உரம் தயாரிப்பில் கலக்கும் நாகர்கோவில் மாநகராட்சி

இங்கு உற்பத்தியாகும் இயற்கை விவசாயம் குறித்து தற்போது பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது. ஐடியில் பணிபுரிபவர்கள், வங்கிப் பணியில் இருப்பவர்கள், வெளிநாட்டில் வசித்தவர்கள் என பலரும் இன்று சொந்தமாக நிலம் வாங்கி இயற்கை விவசாயம் செய்ய முன்வருகிறார்கள். இதில் பலர் லட்சத்தில் சம்பளம் தரும் வேலைகளை உதறிவிட்டு விவசாயத்தில் இறங்குகிறார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு ரசாயனம் கலக்காத இயற்கை உரம் கண்டிப்பாக தேவைப்படுகிறது. ஆனால் இயற்கை உரத்திற்கு எப்போதும் தட்டுப்பாடு நிலவியே வருகிறது.இதனால் இயற்கை உரம் தயாரிக்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். சிலர் மாடுகளை வளர்த்து, அந்த மாடுகள் மூலம் கிடைக்கும் சாணம், கோமியம் ஆகிய கழிவுகள் மூலம் இயற்கை உரம் தயாரிக்கிறார்கள். இதனால் வீட்டில் கண்டிப்பாக பசுமாடு வளர்க்க வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது. பசுமாட்டில் இருந்து கிடைக்கும் சாணத்தை வயல்கள், தோட்டங் களில் பயன்படுத்தும்போது அதிக மகசூல் கிடைக்கிறது. மற்ற உரங்களில் இந்த நுண்ணுயிர் பெருக்கம் என்பது குறைவாகத்தான் இருக்கும். இயற்கை உரத்தை பயன்படுத்தும்போது மண்வளம் பெருகுவதோடு, விளைவிக்கும் பொருட்களுக்கு சந்தை மதிப்பும் உயர்கிறது.

மாடு வளர்க்க முடியவில்லை, இயற்கை உரம் தயாரிக்க முடியவில்லை என்ற நிலையில் உள்ள விவசாயிகள் இயற்கை உரத் தயாரிப்பாளர்களை அணுகுகிறார்கள். அதுபோன்ற நபர்களுக்கு கைகொடுக்கிறது நாகர்கோவில் மாநகராட்சி. நாகர்கோவில் பகுதியில் சேரும் மக்கும் குப்பைகளை சேகரித்து, அதில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்கள். நகராட்சி தயாரிக்கும் உரத்திற்கு நாகர்கோவில் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் அங்கு மலைபோல் குப்பைகள் தேங்கி கிடக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், கடந்த 2019-2020 காலகட்டத்தில் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை உரமாக்க 11 நுண்ணுரம் செயலாக்க மையம் தொடங்கப்பட்டது.

உரம் ஒரு கிலோ ரூ.1க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்தத் திட்டம் தொடங்கியபோது மக்கள் மத்தில் வரவேற்பு இல்லை. நாட்கள் செல்லச் செல்ல விவசாயிகள் மத்தியில் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. வீட்டைச் சுற்றி செடிகள் மற்றும் மாடித்தோட்டம் வைத்திருக்கும் பொதுமக்கள் நுண்ணுரம் செயலாக்க மையங்களுக்கு வந்து உரத்தை வாங்கிச்செல்கின்றனர். விவசாயிகள் லாரிகள், டெம்போக்களைக் கொண்டுவந்து டன் கணக்கில் உரம் வாங்கிச்செல்கின்றனர். முன்பெல்லாம் விவசாயிகள் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்று உரங்களை வாங்கி வருவார்கள். இதனால் வாகன செலவு மற்றும் ஆட்கள் செலவு என அதிக செலவு ஆகி வந்தது. தற்போது நாகர்கோவில் மாநகராட்சி உரத்தை விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.

வீடுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் மக்கும் குப்பை, மக்கா குப்பை என தனித்தனியாக பிரித்து வாங்குகிறது. இதில் மக்கும் குப்பைகளை நுண்ணுரம் செயலாக்க மையங்களுக்கு கொண்டு வந்து, அந்தக் குப்பையை எந்திரம் உதவியுடன் அரைத்து, அதனை நுண்ணுரம் செயலாக்கம் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் இட்டு, அதில் தயிர், சர்க்கரை, தண்ணீர் ஆகியவை கலந்த கரைசலை தெளித்துவிடுகின்றனர். 45 நாட்களில் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தும் வகையில் உரம் தயாராகி விடுகிறது. ஒவ்வொரு நுண்ணுரம் செயலாக்க மையமும் 5 டன் உரத்தை தயாரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நுண்ணுரம் செயலாக்க மையங்களில் இருந்து தினமும் 35 டன் குப்பைகள் உரமாக்க எடுத்துச்செல்லப்படுகிறது.

ஒரு மாதத்தில் நுண்ணுரம் செயலாக்க மையங்களில் வரும் குப்பைகளில் இருந்து 94 டன் உரம் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு நுண்ணுரம் செயலாக்க மையங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக பிரித்து வழங்கப்படுகிறது. இதனால் பணியாளர்கள் உற்சாகத்துடன் பணியாற்றி வருகின் றனர். விவசாயிகளும், உரம் நல்ல தரத்துடன் இருப்பதாக தெரிவிக்கின்றனர். பயிர்களும் செழிப்பாக வளர்வதாக கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் மாநகராட்சி உரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ‘‘நாகர்கோவில் மாநகராட்சியை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது.  இங்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வலம்புரிவிளை குப்பைக்கிடங்கில் கொட்டப்பட்டு வந்தது. தற்போது ரூ.9.5 கோடி செலவில் பயோமைனிங் முறையில் குப்பைகள் அகற்றும் பணி நடந்து வருகிறது. நுண்ணுரம் செயலாக்க மையங்கள் மூலம் மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை ெசய்யப்பட்டு வருகிறது. மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரித்து வழங்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதன்படி மக்கள் பிரித்து வழங்கி வருகின்றனர். மேலும் மாநகரப் பகுதியில் உள்ள தெருக்கள், சாலை ஓரத்தில் குப்ைபகளை கொட்டக் கூடாது என அறிவித்துள்ளோம். அதன்படி தற்போது சாலைஓரம், தெருக்களில் குப்பை இல்லை. வீட்டைச்சுற்றி மரம், செடிகள் வளர்க்கும் பொதுமக்கள் வீடுகளில் சேரும் மக்கும் குப்பைகளைக் கொண்டு நுண்ணுரம் செயலாக்கமையங்களில் தயாரிப்பது போல் உரம் தயாரித்து, செடி, மரங்களுக்கு பயன்படுத்தலாம். இதனால் தேவையில்லாத குப்ைபகள் வெளியே வருவது தடைப்படும்.

நாகர்கோவில் மாநகராட்சி தயாரிக்கும் உரத்தின் தன்மையை ஆய்வு செய்ய உரத்தின் மாதிரிகளை மதுரையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் விவசாய நிலத்திற்கு தேவையான அனைத்து சத்துகளும் நிரம்பியுள்ளதோடு, நுண்ணுயிர் பெருக்கமும் அதிகமாக இருப்பதாக தரச்சான்றுதழ் கிடைத்துள்ளது’’ என்கிறார் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ். “நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதியில் பொருட்காட்சி திடல் பகுதி, வலம்புரிவிளை உரக்கிடங்கு, புளியடி, கோட்டார், வடசேரி பஸ் நிலையம் அருகே, வடசேரி கனகமூலம் சந்தை மைதானம், வடசேரி ராஜபாதை, வட்டவிளை உள்பட 11 இடங்களில் நுண்ணுரம் செயலாக்கம் மையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு உற்பத்தியாகும் உரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைப்பதால், விவசாயிகள், பொதுமக்கள் உரங்களை வாங்கிச்செல்கின்றனர். இதுவரை 25 லட்சம் கிலோ உரம் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் வருவாய் கிடைத்துள்ளது. இந்த பணத்தை நுண்ணுரம் செயலாக்க மையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது’’ என்கிறார் மாநகர் நல அதிகாரி டாக்டர் ராம்குமார்.

‘‘நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் செயல்படும் நுண்ணுரம் செயலாக்க மையங்களில் இருந்து குமரி மாவட்டத்தின் அண்டை மாநிலமான கேரளாவிற்கு உரம் வாங்கிச்செல்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒருவர் 18 டன் உரத்தை கேரளாவிற்கு லாரி மூலம் எடுத்துச்சென்றார். நுண்ணுரம் செயலாக்க மையங்களுக்கு வாகனங்கள் கொண்டு வந்து எவ்வளவு உரம் தேவையோ அந்த எடைக்கு ஏற்ற வகையில் பணத்தை செலுத்திவிட்டோம் என்றால், அங்குள்ள பணியாளர்கள் வாகனங்களில் உரத்தை ஏற்றிவிடுவார்கள். இதனால் உரம் எடுக்க வரும்போது ஆட்களை அழைத்து வரவேண்டிய செலவு மிச்சமாகிறது’’ என்கிறார் சுகாதார ஆய்வாளர் மாதவன் பிள்ளை.
தொடர்புக்கு:
டாக்டர் ராம்குமார் 98401 27827.
மாதவன்பிள்ளை 99652 93505

 

Related posts

ஜம்மு காஷ்மீர் முதல்வராக உமர் அப்துல்லா பதவி ஏற்பார்: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா அறிவிப்பு

அரசியல்-மல்யுத்தம் ஒரே நேரத்தில் சாத்தியமில்லை: வினேஷ் போகத்

ஆஸி. டெஸ்ட் தொடருக்கு அழைத்துச்செல்லுங்கள்; மயங்க் யாதவ் பிரமிக்கத்தக்க பந்துவீச்சாளர்: பாக். மாஜி வீரர்கள் பாராட்டு