல்ல நாய் இறந்துவிட்டது.

அந்த துக்கம் பல நாட்கள் என்னை பாதித்திருந்தது. ஆனால் வாழ்க்கை என்பது ஒவ்வொரு கட்டத்தையும் தாண்டி செல்வதுதான். அதனால் பிறப்பு இறப்பு இரண்டுமே ஒன்றுதான். அதை நாம் கடக்க பழகிக் கொள்ள வேண்டும் என்பதை மையமாக வைத்து ஒரு ஓவியம் வரைந்தேன். இதுபோல் என்னை பாதித்த விஷயங்களை ஓவியங்களாக மாற்றினேன். இதனைத் தொடர்ந்து எனக்கு சிறுகதைகளுக்கு ஓவியங்கள் வரைய வாய்ப்பு வந்தது.

என்னுடைய ஓவியங்கள் அனைத்தும் என் கற்பனையின் நிழல் என்பதால், எனக்கு கதைகளை படித்து அதற்கான ஓவியங்களை வரையும் போது பெரிய சவாலாக இருந்தது. அந்த சவாலையும் எதிர்கொண்டு ஜெயித்தேன். தொடர்ந்து சிறுவர்களுக்கான இதழ்களுக்கும் வரைய ஆரம்பித்தேன். அதில் கருப்பு வெள்ளை ஓவியங்கள்தான் வரைய வேண்டும். ஆனால் யாரும் என் கற்பனையை தடுக்கவில்லை. அதற்கான முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.

ஒரு கதையை படித்து அதில் வரும் விஷயங்களை நான் கற்பனையாக நினைத்து தான் வரைவேன். காரணம், எழுத்து ஓர் ஊடகம், ஓவியம் ஓர் ஊடகம். ஒரு கதையை படித்தால் அதன் அர்த்தம் எல்லோருக்குமே ஒரே மாதிரியாகத்தான் புரியும். ஆனால் அதுவே ஓவியங்களை பார்ப்பவர்களுக்கு அவர்களுடைய எண்ணத்திற்கு ஏற்ப அதை புரிந்து கொள்வார்கள். அது போக என் ஓவியங்கள் சாதாரணமாக ஒரு சுவற்றில் மாட்டி வைக்கக்கூடிய ஓவியமாக இருக்கக்கூடாது என நினைக்கிறேன்.

ஓவியம் ஒவ்வொரு நாளும் புதுவிதமான கற்பனைகளை கொடுக்கக்கூடியது. அழகு பொருளாக இல்லாமல் பார்ப்பவர்களுடன் உரையாடுவது போல இருக்க வேண்டும். என்னை யார் என்று அறிய இந்த ஓவியங்கள் மிகவும் உதவியது. என்னை மாற்றியதும் இந்த ஓவியங்கள்தான். எனக்கு ஓவியத்தின் அடிப்படைகளை சொல்லிக் கொடுத்தவர் இன்றும் வரைந்து வருகிறார். அவரைப் போலவே நானும் என் வயதை கடந்தும் தொடர்ந்து வரைய வேண்டும் என்பதுதான் என் ஆசை’’ என்று மகிழ்ச்சிப் பொங்க சொல்கிறார் டோராதி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

Related posts

வயிறு நிறைய சாப்பிடறதை விட மனசு நிறைந்து சாப்பிடணும்!

இந்த சமூகம் என்ன கொடுத்ததோ அதை திருப்பி செய்கிறேன்!

பெண்கள் யாரையும் எதிர்பார்க்காமல் சம்பாதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்!