சிற்பமும் சிறப்பும்: தென்னகத்தின் எல்லோரா

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சிற்பமும் சிறப்பும்

மது ஜெகதீஷ்

ஆலயம்: வெட்டுவான் கோயில், கழுகுமலை, தூத்துக்குடி மாவட்டம்.
காலம்: பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் (பொ.ஆ.765-790)

தமிழகத்தின் பெருமை கட்டடக்கலை, சிற்ப சிறப்புகள் நிறைந்த பழமையான கோயில்களே! ஆயிரமாண்டுகள் பழமை வாய்ந்த ஆலயங்களுள் தஞ்சைப் பெரிய கோயில், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் போன்றவை பெரும் புகழ் வெளிச்சம் பெற்று ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றன. ஏறக்குறைய அதே காலக்கட்டதிற்குச் சற்று முன்னர் (1200 ஆண்டுகளுக்கு முன்) தமிழகத்தின் தெற்குப் பகுதியில் தழைத்தோங்கிய பாண்டியர் களின் கோயில் கட்டடக்கலை பற்றிய தகவல்கள் இன்றும் பெரும்பாலானவர்களைச் சென்றடையவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை. கோயில் கட்டடக்கலை வரலாற்றில், கட்டுமானக்கோயில் தொழில்நுட்பம் பெருமளவு முன்னேற்றமடைவதற்கு முன்பு மலைப்பாறைகளைக்குடைந்து உருவாக்கிய `குடைவரைக்கோயில்’களே எழுப்பப்பட்டன.

இந்தியாவில் குடைவரைக் குகைக் கோயில்களில் சிறப்பிடம் பெற்று முதன்மையானது மஹாராஷ்டிர மாநிலம் எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில். எல்லோரா அளவுக்கு பிரமாண்டம் இல்லாமல், சிறிய அளவில் வெட்டப்பட்டிருக்கும் இக் குடைவரைக்கோயில், அழகிலும், சிற்ப நேர்த்தியிலும் சிறிதும் குறைந்ததல்ல. பாண்டிய மன்னன் பராந்தக நெடுஞ்சடையனால் 8-ம் நூற்றாண்டில், திராவிட ஆலயக் கட்டுமானக் கலையமைப்பில் கழுகுமலையில் உள்ள ஒரு சிறு குன்றில் இந்த ஒற்றைக்கல் (Monolithic rock temple) ‘வெட்டுவான் கோயில்’ வெட்டப்பட்டுள்ளது. மலை மீது ஏறி மேலிருந்து பார்க்கும் போது இப்படி ஒரு குடைவரைக்கோயில் இருப்பதே தெரியாத வண்ணம் ஒரு பெரும் பாறையினுள்ளே 25 அடி ஆழத்தில் குடைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

மேலிருந்து கீழ் நோக்கி வெட்டப்பட்டிருக்கும் இக்கோயிலில் விமானம், கருவறை, அர்த்தமண்டபம் என அனைத்தும் அம்சங்களும் உள்ளன. கோயில் விமானத்தின் நான்கு புறங்களிலும் நந்தி சிற்பங்கள் அலங்கரிக்கின்றன. சிவனின் பல்வேறு வடிவங்கள், பூதகணங்கள், தேவ கன்னியர், பிரம்மா, திருமால் ஆகியவை தெய்வீகத்தன்மை யுடன் செதுக்கப்பட்டுள்ளன.சிவனும், உமையும் அருகருகே அமர்ந்த நிலையில் அமைக்கப்பட்டிருக்கும் சிற்பம், வேறெங்கும் காண இயலாத மிருதங்க தட்சிணாமூர்த்தி சிற்பம் ஆகியவற்றின் பேரெழில் காண்போரைக் கவர்ந்திழுக்கும்.

Related posts

திருச்செந்தூரின் கடலோரத்தில்…

வெற்றி தரும் வெற்றி விநாயகர்

இந்த வார விசேஷங்கள்