ஆன்லைன் மூலம் வேலை தேடியவரிடம் சிங்கப்பூர் நிறுவனத்தில் பணி என ரூ.42.40 லட்சம் மோசடி: பட்டதாரி புகாரில் மோசடி நபர் கைது

சென்னை: ஆன்லைன் மூலம் வேலை தேடியவரிடம் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்தில் மேலாளர் பணி வாங்கி தருவதாக ரூ.42.40 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு போலி பணிநியமன ஆணை வழங்கி மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கோவிலம்பாக்கம் நன்மங்கலம் பகுதியை சேர்ந்த சந்திரராஜ்(59) என்பவர் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது மகன் விக்னேஷ் ஆன்லைன் வேலைவாப்பு நிறுவனம் மூலம் வெளிநாடுகளில் வேலை தேடி வந்தார். அப்போது, எனது மகனின் கல்வி சான்றிதழ்களை பார்த்துவிட்டு பாலமுருகன் என்பவர் தொடர்பு கொண்டார்.

அப்போது சிங்கப்பூரில் பிரபல நிறுவனத்தில் மேலாளர் பணி உள்ளது என்றும், அந்த நிறுவனத்தில் எனக்கு தெரிந்த சுகன்யா என்பவர் நிர்வாக பிரிவில் வேலை செய்து வருகிறார். அவர் மூலம் நான் வேலைக்கு செல்ல இருக்கிறேன். என்னுடன் 5 பேர் வேலைக்கு ஆட்கள் கேட்கிறார்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்னுடன் வேலைக்கு வாருங்கள் என்று கூறினார். அதை நம்பி நான் எனது மகனின் வேலைக்கு என பல தவணைகளில் பாலமுருகன் வங்கி கணக்கு மூலமாக ரூ.42.40 லட்சம் பணத்தை வழங்கினேன். பிறகு சிங்கப்பூர் நிறுவனத்தின் பெயரில் பணிநியமன ஆணை வழங்கினார். அதன்படி பாலமுருகன் அளித்த பணி நியமன ஆணை போலியானது என தெரியவந்தது. எனவே, எங்களை ஏமாற்றி பறித்த ரூ.42.40 லட்சம் பணத்தை திரும்ப பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

அந்த புகாரின் படி, மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரெஜினா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். அதில், போரூர் கே.கே.ஆர்.கார்டன் பகுதியை சேர்ந்த பாலமுருகன்(31) என்பவர் சிங்கப்பூரில் உள்ள பிரபல நிறுவனத்தின் பெயரில் பலரிடம் மேலாளர் பணி என கூறி போலியான பணி நியமன ஆணைகள் வழங்கி பல கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. மேலும், பாலமுருகன் மீது கோவை மற்றும் அருப்புக்கோட்டையில் இரண்டு வழக்குகள் பதிவாகி, அந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளார். அதைதொடர்ந்து பாலமுருகனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு