மதுராந்தகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் 104 டிகிரியை தாண்டி சுட்டெரிக்கும் வெயில்: பொதுமக்கள் பெரும் அவதி


மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் 104 டிகிரி தாண்டி சுட்டெரிக்கும் வெயிலின் அனல் காற்றால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் நேற்று காலை 7.30 மணியளவில் சுட்டெரிக்க தொடங்கிய வெயில் வறண்ட வானிலையுடன் மாலை 5.30 மணி வரை 104 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசி வருகிறது. இதனிடையே, அதிகரித்து வரும் வெயிலின் காரணமாக பகல் நேரங்களில் வெளியே வரும் பொதுமக்கள் வெப்பம் தாங்க முடியாமல் முகத்தை மூடியபடி சென்றனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாததால் நிழல் எங்கு உள்ளதோ அங்கு தேடிச்சென்று சிறிது நேரம் இளைப்பாரி செல்கின்றனர். சில முதியவர்கள் மயக்கநிலை ஏற்பட்டு, மரத்தடி நிழலில் படுத்து உறங்கிவிட்டு செல்கின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் மட்டும்தான் மழை பெய்தது. இதற்கிடையில், கடந்த 3 மாத காலமாக மழை இன்றி வறட்சியை நிலவுகிறது. இதனால், நீர்நிலைகளில் இருந்த தண்ணீரும் கிடுகிடுவென வற்றி வருகிறது. மேலும் சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் இலைகளும் உதிர்ந்து வருகிறது. பசுமையுடன் காணப்படும் கிராமங்களே தற்பொழுது வறட்சியான நிலையில் உள்ளது. சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வெயில் மற்றும் அனல் காற்றினால் பாதிப்படைந்தனர்.வெப்பத்திலிருந்து தப்பிக்க கிராமப்புறங்களில் பொதுமக்கள் பகல் நேரங்களில் கிணற்றில் குளித்து மகிழ்ந்து வெப்பத்தை தணித்து கொள்கின்றனர்.

வீடுகளில் முடக்கம்
சூரியன் காலை 6 மணிக்கு உதிக்கும்போது லேசான வெயிலாகவும், 7.30 மணி முதல் 5.30 மணி வரை கடுமையாக சுட்டெரித்து வருகிறது. தொடர்ந்து இடைவிடாத 10 மணி நேரம் வெயிலின் தாக்கம் இருப்பதால், பகல் நேரங்களில் வெளியில் தலை காட்டுவதற்கு அச்சப்படுகின்றனர். இதனால், பெரும்பாலானா பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்லாததால் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர்.

கானல் நீர்
கடுமையான வெயில் சுட்டெரிப்பதால் பகல் நேரங்களில் பயணம் செய்யும் பயணிகள், வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் மழை பொழிவை எதிர்பார்க்கும் நிலையில் அவர்களுக்கு சாலையில் தென்படுவது என்னவோ கானல் நீர் மட்டும்தான். இதனால், சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகள் வேர்வை மழையில் குளித்து வருகின்றனர்.

Related posts

டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா.!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக்கோப்பையை வென்றது இந்தியா: உலகம் முழுவதும் இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி