தாமரை தலையை தவிக்க விடும் கட்சிக்காரர்களை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

“மலையை தவிக்கவிட்ட தாமரை கட்சியினர் பற்றி சொல்லுங்களேன்’’ என்று ஆரம்பித்தார் பீட்டர் மாமா. “கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மலை, அடிக்கடி ஏதாவது ஒரு வம்பில் சிக்கிக்கொள்கிறார். வேட்புமனு தாக்கல் செய்த நாளில் இருந்து இன்றுவரை இவருக்கு, ஒவ்வொரு நாளும், ராசி இல்லாத நாளாகவே அமைகிறது. கோவையில் உள்ள தாமரை கட்சி நிர்வாகிகளிடம், அவரு பேசுகையில், “நான், இத்தொகுதியில் அதிகபட்சம் 7 அல்லது 9 நாள் மட்டுமே பிரசாரம் செய்வேன்..

மீதி நாட்களில், மாநில தலைவர் என்கிற முறையில் பிற தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குசேகரிக்க செல்லவேண்டும். அதனால், தொகுதியை நீங்கள்தான் பார்த்துக்கணும்’’ எனக்கூறியுள்ளார். ஆனா, இவரது அறிவுரையை கேட்க, தாமரைக்கட்சி நிர்வாகிகள் யாரும் தயாரா இல்லை. பல மூத்த நிர்வாகிகள் சுத்தமாக ஒதுங்கியே நிற்கின்றனர். களத்தில் உள்ள ஒரு சிலரும், ஐயா… எப்போ காசு தருவார்…? என எதிர்பார்த்து நிற்கின்றனர்.

மலை வெளியூர் சென்றால், இங்குள்ள தாமரைக்கட்சியினர் அவரவர் இல்லங்களிலும், அந்தந்த தேர்தல் ஆபீசுகளிலும் முடங்கி விடுகின்றனர். ஆதரவாக பிரசாரம் செய்ய, அக்கட்சியை சேர்ந்த ஒரே ஒரு பெண் எம்எல்ஏ மட்டும் உள்ளார். அவரும் பெரிதாக சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை. அதனால், மலை, “என்னடா… இங்கு வந்து சிக்கி விட்டோமே…?’’ என்ற தவிப்பில் உள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா. “வெற்றிக்காக ஓடோடி உழைக்கும் நடுநிலை நாயகரின் மகள்…’’ என்று இழுத்தார் பீட்டர் மாமா.

“தேர்தல் காலங்களில் புதுச்சேரியில் புதுப்புது விதமான அரசியல் நிகழ்வுகளை காண முடியும். அந்த வகையில் தற்போது பாஜ சார்பில் களத்தில் உள்ள சிவாயமானவரை எப்படியாவது வெற்றிபெற செய்துவிட வேண்டுமென்பதில் சில தொகுதிகளில் மலர் கட்சியினர் கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கின்றனர். சிவாயமானவர் வென்றால் அவர் வகித்து வரும் அமைச்சர் பதவியை எப்படியாவது கட்சி மேலிடத்தில் பேசி சிபாரிசு பிடித்து பெற்று விடலாம் என்ற மனக்கணக்கில் பாஜவில் சில எம்எல்ஏக்கள் வீதிகளில் வாக்கு சேகரிக்க உலா வருகின்றனர்.

அந்த வரிசையில் நடுநிலை நாயகராக உள்ள செல்வமானவரின் இளைய மகளான மருத்துவம் படித்தவர் தற்போது கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தனது தந்தையின் தொகுதியில் தீவிர தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். தந்தைக்கு உடல்நிலை பாதிப்பு ஒருபுறம் இருப்பினும், கூட்டணி ஆட்சியமைந்தபோதே அமைச்சர் பதவிக்காக மல்லுக்கட்டினார். தற்போது ஒரே கல்லில் 2 மாங்காய் அடிக்கும் விதமாக அப்பதவியை தனது தந்தைக்கு சாதகமாக்கும் வெற்றி முனைப்போடு மட்டுமின்றி தனது எதிர்கால அரசியல் திட்டத்தையும் முன்னிறுத்தி இரவு பகலாக ஓடோடி மகள் உழைத்து வருவதாகத்தான் கட்சிக்காரர்கள் பேசி வருகின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

“பாதி கோணம் தொகுதியில பழம் கட்சி வெயிலுக்கு வதங்கிபோன மாதிரி ஆகிடுச்சாமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. “நாடாளும் மன்றம் பாதி கோணம் தொகுதியில, மலர்கட்சியோட கூட்டு சேர்ந்த பழம் கட்சியில, சட்டம் தெரிஞ்ச ஒருத்தரை களத்துல இறக்கிவிட்டிருக்காங்க. இவருக்கு மலர் பார்ட்டிக்காரங்க, எந்த ஒத்துழைப்புமே தருவதில்லையாம். ஏற்கனவே, விரும்பிய பார்ட்டிகளோட கூட்டு சேராததால, பழம் கட்சி தலைமை மேல கோபத்துல இருக்காங்களாம் தொண்டருங்க.

அந்த கோபத்தைத்தான் இந்த தேர்தல் பணியில காட்டுறாங்களாம். அதையும் தாண்டி கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்கணும்னு போனாங்களாம். ஆனா, கரன்சியை இறக்குவதில் கறார் காட்டுகிறாராம் வேட்பாளர். பூத்துக்கு வெறும் 5கே மட்டும் காட்டுறாராம். இத வெச்சு என்ன செய்றதுன்னு, கட்சி நிர்வாகிங்க அக்னியை கக்குறாங்களாம். ஸ்டேட்ல பிரதான கட்சிகளைச் சேர்ந்த மற்ற வேட்பாளருங்க தீவிர வாக்கு சேகரிப்புல ஈடுபட்டு வர்ற நேரத்துல, பழம் கட்சி வெயிலுக்கு வதங்கிப்போன நிலைமையாகிடுச்சாம்.

மலர் பார்ட்டிகள் ஒத்துழைப்பு இல்லை என்று, வேட்பாளர் ஒருபக்கம் புலம்ப, பூத் செலவுக்கு 5கே போதுமான்னு தொண்டர்கள் புலம்ப, பாதி கோணம் தொகுதியில மொத்தத்துல பழம் கட்சி புலம்பலாவே இருக்குதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பிரசாரத்துக்கு யாராவது வரமாட்டார்களா என ஏங்கித் தவித்துக் கிடக்கிறார்களாமே இலைக்கட்சி வேட்பாளர்கள்..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. இலைக்கட்சியில் மம்மி இருந்தபோது அனைத்து தொகுதிகளுக்கும் பிரசாரம் செய்து வேட்பாளர்களை ஆதரித்து பேசுவார்.

ஆனால் தற்போது இலைக்கட்சியின் நிலைமையோ பரிதாபமாக உள்ளது. தேர்தலில் கூட்டணி அமையாத நிலையில் சீட்டை எதிர்பார்த்து இருந்த கட்சியின் முன்னணி நிர்வாகிகள் பலரும் நழுவி விட்டனர். புதிய முகங்கள், பசை உள்ளவர்களை தேடிப்பிடித்து வேட்பாளர்களை நிறுத்தினார் சேலம்காரர். ஆனால் தற்போது வேட்பாளர்கள் மட்டுமே ஊர் சுற்றி ஓட்டு கேட்டு வருகின்றனர்.

கூட்டணி அமையாத நிலையில் சேலம்காரர் மட்டுமே தென் மாவட்டங்களில் இலைக்கட்சியினரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இதனால் நட்டாற்றில் நிற்கும் இலைக்கட்சி வேட்பாளர்கள், யாரும் பிரசாரத்துக்கு வருவார்களா? கூட்டணி கட்சி தலைவர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் இல்லாத நிலையில் இறுதிக்கட்ட பிரசாரத்தை எப்படி சமாளிக்க போகிறோம் என கலங்கி நிற்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா.

Related posts

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது தாமதமாவதை ஒப்புக்கொள்கிறோம்: அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம்

சுருளி அருவியில் குளிக்க 4 ஆவது நாளாக தடை..!!

திண்டுக்கல்லில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் கொள்ளை: போலீஸ் விசாரணை