பிஎம். ஸ்ரீ திட்ட பள்ளிகளில் வசதிகள் இல்லை: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: மோடி அரசின் புதிய தேசிய கல்வி கொள்கை மற்றும் பிஎம்.ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு ஏற்க மறுத்து வருகிறது. ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஏற்கெனவே ஓராண்டுக்கு முன்னர் இத் திட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளன. ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்தபடி, இந்த பள்ளிகள் முன்மாதிரி பள்ளிகளாக மாறியுள்ளதா? அருகில் உள்ள பள்ளிகளை வழி நடத்தும் அளவுக்கு மேம்பட்டுள்ளதா? என்பது குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் விசாரித்தோம்.

இதில், இந்த திட்டத்தின் கீழ் உள்ள எந்த பள்ளிகளும் முன்மாதிரி பள்ளிகளாக மாறப்படவில்லை. ஏற்கனவே இருந்த நிலையை விட மோசமாகி இருக்கிறது. சென்னை அண்ணா நகரில் உள்ள பிஎம்.ஸ்ரீ கேந்திரிய வித்யாலயா பள்ளியின் 3வது தளத்தில் கழிவறையின் கதவுகள் உடைந்து ஒன்றரை மாதங்களாக சரி செய்யப்படவில்லை. இப்பள்ளியில் அறிவியல் ஆசிரியர் இல்லாமல் 2 மாதங்கள் பாடம் நடத்தப்படவில்லை.

நாட்டின் எதிர்காலமான மாணவர்கள் மீது மோடி அரசுக்கு எவ்வித அக்கறையும் இல்லை என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் இருக்க முடியாது. எனவே இனியும் தாமதிக்காமல் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது அவரை பிரதமர் மோடி பதவி நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related posts

கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் மருத்துவ உதவி நிதியாக 8 பேருக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

தமிழகத்தில் 4 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: 23ம் தேதி கவுன்சலிங் தொடக்கம்