அடுத்த 6 மணிநேரத்தில் வலுப்பெறும் காற்றழுத்தம்.. 7 அடி உயரத்திற்கு கடல் அலைகள்; லண்டன் செல்லும் விமானம் தாமதம்!!

சென்னை :
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 6 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இது வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நவம்பர் 16ல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் 17ம் தேதி நகரும் திசையில் மாற்றம் ஏற்பட்டு வடமேற்கு வங்க கடலில் ஒடிசா கடற்கரை அருகே செல்லக்கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை அருகே 2வது நாளாக கடல் சீற்றம் காணப்படுகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், கல்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், உயாளி குப்பம், கோகிலமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது.

கடல் சீற்றம் காரணமாக மீனவர்களும் 2ம் நாளாக மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை.மாமல்லபுரத்தில் கடல் சீற்றம் காரணமாக 7 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பி வருவதாக மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.நேற்று 5 அடி உயரம் வரை அலைகள் எழுந்த நிலையில், இன்று 7 அடிக்கும் மேலாக அலைகள் எழும்பி வருகின்றன.இதனிடையே லண்டன் செல்லும் விமானம், நான்கரை மணி நேரம் தாமதத்தால் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்கு ஆளாகினர்.பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் தினமும் லண்டனில் இருந்து புறப்பட்டு அதிகாலை 5.35 மணிக்கு சென்னை வரும்.சென்னை வந்து விட்டு மீண்டும் காலை 7.45 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டு செல்லும்.ஆனால் லண்டனில் மோசமான வானிலையால் நான்கரை மணி நேரம் தாமதமாக காலை 10.15 மணிக்கு சென்னை வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விமானம் மீண்டும் பகல் 12 மணிக்கு நான்கரை மணி நேரம் தாமதமாக லண்டன் புறப்பட்டு செல்ல உள்ளது.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை