மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

மதுரை: மதுரை கே.கே. நகரை சேர்ந்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன், மதுரை போலீஸ் துணை கமிஷனர் கரன் கரத்தை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார். மனுவில் கூறியிருப்பதாவது: ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும், இஸ்லாம், கிறிஸ்தவ மதங்கள் குறித்தும், கடும் வெறுப்பை விதைக்கும் விதமாக பேசியிருந்தார். வேற்று மதத்தை தவறாக பேசினால் பலர் வரிந்து கட்டிக் கொண்டு வருகிறார்கள்.

இந்து மதத்தை தவறாக பேசினால் யாரும் வாய் திறக்க மாட்டார்கள். ஆந்திர துணை முதல்வர் மற்றும் நடிகர் பவன் கல்யாணின் பேச்சு இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கி பதற்றத்தை ஏற்படுத்தும். மக்களிடையே மதக்கலவரத்தை தூண்டும் விதமாக உள்ளது. தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எதையுமே தவறாக பேசவில்லை. ஆனால், பவன் கல்யாண் அரசியல் சட்டப் பதவியில் இருந்துகொண்டு, அரசியல் சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார்.

திருப்பதி லட்டு பிரச்னையில் எவ்வித தொடர்புமற்ற, சிறுபான்மை சமூக மக்களுக்கு எதிராக, வன்மத்தைக் கக்கி சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் விதமாக பேசி வருகிறார். தமிழ்நாட்டின் துணை முதல்வரை ஒருமையில் பேசி, இரு மாநில மக்களிடையே பகையை உருவாக்கும் குற்றச்செயலில் ஈடுபட்ட, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு