இருக்கையில் அமர்ந்து டிக்கெட் கொடுப்பாயா? ஓடும் பஸ்சில் கண்டக்டரை கத்தியால் வெட்டிய வாலிபர்

*பொதுமக்கள் மடக்கிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

அருமனை : அருமனை அருகே அரசு பஸ்சில் இருக்கையில் அமர்ந்தவாறு டிக்கெட் கொடுத்ததால் ஏற்பட்ட தகராறில் கண்டக்டரை தலையில் வெட்டிய வாலிபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.குமரி மாவட்டம் கட்டுவா பகுதியில் இருந்து மார்த்தாண்டத்துக்கு தடம் எண் 86 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நேற்று காலை வழக்கம்போல் பஸ் புறப்பட்டு மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது.

கண்டக்டராக மணலி அருகே இடைக்கோடு பகுதியை சேர்ந்த விஜயன் (58) என்பவர் இருந்தார். பஸ்சில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அருமனை அருகே படப்பச்சை பகுதியில் பஸ் வந்தபோது, வாலிபர் ஒருவர் பஸ்சில் ஏறினார். கண்டக்டர் அமர்ந்திருந்த இருக்கைக்கு அருகே அவர் அமர்ந்தார்.கண்டக்டர் விஜயன், அந்த வாலிபரிடம் டிக்கெட் எடுக்குமாறு கூறினார். வாலிபரும் ரூ.7 கட்டணத்திற்கு 100 ரூபாய் கொடுத்தார்.

அதை வாங்கிய கண்டக்டர் மீதமுள்ள சில்லறையை வாலிபரிடம் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே கொடுத்துள்ளார். ஆத்திரமடைந்த வாலிபர், கால் ஒடிந்தா போய்விட்டது?, கண்டக்டர் நின்று கொண்டுதான் டிக்கெட் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த வாலிபர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கண்டக்டர் விஜயனை வெட்ட முயன்றார். அப்போது அவரிடம் இருந்து தப்புவதற்காக கீழே குனிந்தபோது விஜயனின் தலையில் கத்தி வெட்டு விழுந்தது.

ஓடும் பஸ்சில் அரங்கேறிய இந்த களேபரத்தை கண்டதும் டிரைவர் உடனே பஸ்சை அருமனை ஜங்சன் பகுதியில் நிறுத்தினார். அந்த சமயத்தில் பஸ்சில் இருந்த இறங்கிய வாலிபர் தப்பியோட முயன்றார்.ஆனால் பஸ்சில் பயணித்த பயணிகள் பொதுமக்கள் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். இதுகுறித்து அருமனை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் முதலில் படுகாயமடைந்த கண்டக்டர் விஜயனை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக அருமனை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு தையல்போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதற்கிடையே பொதுமக்கள் பிடித்து வைத்திருந்த வாலிபரை அருமனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் அந்த வாலிபர், திருவட்டாரை அடுத்த தச்சக்குடிவிளை பகுதியை சேர்ந்த மரியதாஸ் மகன் மெல்பின் (26) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பஸ்சில் கண்டக்டரை வாலிபர் கத்தியால் வெட்டிய சம்பவம் குமரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்