செங்கோல் நாடகம் முடிந்தது மோடியின் பாசாங்குகளை நிராகரித்த தமிழக மக்கள்: காங்கிரஸ் கருத்து

புதுடெல்லி: ‘செங்கோல் வைத்து நாடகமாடிய மோடியின் பாசாங்குகளை தமிழ்நாட்டு மக்களும், ஒட்டுமொத்த இந்திய மக்களும் நிராகரித்துள்ளனர். இன்று ‘நரேந்திர அழிவு கூட்டணி’ தலைவராக மோடி பதவியேற்கிறார்’ என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள நாடாளுமன்றத்திற்குள் நுழைந்ததும் முதல் வேலையாக அங்கிருந்த அரசியலமைப்பு புத்தகத்தை எடுத்து நெற்றியில் வைத்து வணங்கினார்.

இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: 2023 மே 28ம் தேதி நினைவிருக்கிறதா? அன்றுதான் மோடி செங்கோலுடன் புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்தார். அப்போது, தன்னை ஒரு பேரரசராக காட்டுவதற்காக மட்டுமன்றி, தமிழ்நாட்டு மக்களை ஈர்க்கவும், 1947 ஆகஸ்ட் 15ம் தேதி வரலாறு திரிக்கப்பட்டது. அந்த நாடகத்தின் முடிவை இப்போது எல்லாரும் அறிவார்கள். செங்கோல் தமிழர்கள் வரலாற்றில் மரியாதைக்குரிய அடையாளமாகும்.

ஆனால், அதை வைத்து நாடாகமாடிய மோடியின் பாசாங்குகளை தமிழ்நாட்டு மக்களும், உண்மையில் இந்திய வாக்காளர்களும் நிராகரித்துள்ளனர். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், தனிப்பட்ட, அரசியல் மற்றும் தார்மீக ரீதியாக மோடி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளார். இதனால், கடந்த 10 ஆண்டுகளாக அவர் தகர்தெறிந்த அரசியலமைப்பிற்கு தலைவணங்க வேண்டிய கட்டயாத்தில் மோடி தள்ளப்பட்டுள்ளார். மிகப்பெரிய அளவில் சுருங்கிவிட்ட ‘மூன்றில் ஒரு பங்கு’ பிரதமராகிய மோடி, எந்த சட்டப்பூர்வ அதிகாரமும் இல்லாமல், ‘நரேந்திர அழிவு கூட்டணி’ (என்டிஏ) தலைவராக இன்று (நேற்று) மாலை பதவியேற்கிறார். இவ்வாறு கூறினார்.

* போலித்தனம்
பிரதமராக பதவியேற்கும் முன்பாக மோடி நேற்று காலை ராஜ்கட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்றது குறித்து ஜெய்ராம் ரமேஷ் தனது மற்றொரு பதிவில், ‘‘காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ஹீரோவாக புகழும் தனது சகாக்களை ஒருபோதும் கண்டிக்காத மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா சிலையை ஒருமுறை அல்ல 2 முறை இடமாற்றம் செய்த மோடி, 1982ல் காந்தி திரைப்படம் வந்தபிறகுதான் அவரைப்பற்றி உலகம் அறிந்தது என்று கூறிய மோடி, வாரணாசி, அகமதாபாத் மற்றும் பிற இடங்களில் உள்ள காந்திய நிறுவனங்களை இடித்து அழித்த மோடியின், வியப்பூட்டும் போலித்தனம் இது’’ என கூறி உள்ளார்.

Related posts

டி20 உலக கோப்பை வென்ற இந்திய அணிக்கு ரூ.125 கோடி பரிசுத் தொகையை அறிவித்தார் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா!

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே நீர்வீழ்ச்சியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலி: 3 பேர் மாயம்

18 மணி நேரம் காத்திருந்து திருப்பதியில் பக்தர்கள் தரிசனம்