NO சொல்லப் பழகுங்கள்!

எல்லாம் நன்மைக்கே, எதுவாயினும் நல்லதே நினைப்போம்… இதெல்லாம் அக்காலத்தில் இருந்தே சொல்லப்பட்டு வரும் பழமொழிகள். ஆனால் நடைமுறையில், தினம் தினம் வாழ்க்கையில் நாம் இதை கடைபிடிக்கிறோமா என்றால் இல்லை. இந்த மனநிலையை மனிதர்களுக்குள் அதிகரிப்பதைத்தான் தனது குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறார் கைண்ட்னெஸ் பவுண்டேஷன் நிர்வாகி மஹிமா பொத்தர். ‘நான் ஒரு கட்டடக்கலை நிபுணர், அமெரிக்காவில் இருந்த வேளையில் டிசைனிங், ஃபேஷன், இப்படி என்னுடைய கெரியரை மாற்றிக் கொண்டேன். இந்தியாவில் செட்டிலான வேளையில்தான் ஆர்ட் தெரபி, மற்றும் மனநல ஆலோசனைக்கான பயிற்சியும் எடுத்துக்கொண்டேன். அப்போது தோன்றிய முயற்சிதான் இந்த ‘கைண்டென்ஸ் பவுண்டேஷன்‘. நம்மை சுற்றியிருக்கும் மக்களிடம் நிறைய பரபரப்பும், வன்மமும் , அதிகரித்துக்கொண்டே செல்கிறது. காரணம் வாழ்க்கை முறை, பார்க்கும் படங்கள் உண்டாகும் தாக்கங்கள், சமூக வலைத்ளங்கள் என அனைத்தும் நம் வாழ்வியலை அவசரமாக்கி, அதையே கடுமையாக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இளைஞர்களிடம் தினம் தினம் செய்கிற எப்போதுமான செயல்பாடுகளில் கூட இந்த பரபரப்பும், கோபமும் இருக்கறதைப் பார்க்க முடிகிறது.

இந்த கடுமையான மனநிலையை குறைப்பதற்கான பயிற்சிகளும், சந்திப்புகளும்தான் கைண்டென்ஸ் பவுண்டேஷன் ஏராளமான நடவடிக்கைகள் மூலமா செய்கிறோம். அதாவது இயற்கையான சுழல்களில் நேரம் செலவிடுதல், யோகா, விளையாட்டுகள், எதையும் பொறுமையாக , சிரித்த முகத்துடன் எதிர்கொள்ளும் பயிற்சிகள், விலங்குகள், பறவைகள் மூலம் தெரபிகள் என இருக்கும் குணநலன்களில் இன்னும் நல்ல எண்ணங்களையும், நன்மை தரும் நடவடிக்கைகளையும் புகுத்தும் பயிற்சிகள்தான் எங்களுடைய கைண்ட்னெஸ் குழு செய்கிறது. நீங்களே இந்த பயிற்சிகளை உங்களுக்குக் கொடுக்கலாம். குடும்பத்தாருடன் எதையும் இணக்கமாக சொல்வது, அவர்களுடன் இனிமையான நேரம் செலவிடுவது. அது நடந்தாலும் நம் குடும்பம், நம் நண்பர்கள் என நினைத்தாலே எப்படியான கோபமும், வன்மமும் தணிந்து விடும்‘ யாருக்கெல்லாம் பயிற்சிகள் கொடுக்கிறீர்கள். ‘நிறைய பள்ளிகளில் சென்று பயிற்சிகள் கொடுக்கிறோம். குழந்தைகளில் இருந்தே இந்த நல்ல எண்ணங்களையும், எதையும் நேர்மறையாக பார்க்கும் முறைகளையும் கற்றுக்கொடுக்கிறோம். அடுத்து வயதான மக்கள் இவர்களுக்கும் இந்தப் பயிற்சி தேவை. காரணம் வயது மூப்பு, உடல் நலப் பிரச்னைகள் காரணமாக அவர்களிடம் உள்ளார்ந்த ஒரு கடுமையும், வெறுப்பும் உருவாகும். வீட்டில் இருப்போரிடம் கூட எரிந்து விழும் சில வயதானவர்களைக் காணலாம். இதையெல்லாம் கூட சரி செய்வதுதான் எங்களுடைய குறிக்கோள்‘ பெண்களுக்கு எவ்விதமான கைண்ட்னெஸ் தேவை மேலும் தொடர்ந்தார் மஹிமா.

‘நோ… இந்த வார்த்தையை சொல்ல யோசிக்கவே வேண்டாம். வீட்டில், வேலையில் என எங்கும் நோ சொல்லப் பழகிக் கொள்ளுங்கள். நீங்கள் கேட்கலாம் ‘நல்லதே நினையுங்கள்‘ எனக் கூறிவிட்டு ‘நோ‘ சொல்லச் சொல்கிறீர்களே என்று. பல பெண்கள் தனக்கு பிடிக்காத செயல்களை, விஷயங்களுக்கு நோ எனச் சொல்ல தயங்குகிறார்கள். இந்த நோ உங்கள் நன்மைக்கான பாசிட்டிவ் வார்த்தை. பிடிக்காத ஒன்றை ஏற்றுக்கொள்வதை விட தைரியமாக நோ சொல்வதும் ஒரு பாசிட்டிவ் நடவடிக்கைதான். ஒருவேளை உங்களின் கணவர், கணவர் வீட்டார், வேலை செய்யும் இடம், உயரதிகாரிகள் இங்கே நோ சொல்ல முடியவில்லை எனில் அதை எப்படி இன்முகத்துடன் சொன்னால் ஏற்றுக்கொள்வார்களோ அப்படிச் சொல்லலாம் அல்லது நாளை செய்கிறேன், எனக்கு இதில் உடன்பாடில்லை, எனக்கு இந்தப் பழக்கம் இல்லை இப்படியான வார்த்தைகள் மூலம் உங்களுக்கு இதில் விருப்பமில்லை என்பதைத் தெரியப்படுத்துவது உங்களுக்கு நன்மை தரும்’. எதிலும் எதையும் இன்முகத்துடன், அல்லது மென்மையாக அணுகுவதால் நாம் எதுவும் இழக்கப் போவதில்லை. கோபமும், கடுமையும், வன்மமும் நமக்கு என்ன பிரதிபலன் கொடுக்கப் போகிறது. எனவே எதிலும் ‘ Be Kind’.இன்முகத்துடன் சொல்கிறார் மஹிமா.
– ஷாலினி நியூட்டன்

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்