திருவான்மியூரில் செயல்பட்ட பிளாஸ்டிக் குடோனுக்கு சீல்: மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை

சென்னை: தமிழ்நாடு அரசு ஒருமுறை பயன்படுத்தி, தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தினை அமல்படுத்துவதற்காக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமும், சென்னை மாநகராட்சியும் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் திடீர் சோதனைகளையும் நடத்தி ஒருமுறை பயன்படுத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

இருந்த போதிலும், ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு தொடர்ந்து அறியப்பட்டதால் அதனை முற்றிலும் ஒழிக்க “பசுமை வீரர்கள்” என்ற படையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் உருவாக்கி கடந்த ஒருமாத காலமாக” மீண்டும் மஞ்சப்பை – பிளாஸ்டிக்கு குட்பை” என்ற முழக்கத்துடன் விழப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில், ஒருமுறை பயன்படுத்தியபின் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளை 2 இருசக்கர வாகனங்களில் வந்து விநியோகம் செய்த இருவரின் மீது திருவான்மியூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இப்புகாரின் அடிப்படையில், தொடர்புடைய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, ஒரு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக்கை விநியோகம் செய்யும் குடோன்கள் கண்டறியப்பட்டு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் பறக்கும் படை சென்னை வனிதா முருகையன், சென்னை மாநகராட்சியின் சுகாதார அதிகாரி சிவக்குமார் மற்றும் திருவான்மியூர் காவல் ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் முன்னிலையில் நேற்று சீல் வைக்கப்பட்டது. இது போன்ற திடீர் சோதனைகள் அடிக்கடி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விநியோகம் செய்யும் நபர்கள் மற்றும் குடோன்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.

Related posts

கோயம்பேடு உணவு தானிய மார்க்கெட்டில் ஆயுதபூஜை சிறப்பு சந்தை: இன்று தொடங்கி 7 நாள் நடக்கிறது

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான குடியிருப்பு பகுதிகளை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரம்

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது