விழிப்புணர்வு தந்த விதைத் திருவிழா!

இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் போன்ற வார்த்தைகள் தற்போது அதிகளவில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. ஐடி உள்ளிட்ட பணம் கொட்டும் துறைகளில் வேலை பார்ப்பவர்கள் கூட தற்போது இயற்கை விவசாயத்தில் ஈடுபட ஆர்வத்தோடு வருகிறார்கள். பல பட்டங்களைப் பெற்ற இளைஞர்கள் கூட தற்போது பாரம்பரிய விதை சேகரிப்பு, அதை பரவலாக்கம் செய்தல் என அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள். இதனால் ஊருக்கு ஊர் பாரம்பரிய விதை திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதைக் காண மற்ற விவசாயிகளும், பொதுமக்களும் படையெடுத்து வருகிறார்கள். முதன்முதலாக இந்த நிகழ்ச்சியை நடத்தும் ஊர்களில் கூட எதிர்பாராத வகையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வருகிறார்கள்.

கடந்த வாரம் வந்தவாசியில் நடந்த விதைத் திருவிழாவும் இதை நிரூபித்துக் காட்டியது. ஆம். ஆடிப்பட்டம் தேடி விதை, ஆரோக்கியம் உங்கள் வசம் என்ற வாசகங்களோடு வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்முறையாக விதைத்திருவிழா நடத்தப்பட்டது. இதில் பாரம்பரிய நெல் விதைகள் கண்காட்சி, பாரம்பரிய காய்கறி விதைகள் கண்காட்சி, மூலிகை கண்காட்சி ஆகிய நிகழ்வுகள் இடம்பெற்றன. இந்தக் கண்காட்சிகளில் வந்தவாசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் விளைந்த பாரம்பரிய நெல் ரகங்கள், காய்கறிகள், மூலிகைப் பயிர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. அவற்றின் விதைகளைக் காட்சிக்கு வைத்து, அவற்றின் சிறப்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இதற்காக 60க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. சுமார் 4 ஆயிரம் பேர் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.

தமிழ்நாடு விதை சேகரிப்பாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த ப்ரியா, மண்வாசனை மேனகா உள்ளிட்டோர் கலந்துகொண்டு இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளித்தனர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வந்திருந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த மரபு விதைகளைப் பரிமாறிக் கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு மதிய உணவாக வாசனை சீரக சம்பா பிரியாணி, ரத்தசாலி சாம்பார் சாதம், தூயமல்லி தயிர் சாதம் ஆகியவை வழங்கப்பட்டது. அதோடு கருப்புக்கவுனி அரிசியில் தயாரிக்கப்பட்ட பாயாசமும் வழங்கப்பட்டது. இப்படி முழுக்க பாரம்பரிய அரிசிகளைக் கொண்டு தயாரித்து வழங்கப்பட்ட மதிய உணவை உண்ட பொதுமக்கள், இந்த உணவின் செய்முறை குறித்து கேட்டுத் தெரிந்துகொண்டனர். முதன்முறையாக நடத்தப்பட்ட இந்தக் கண்காட்சி வெற்றிகரமாக நிறைவுற்றதாகவும், வந்தவாசி மக்களுக்கு இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் குறித்து ஓரளவு விழிப்புணர்வு ஏற்பட்டு இருப்பதாகவும் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இதுவரை தாங்கள் நெய் விநியோகம் செய்ததில்லை: அமுல் நிறுவனம் விளக்கம்!