மின்சாரம் கொள்முதல் ரூ.1313 கோடி சேமிப்பு: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

கோவை: மின்சாரம் கொள்முதலில் 3 மாதத்தில் மட்டும் ரூ.1313 கோடி சேமிக்கப்பட்டுள்ளது. கோவை விமான நிலையத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அளித்த பேட்டி: தற்போது, பாஜவின் உறுப்பினர் எண்ணிக்கை என்ன? ஆனால், நாங்கள் தைரியமாக சொல்வோம் எங்களது உறுப்பினர்கள் ஒரு கோடி பேர் என்று. கூடுதலாக ஒரு கோடி பேரை கட்சியில் இணைக்க எங்கள் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளை 234 தொகுதிகளிலும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். பாஜவில் எவ்வளவு உறுப்பினர்கள் என்று அவர் சொல்ல வேண்டும். சமூக வலைதளங்களில் ஒரு செய்தியை வெளியிடுவதற்கு முன்பு அது சரியா?, தவறா? என ஆராய்ந்து அந்த செய்திகளை வெளியிட்டால் ஏற்புடையதாக இருக்கும்.

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி என்ற வித்தியாசம் பார்க்காமல் 234 தொகுதிகளுக்கும் ஒரே மாதிரியான வளர்ச்சி திட்டங்களை முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார். எனவே, அரசுக்கு எதிராக களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு கருத்துக்களை வெளியிடுபவர்கள் யாராக இருந்தாலும் நீதிமன்றம் மூலம் வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் உச்சபட்ச மின் தேவை என்பது வரலாறு காணாத அளவிற்கு 19 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. இருப்பினும், தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களிலேயே அதற்கான டெண்டர் கோரப்பட்டு இறுதி செய்யப்பட்டதால் குறைந்த விலைப்புள்ளியில், அவசர தேவைக்கு ரூ.8க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த டெண்டர் மூலம் தமிழ்நாடு அரசு இந்த மூன்று மாதத்தில் மட்டும் ரூ.1313 கோடி சேமித்துள்ளது. அதற்கு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை. தேவையான மின்சாரம் டெண்டர் மூலமாக பெறப்பட்டு வருகிறது. சிலர் சமூக வலைதளங்கள் மூலமாக மின் பற்றாக்குறை குறித்து அவதூறு கருத்துக்களை ஆதாரமில்லாமல் பரப்பி வருகின்றனர். எனவே, மின் சேவையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் மின்னகத்தை 94987 – 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அசாமில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை சந்தித்தார் ராகுல் காந்தி

அதிமுகவை அழிவுப்பாதைக்கு அழைத்துச் செல்லும் பொய்மையின் மொத்த உருவம் எடப்பாடி பழனிசாமி: ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

கன்னியாகுமரியில் கடல்நீர் உள்வாங்கியது: விவேகானந்தர் மண்டபத்துக்கு செல்லும் படகு சேவை நிறுத்தம்