வாலாஜா நகரில் சாலையில் கண்டெடுத்த ₹10 ஆயிரத்தை உரியவரிடம் ஒப்படைத்த பள்ளி மாணவன்

*நேர்மைக்கு ஆசிரியர்கள் பாராட்டு

வாலாஜா : வாலாஜாவில் பள்ளி மாணவன் சாலையில் கண்டெடுத்த ரூ.10 ஆயிரம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மாணவனின் நேர்மைக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா கெங்கனா மண்டப தெருவை சேர்ந்தவர் சாந்தி- கதிவரன் தம்பதி. இவர்களது மகன் சக்திவேல்(11). இவர் அங்குள்ள மங்களாம்பாள் நடுநிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாணவன் சக்திவேல் வாலாஜா பஜார் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் மணிபர்ஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்துள்ளது. அதனை சக்திவேல் எடுத்து பார்த்தபோது ரூ.10 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, மாணவன் சக்திவேல் அந்த மணிபர்ஸை வாலாஜா சமூக சேவகர் ரவிசங்கர் என்பவரிடம் கொடுத்துள்ளார். பின்னர், மணிபர்ஸில் இருந்த ஒரு துண்டு சீட்டில் செல்போன் எண் இருந்ததை பார்த்து தொடர்பு கொண்டனர். அதில், அதனை தவற விட்டவர் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் என்பது தெரியவந்தது. உடனே, அவரை வரவழைத்து ரூ.10 ஆயிரத்துடன் இருந்த பர்ஸ் ஒப்படைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பள்ளியில் நேற்று காலை நடந்த இறைவணக்க கூட்டத்தில் மாணவன் சக்திவேலின் நேர்மைக்கு பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், நகராட்சி கவுன்சிலர் முரளி அந்த மாணவனுக்கு சால்வை அணிவித்தும் ரூ.500 ரொக்க பரிசு வழங்கியும் பாராட்டு தெரிவித்தார்.

Related posts

கந்துவட்டி பிரச்சனை வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உயர் நீதிமன்றக்கிளை உத்தரவு

ஆலத்தூர் ஒன்றியத்தில் தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட 13 ஏக்கர் நிலம்: மரக்கன்றுகளை நட்டுவைத்து கலெக்டர் அசத்தல்

சென்னை புறநகர் பகுதிகளில் காற்றுடன் கனமழை