பள்ளியில் பிளஸ் 2 மாணவிக்கு தாலி கட்டிய சக மாணவன்: உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் சஸ்பெண்ட்

கரூர்: பிளஸ் 2 மாணவிக்கு பள்ளியில் மாணவன் தாலி கட்டி திருமணம் செய்த வீடியோ வைரலானது. இதற்கு உடந்தையாக இருந்த 3 மாணவர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூரை சேர்ந்த 17 வயது சிறுமி, அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கிறார். அதே வகுப்பில் படித்து வந்த மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவரை காதலித்ததாக தெரிகிறது. இந்த தகவல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவனுக்கு தெரிய வந்து, சிறுமியின் பெற்றோருக்கு தகவல் அளித்து கண்டித்து உள்ளார். பெற்றோரின் சமரசத்துக்கு பின்னர், அந்த சிறுமி மீண்டும் பள்ளிக்கு வந்து கொண்டு இருந்தார்.

இந்நிலையில் கடந்த மாதம் 27ம் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவியின் கழுத்தில், மாணவன் மஞ்சள் கயிறை தாலியாக கட்டி உள்ளார். பின்னர் செல்பி எடுத்து வாட்ஸ்அப்பில் பதிவு செய்ததார். திருமணம் செய்து கொண்ட படம் வைரலானது. மறுநாள் 28ம்தேதி தோகைமலை பஸ் நிலையத்தில் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர். இதை பார்த்த அதே ஊரை சேர்ந்த உறவினர்கள் மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர்.
பெற்றோர் மற்றும் உறவினர்கள் இதுபற்றி தோகைமலை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். பின்னர் போலீசார் இருவரையும் காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மாணவி, தான் காதலித்த மாணவனை திருமணம் செய்து கொண்டதாகவும், அவனுடன் செல்வதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் அந்த மாணவிக்கு பெண் காவலர்களும், மாணவனுக்கு இன்ஸ்பெக்டரும் அறிவுரை வழங்கினர். தொடர்ந்து இருவரையும் அவர்களது பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் கடந்த 29ம் தேதி இரவு 11.30 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த மாணவி திடீர் என்று மாயமாகி உள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தேடிபார்த்தும் மாணவி கிடைக்கவில்லை. இதுதொடர்பாக தோகைமலை போலீசில் புகார் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிந்து மாயமான மாணவியை தேடி வந்த நிலையில், திருச்சி தாயனூர் பகுதியில் மாணவனுடன் பதுங்கி இருந்தபோது இருவரையும் பிடித்து விசாரனை மேற்கொண்டனர். இதில் இருவரும் திருமணம் செய்தது தெரியவந்தது. இருவரும் சிறார்கள் என்பதால் உயர் அதிகாரிகளின் ஆலோசனைப்படி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், பள்ளியின் தலைமை ஆசிரியரை சந்தித்து மாணவியின் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த சக மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து உடந்தையாக இருந்த 3 மாணவர்களை நேரில் அழைத்து ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து எச்சரித்து அனுப்பியுள்ளார்.

Related posts

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்