பள்ளியில் மாணவனுக்கு பிளேடு வெட்டு

அணைக்கட்டு: வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஊசூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பள்ளி மதிய உணவு இடைவேளையில் பள்ளி விளையாட்டு மைதானத்தில் பின்புறம் உள்ள தோப்பு பகுதியில் பிளஸ் 2 படிக்கும் இரண்டு மாணவர்கள் திடீரென மோதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு மாணவருக்கு வயிறு மற்றும் தலையின் பின்பகுதி உட்பட உடலில் சரமாரி பிளேடு வெட்டு விழுந்தது.

தொடர்ந்து மாணவன் ரத்த வெள்ளத்தில் நின்றிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அங்கு மாணவனுக்கு வயிற்றில் 5 தையல்களும், தலையின் பின்பகுதியில் 3 தையல்களும் போடப்பட்டது. தொடர்ந்து மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில் தகவல் அறிந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் சீனிவாசன் மற்றும் அரியூர் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

அதில் பிளஸ் 2 படிக்கும் பெரிய தெள்ளூர் கிராமத்தை சேர்ந்த மாணவரும், சதுப்பேரி கிராமத்தை சேர்ந்த மாணவரும் முன்விரோத தகராறில் மோதிக்கொண்டதில் ஒரு மாணவன் மறைத்து வைத்திருந்த பிளேடு எடுத்து மற்றொருவரை சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடியது தெரியவந்தது. தொடர்ந்து அரியூர் போலீசார் பிளேடால் வெட்டிய மாணவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். மேலும் கல்வி அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related posts

நிலைக்குழு தேர்தலில் கவுன்சிலர்களை இழுக்க பாஜ ரூ.2 கோடி பேரம்

சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.35 கோடி எலக்ட்ரானிக் பொருட்களை கன்டெய்னருடன் திருடிய 6 பேர் கைது: தலைமறைவான 3 பேருக்கு வலை

கூடுவாஞ்சேரி அருகே தைலாவரத்தில் பரபரப்பு மனைவி கத்தியால் குத்தி கொலை: நாடகமாடிய கணவன் கைது