சேலத்துக்கு பறந்த அன்புமணி எடப்பாடி வீட்டில் ரகசிய டீலிங்: பாமக எம்எல்ஏ மூலம் கூட்டணி பேச்சு, 7 மக்களவை தொகுதி இறுதியானதாக தகவல்

நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் திமுக கூட்டணி மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அதே நேரத்தில் கடந்த தேர்தலில் ஒன்றாக கூட்டணி அமைத்து போட்டியிட அதிமுக, பாஜ எதிர் எதிர் திசையில் உள்ளன. இதனால் இந்த கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் எந்த பக்கம் சாய்வது என தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர். தனது செல்வாக்கை நிரூபிக்க சில கட்சிகள் ஆதரவு வேண்டும் என்பதால் பாமக, தேமுதிகவை தங்கள் பக்கம் பாஜ, அதிமுக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, அதிமுக எம்பி சி.வி.சண்முகம் சந்தித்து பேசினார். அப்போது பாமக சார்பில் 9 மக்களவை தொகுதி, ஒரு ராஜ்சபா சீட் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், அதிமுகவோ கடந்த முறை தந்ததுபோல் 7+1 தருவதாக தெரிவித்து உள்ளனர். ஆனால், பாமக தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்ததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அதே நேரத்தில் டெல்லியில் பாமக தலைவர் அன்புமணியை தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார்.

இவர் பாஜவின் தூதுவராக அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோல் தேமுதிகவிடமும் அதிமுக, பாஜ சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.பாஜவுக்கு அதிமுகவுடன் கூட்டணி வைத்தே ஆக வேண்டும் என்று பல பிரமுகர்கள் மூலம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஜி.கே.வாசனையும் அனுப்பி எடப்பாடியிடம் பாஜ பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் யார் யாருடன் கூட்டணி வைக்க போகிறார்கள் என்று புரியாத புதிராக உள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருப்பதை விட அவரது சொந்த ஊரான சேலத்தில்தான் இருப்பதைதான் விரும்புவார். இங்கிருந்து பேச்சுவார்த்தை நடத்தினால் வெற்றி கிடைக்கும் என்பது அவரது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் முகாமிட்டிருந்தார். அப்போது அன்புமணி, வீரபாண்டி தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள சேலம் வந்தார். எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில்தான் அன்புமணி தங்கியிருந்தார். அப்போது எடப்பாடி பழனிசாமியை அவர் ரகசியமாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது என்பது உறுதியானதாகவும் தெரிகிறது.

அப்போது 7 மக்களவை தொகுதி சீட்டும் ஒரு மேல்சபை சீட்டும் ஒதுக்குவதாக எடப்பாடி பழனிசாமி உறுதியாக கூறியதாக தெரிகிறது. அதில், தர்மபுரி, கடலூர், சிதம்பரம், அரக்கோணம், கள்ளக்குறிச்சி, ஆரணி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் வழங்கப்படும் என உறுதியாக கூறியதாக பாமக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியை அன்புமணி சந்திக்கவில்லை என கூறும் அவர்கள், சேலம் எம்எல்ஏ அருள் மட்டும் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தாக தெரிவித்தனர்.

அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், தேமுதிகவையும் அதிமுக தன்பக்கம் இழுக்கும் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இவ்வாறு முக்கியமான கட்சிகளை தன் பக்கம் இழுத்து பாஜவுக்கு தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருக்கிறார். அதுவும் பாஜ தலைவர் அண்ணாமலைக்கு சரியான சாட்டையடி கொடுக்கும் வகையில் எடப்பாடி செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

* கடைசியில் பாஜவுடன்தான் கூட்டணி அடித்து சொல்லும் ஓபிஎஸ் அணி
எடப்பாடி பழனிசாமியை பொருத்தவரையில், நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றியை பெறவேண்டிய அவசியம் கிடையாது. அவரது நோக்கமெல்லாம் ஏதாவது ஒருசில தொகுதிகளில் வெற்றி பெற்று, தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஓ.பி.எஸ்.,அணியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதுதான். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமி யாருடனும் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டணிகளை சேர்த்தாலும் கடைசியில் வந்து சேரும் இடம் பாஜதான் என ஓ.பன்னீர்செல்வத்தின் சேலம் மாநகரில் உள்ள ஆதரவாளர்கள் உறுதியாக கூறிவருகின்றனர். பாஜவில் இருந்து வெளியே வந்தது எல்லாம் நாடகம். தேர்தல் தேதியை அறிவித்ததும், 200 சதவீதம் பாஜவுடன் வந்து சேருவார் என உறுதியாக கூறுகின்றனர்.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்