பள்ளி மாணவர்கள் போதைப் பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

ராமேஸ்வரம் : உலக போதைப் பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி அரசு பள்ளி மாணவ,மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி மற்றும் காவல் துறை சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக போதை பொருள் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் அனைவரும் போதைப் பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து நடந்த பேரணியை தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜ் துவங்கி வைத்தார்.

தங்கச்சிமடம் முக்கிய வீதிகளில் பதாகைகள் ஏந்தியபடி பேரணியாக சென்ற மாணவர்கள் போதைப் பொருளின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் நாகராஜன் மற்றும் பிகாரி கிளப் ஒருங்கிணைப்பாளர் ஜெரோம் ஆகியோர் செய்தனர். எஸ்.எம்.சி உறுப்பினர் முருகேசன், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாலையில் காவல்துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. தங்கச்சிமடம் காவல் ஆய்வாளர் ராஜா தலைமை ஏற்று போதைப் பொருளின் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே உறையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முன்னதாக மாணவர்களுக்கு உலக போதைப் பொருள் ஒழிப்பு தினம் குறித்த பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி, ஓவியப்போட்டிகள் பள்ளி சார்பில் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல் துறை சார்பில் எஸ்.ஐ செல்வராஜ் பரிசுகள் வழங்கினார். உதவி தலைமை ஆசிரியர் முத்து விஜயா மாணவர்களுக்கு கருத்துரை வழங்கியதை தொடர்ந்து ஆசிரியர் நாகலிங்கம் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்