அரிவாள் காட்டி செல்போன், பணம் பறிப்பு போலீசிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த ரவுடிக்கு எலும்பு முறிவு: 35 வழக்குகளில் தொடர்புடையவர்

மன்னார்குடி: போலீசிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்த ரவுடிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அடுத்த சேகரை கிராமத்தை சேர்ந்தவர் சின்னையன் (45). தொழிலாளியான இவர், நேற்றுமுன்தினம் இரவு வாழாச்சேரி பாலம் அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர், அரிவாளை காட்டி மிரட்டி சின்னையனிடமிருந்து செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றார்.

இதுதொடர்பாக கூத்தாநல்லூர் காவல் நிலையத்தில் சின்னையன் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் வெர்ஜினியா மற்றும் போலீசார் சம்பவம் நடந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது வெள்ளக்குடி பகுதியில் நின்றிருந்த வழிப்பறி நபர், போலீசாரை கண்டதும் அவர்களிடமிருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து ஆற்றுக்குள் குதித்தார். இதில் அந்த வழிப்பறி நபருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அவர், மன்னார்குடி அருகே விஜயபுரத்தை சேர்ந்த சுதாகர் (26) என்பதும், சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது திருவாரூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி, திருட்டு, அடிதடி மற்றும் கஞ்சா விற்பனை என 35 வழக்குகள் நிலுவையில் இருந்து வருவதும் தெரிய வந்தது. இதுகுறித்து கூத்தாநல்லூர் போலீசார் வழக்கு பதிந்து சுதாகரை கைது செய்தனர். திருவாரூர் டிஎஸ்பி மணிகண்டன் உத்தரவின் பேரில் மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சுதாகர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related posts

கச்சா எண்ணெய் விலை 32% குறைந்தாலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காதது ஏன்? : ஒன்றிய அரசுக்கு கார்கே கேள்வி

குஜராத்தில் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கும் வந்தே மெட்ரோ’ பெயர் ‘நமோ பாரத்’ என மாற்றம்

‘வந்தே மெட்ரோ’ ரயில் சேவைக்கு ‘நமோ பாரத் ரேபிட் ரயில்’ என பெயர் மாற்றம்