சீசனிங்கில் கலக்கல் பிஸினஸ்!

ஒரு உணவு அல்லது சமையலில் சுவை கூட்ட சீசனிங்தான் முக்கியம். சுவையூட்டிகள் என அழைக்கப்படும் இவைகள் ஆங்கிலத்தில் சீசனிங் என அழைக்கப்படுகின்றன. நாம் சாப்பிடும் பாப்கார்ன் துவங்கி, பீட்சா, பாஸ்தா என அத்தனையிலும் இன்று சுவையூட்டிகள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இதனையே தனது பிஸினஸாக எடுத்துக்கொண்டு வருமானம் ஈட்டி வருகிறார்கள் ஸோஹ்ரா, மற்றும் அலிஃபியா மாமியார் – மருமகள் காம்போ. ‘நான் ஸோஹ்ரா, எனக்கு வயது 48, ஹோம் சைன்ஸில் டிகிரி வாங்கினேன். பிறகு திருமணம், குழந்தை, குடும்பம் இப்படி நிறைய இடைவேளை எடுக்கக் கூடிய சூழல் உருவானது. அந்த நேரம்தான் எப்படியாவது வீட்டிலிருந்தே ஏதாவது ஆரோக்கியமான பிஸினஸ் செய்யலாமேன்னு தோணுச்சு. அப்படி உருவானதுதான் இந்த ‘ஜஸ் சீசனிங்’ பிராண்ட். ஆரம்பத்தில் சீசனிங்கில் பிஸினஸா அது மக்களிடம் அவ்வளவு தேவையானவையா இருக்காதே என நண்பர் கேள்வி எழுப்பினாங்க. ஆனாலும் என்னுடைய குறிக்கோள் இந்த சுவையூட்டிகள்தான். அதிலும் இந்த ஹெர்ப்ஸ், ஹெர்பல் சுவையூட்டிகள்தான் நாங்களே சொந்தமாக தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வரணும்ன்னு முடிவு செய்தோம். என்னுடைய மருமகள் அலிஃபியா , அவங்களும் க்ளினிக்கல் நியூட்ரிஷனில் பட்டம் பெற்றவங்க. இந்த சுவையூட்டிகளில் என்னென்ன புது ஆய்வுகள் செய்து புது புராடெக்ட்கள் உருவாக்க முடியுமோ அதை செய்யறாங்க’

என்னும் ஸோஹ்ரா என்னென்ன சீசனிங்கள் விற்பனை செய்கிறார்கள், விலை மற்றும் பேக்கேஜ் விபரங்களை மேலும் கூறினார். ‘எங்களிடம் வைட்டமின் ஏ,சி, மற்றும் கே அடங்கிய ஒரிகானோ, சில்லி துகள்கள், வெங்காயப் பவுடர், பூண்டு பவுடர், சீஸ் பவுடர், ஹெர்பி சிக்கன், பெரி பெரி, ஓமம், கலந்த ஹெர்ப்ஸ், தைம், மேலும் டீ உள்ளிட்ட பானங்களில் கலக்கக் கூடிய ரோஸ்மேரி சீசனிங் என அனைத்தும் உள்ளன. 30 கிராம் ரூ. 119 க்கு ஓரிகானோ துவங்கி அதிக பட்சமாகவே பெரி பெரி 80 கிராம் ரூ. 189க்கு விற்பனைக்கு உள்ளன. பெரும்பாலும் பீட்சா, பாஸ்தா, இத்தாலிய உணவுகள், மற்றும் மேற்கத்திய உணவுகளில் தான் இந்த சீசனிங் பயன் படுத்தப்படுறது. நாமெல்லாம் அதை பெரிதாக பயன்படுத்துறதே கிடையாது. ஆனால் இந்த ஹெர்ப்ஸ், சீசனிங் ஃபிளேவர்களே நம் இந்திய மண்ணுக்கு சொந்தமானவைதான். எப்படி முறுக்கு செய்யும் போது சிறிது ஓமம் தூவினால் அதன் வாசனையும், சுவையும் கூடுமோ அப்படி எல்லா உணவுகளிலும் தேவைக்கேற்ப கொஞ்சம் சீசனிங் சேர்த்தால் அதன் சுவை முற்றிலுமாக மாறும். இவைகளை என்னுடைய மாமியார் அதிகம் பயன்படுத்துறதைப் பார்த்து நானும் கத்துக்கிட்டேன். ஒரு காலத்தில் இந்திய உணவுகளில் நாம் சேர்த்துக்கொண்டிருந்த சீசனிங்தான் இன்று முழுமையா மேற்கத்திய உணவுகளுக்கு சொந்தமானதா மாறிடுச்சு. ஆனால் இப்போ மக்களிடம் இந்த ஹெர்ப்ஸ் மற்றும் சுவையூட்டிகள் குறித்த தேடல் இருக்கு. சாதாரணமாக ஒரு தியேட்டரில் பாப்கார்ன் வாங்கினால் கூட சீசனிங்கைத் தேடிதான் ஓடுகிறோம். இதில் இன்னும் நிறைய ஹெர்ப்ஸ், நிறைய சுவையூட்டிகள் கொண்டு வர நானும் அலிஃபியாவும் முயற்சி செய்திட்டு இருக்கோம். மேலும் எங்களுடைய பிஸினஸையும் கூட அடுத்தக்கட்டத்துக்குக் கொண்டுபோகும் திட்டங்களும் இருக்கு. சுவையூட்டிகள் நாக்குக்கு மட்டும் அல்ல. மூளைக்கும், கூட வித்தியாசமான அனுபவத்தையும், உண்ணும் உணவை மேலும் சுவாரஸ்யமாகவும் கூட மாற்றும்’ உற்சாகமாக சொல்கிறார் ஸோஹ்ரா.
– ஷாலினி நியூட்டன்

Related posts

மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த நபர் உயிரிழப்பு

மனைவிக்கு டார்ச்சர் கணவன் அதிரடி கைது

தி.மலையில் பக்தர்கள் அலைமோதல்; அண்ணாமலையார் கோயிலில் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம்