எஸ்பிஐ விற்றது ரூ.12,156 கோடி கட்சிகள் பணமாக்கியது ரூ.12,769 கோடி: ரூ.613 கோடிக்கான தேர்தல் பத்திரங்களுக்கு கணக்கு எங்கே? எதிர்க்கட்சிகள் கேள்வி

புதுடெல்லி: தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் எஸ்பிஐயால் விற்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் மொத்தம் ரூ.12,156 கோடி, ஆனால், அரசியல் கட்சிகள் பணமாக்கியதோ ரூ.12,769 கோடி. அரசியல் கட்சிகள் கூடுதலாக பணமாக்கி உள்ள ரூ.613 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் எங்கிருந்து வந்தது என்ற கேள்வியை அரசியல் கட்சிகள் எழுப்பியுள்ளன. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதற்காக தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை ஒன்றிய பாஜ அரசு கடந்த 2018ம் ஆண்டு அமல்படுத்தியது. இந்த திட்டம் மூலம் மிகப்பெரிய ஊழல் நடப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்த நிலையில், தேர்தல் பத்திரம் திட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து கடந்த மாதம் 16ம் தேதி தீர்ப்பளித்தது. அதோடு, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்ட அனைத்து நன்கொடை விவரங்களை வெளியிடவும் எஸ்பிஐ வங்கிக்கு உத்தரவிட்டது. ஆனால், தேர்தல் பத்திரங்களை வாங்கிய நபர்கள், அதை பணமாக்கிய கட்சிகள் என தனித்தனியாக தகவல்களை பராமரிப்பதால் அவற்றை தொகுத்து வழங்க 4 மாத கூடுதல் அவகாசம் வேண்டுமென எஸ்பிஐ தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மார்ச் 12ம் தேதிக்குள் தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் வழங்க எஸ்பிஐக்கு உத்தரவிட்டது.

அதன்படி, மார்ச் 12ம் தேதி மாலை தேர்தல் பத்திர விவரங்களை எஸ்பிஐ தேர்தல் ஆணையத்திடம் வழங்கியது. அவை அனைத்தும் கடந்த 14ம் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. அதே சமயம், எஸ்பிஐ வெளியிட்ட தகவலில் தேர்தல் பத்திரங்களின் எண்கள் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற வில்லை. இதையடுத்து அந்த விவரங்களையும் வெளியிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி கடந்த 21ம் தேதி தேர்தல் பத்திரங்கள் பற்றி எஸ்பிஐ வங்கி வெளியிட்ட முழுவிவரத்தையும் தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் வெளியிட்டது. அந்த தகவல்கள் மூலம், தேர்தல் பத்திரங்கள் வாயிலாக ஆளும் பாஜ கட்சி சுமார் ரூ.8,250 கோடி வரை நன்கொடை பெற்றிருப்பது தெரியவந்தது. அதுமட்டுமின்றி, பல நிறுவனங்களை பாஜ கட்சி அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ ரெய்டு மூலம் மிரட்டி தேர்தல் நன்கொடை வசூலிப்பதிருப்பதும் ஆதாரப்பூர்வமாக வெளியானது. பாஜவுக்கு நன்கொடை தந்த நிறுவனங்கள், ரெய்டை தொடர்ந்து அடுத்த சில வார, மாத இடைவெளியில் தேர்தல் பத்திரங்களை வாங்கியிருப்பது அம்பலமானது.

இந்நிலையில், எஸ்பிஐ வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் கடந்த 2019 ஏப்ரல் 12ம் தேதி முதல் திட்டம் ரத்து செய்யப்பட்ட தேதியான கடந்த பிப்ரவரி 16 வரை மொத்தம் ரூ.12,156 கோடி மதிப்பிலான 18,871 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தால் 1,316 நிறுவனங்கள் அல்லது தனிநபருக்கு விற்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 24 அரசியல் கட்சிகள் மொத்தம் 20,421 தேர்தல் பத்திரங்களை இந்த காலகட்டத்தில் வங்கியில் டெபாசிட் செய்து ரூ.12,769 கோடியை பணமாக்கி உள்ளன. அதாவது எஸ்பிஐ வங்கி விற்ற தேர்தல் பத்திரங்களை விட ரூ.613 கோடி அதிக மதிப்புள்ள பத்திரங்களை அரசியல் கட்சிகள் தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்துள்ளன. மொத்தம் 1,550 தேர்தல் பத்திரங்களை அரசியல் கட்சிகள் கூடுதலாக டெபாசிட் செய்திருக்கின்றன. இந்த தேர்தல் பத்திரங்கள் எங்கிருந்து வந்தன. அதை வாங்கிய நிறுவனங்கள் யார் என்ற விவரம் எஸ்பிஐயால் வெளியிடப்படவில்லை. கணக்கில் வராத தேர்தல் பத்திரங்கள் மூலம் பாஜ அதிகபட்சமாக ரூ.466 கோடி பெற்றுள்ளன. இந்த தேர்தல் பத்திரங்களை யார் வாங்கினார்கள் என்ற கணக்கு எங்கே? என்று அரசியல் கட்சித் தலைவர்கள் சமூக இணையதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Related posts

தேனியில் இளைஞர் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

நாட்டிலேயே அதிகம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் தமிழ்நாடு முதலிடம்: ஒன்றிய அரசு தகவல்

குஜராத்தின் மலேஸ்ரீ ஆற்றில் ஏற்பட்ட திடிர் வெள்ளத்தில் சிக்கிய 26 தமிழர்கள் மீட்பு