மகளின் திருமணத்திற்கு சேமித்த 21 சவரன் நகைகள் திருட்டு: போலீசார் விசாரணை

திருவள்ளூர்: கடம்பத்தூர் ஒன்றியம், பன்னூர் கிராமத்தில் வசிப்பவர் லூர்துசாமி (56). இவரது மனைவி அன்னம்மாள் (47). ஒரு மகள் உள்ளார். இந்நிலையில், மகளின் திருமணத்திற்காக சிறுக சிறுக ஆரம், நெக்லஸ், வளையல், செயின், மோதிரங்கள் என மொத்தம் 21 சவரன் நகைகளை சேமித்து வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 9ம் தேதி அன்று அன்னம்மாள், மகளின் படிப்பு செலவுக்காக நகையை எடுத்து அடகு வைக்க முடிவு செய்துள்ளார். அதன்படி, பீரோவுக்கு அடியில் வைத்திருந்த பெட்டியை எடுத்து பார்த்துள்ளார்.

ஆனால், அந்த பெட்டியில் நகைகள் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். எங்கு தேடியும் நகைகள் கிடைக்கவில்லை. எனவே, மாயமான நகைகளை கண்டுபிடித்து தருமாறு மப்பேடு போலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். போலீசார் விசாரணையில், லூர்துசாமி உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருவதும், அன்னம்மாள் மப்பேடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

கடந்த 10 தினங்களுக்கு முன்பு, அன்னம்மாள் நகைகளை எடுத்து அடுக்கி வைத்துள்ளார். அதன்பிறகே அவை மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதில், வீட்டில் வைத்திருக்கும் நகைகள் குறித்து நன்கு தெரிந்தவர்கள்தான் லூர்துசாமி தூங்கிக் கொண்டிருந்தபோது, திருடி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மணிப்பூரில் தொடரும் வன்முறையை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது: பிரதமர் மோடி உரை

விளையாட்டு வீரர்களுக்கு அரசுப் பணி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை

ஆட்குறைப்பில் இறங்கிய பிரபல ‘அனகாடமி’ கல்வி தொழில்நுட்ப நிறுவனம்: 250 ஊழியர்களை திடீரென பணி நீக்கம்