எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரம்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக ‘பந்த்’: வடமாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பாட்னா: எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக வடமாநிலங்களில் நடந்த முழு அடைப்பு போராட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) இடஒதுக்கீட்டில் சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்களுக்கான விலக்கு அளிக்கும் நடைமுறை (கிரீமி லேயர்) தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதையடுத்து சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும், அந்த இட ஒதுக்கீட்டில், சமூக பொருளாதார ரீதியில் மேம்பட்டவர்கள் பலன் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்கும் நடைமுறை எதுவும் கொண்டுவரப்படாது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக இன்று நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் போன்ற கட்சிகளும் முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் அமைப்புகள் நடந்தும் இந்த முழு அடைப்பு போராட்டத்தால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ராஜஸ்தானில் 13 மாவட்டங்களில் கடையடைப்பு, போக்குவரத்து நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.

பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ஜார்கண்ட் போன்ற மாநிலங்களின் சில மாவட்டங்களில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்களும், கட்சியினரும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். ஆங்காங்கே வன்முறை சம்பவங்களும் நடந்தன. ரயில் மறியல் போராட்டம் சில இடங்களில் நடைபெற்றதால் அங்கு போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

Related posts

கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் புதிய மழைநீர் வடிகால் பணிகளை ஆய்வு செய்தார் மேயர் பிரியா

கிருஷ்ணகிரி பாலியல் தொல்லை விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு மனநல ஆலோசனை: ஐகோர்ட் பாராட்டு

14ம் தேதி யெச்சூரி உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு..!!