சவுதியின் டேஸ்ட்டி உணவுகள்!

இஸ்லாமியர்களின் புனித நகரங்களான மெக்கா, மதினா அமைந்துள்ள அழகிய நாடு சவூதி. உலகில் உள்ள அனைத்து நாட்டுக்காரர்களும் சென்று பார்க்க வேண்டும் என விரும்பும் நாடான இந்த சவூதி நீண்ட நெடிய பாரம்பரியம் கொண்டது. எண்ணெய் வளம் மிகுந்திருக்கும் இந்த நாடு பொருளாதாரத்தில் வெகுவாக முன்னேறி உலக நாடுகளில் முக்கியத்துவம் கொண்டு விளங்குகிறது. இதனால் புனிதப்பயணம் மட்டுமின்றி சுற்றுலாவாக இங்கு செல்பவர்களும் அதிகம். இங்கு கிடைக்கும் பிரத்யேகமான சில உணவுகள் உலகளவில் கவனம் பெற்றவை.

கப்சா

சவூதியின் தேசிய உணவு என்ற முக்கியத்துவத்தைப் பெற்ற உணவு கப்சா. இதனால் சவூதி மக்களால் மிகவும் விரும்பி உண்ணப்படும் உணவாக கப்சா விளங்குகிறது. கப்சா என்பது கோழி அல்லது மீன் குழம்பில் தயாரிக்கப்படும் ஒரு அரிசி உணவு. பிரியாணியைப் போலவே கப்சா நீண்ட தானிய அரிசியைக் கொண்டு சமைக்கப்படுகிறது. இந்த உணவை கோழி மற்றும் மீனுடன் சமைப்பதுதான் வழக்கம். ஒட்டக இறைச்சி அல்லது கடல் உணவுகளுடன் கூட கப்சாவை சமைத்து ருசிக்கிறார்கள். நம்ம ஊர் ஸ்பெஷலான இட்லி, தோசைகளில் நாம் இப்போது பல வெரைட்டிகளைச் செய்து பார்க்கிறோம் அல்லவா! அதேபோல சவூதிக்காரர்கள் கப்சாவையும் பல வெரைட்டிகளில் செய்து அசத்துகிறார்கள். எந்தப் பொருளுடன் கப்சாவைச் சமைத்தாலும் அதன் சுவை வேற லெவல். இதனால்தான் இது சவூதியின் தேசிய உணவாக உயர்ந்திருக்கிறது.

மண்டி

இது சவூதியின் ஒரு பாரம்பரிய உணவு. அரிசி மற்றும் கோழி இறைச்சி கொண்டு மண்டி தயாரிக்கப்படுகிறது. அதில் அதிக அளவு மசாலாப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. மண்டி தந்தூரியின் மேல் சமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

லப்பன்

லப்பன் என்பது சவூதியின் ஒரு சுவையான பானம். சவூதியில் கார சாரமான உணவுகளே அதிகமாக உண்ணப்படுகின்றன. அதற்கு பினிஷிங் டச் தருவது லப்பன்தான். பிரியாணி உள்ளிட்ட கார சாரமான உணவுகளைச் சாப்பிடும்போது கோலி கோடா சாப்பிட்டு பினிஷிங் டச் கொடுப்பதைப் போல சவூதியில் லப்பன் விளங்குகிறது. தயிரைப் போல இனிப்பு மற்றும் கசப்பான சுவையைக் கொண்டிருப்பதால் இது ஒரு புதிய பானமாகவும் இருக்கும். இது பல உணவுகளுக்கு சமையல் மூலப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக ஆட்டு இறைச்சி, வெள்ளரி, பார்லி உள்ளிட்டவற்றை சமைக்கும்போது பயன்படுத்தப்படுகிறது.

முடபக்

உப்பு, மிளகு கலக்கப்பட்ட ஒரு சுவைதான் முடபக். இந்த பஃப் வகை உணவானது துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி, காய்கறிகள் மற்றும் வெங்காயம் ஆகியவற்றைக் கொண்டு நிரப்பப்பட்டு இருக்கும். இதை உணவகங்களில் சூடாகவும், சுவையாகவும் பரிமாறுகிறார்கள்.

ஜரீஷ்

ஜரீஷ் என்பது சவூதியின் மற்றொரு பிரபலமான உணவு. உடைத்து தூளாக்கப்பட்ட கோதுமை, அரிசி மற்றும் இறைச்சி ஆகியவற்றில் இருந்து ஜரீஷ் தயாரிக்கப்படுகிறது. இது ஒரு கஞ்சி போன்ற நிலைத்தன்மையைக் கொண்டுள்ளது. இதை ரொட்டியுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.ஊட்டச்சத்து மிகுந்த இந்த உணவு சவூதி மக்களின் ஆரோக்கிய உணவாக விளங்குகிறது. சவூதியில், ஏலக்காய் உள்ளிட்ட நறுமணப் பொருட்களாலும் இது அலங்கரித்து வினியோகம் செய்யப்படும். சவூதி மக்கள் கூடிக் கொண்டாடும் பண்டிகை சமயங்களில் ஜரீஷ்க்கு ஏகப்பட்ட மரியாதை.

மார்கூக்

சவூதியின் பாரம்பரிய உணவுகளில் மார்கூக்குக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ரொட்டி போன்ற தோற்றம் கொண்ட இந்த உணவு சுமார் 2 அடி விட்டம் கொண்டது. இதில் இறைச்சி மற்றும் காய்கறிகளை நிரப்பி ரோலாகவும் சாப்பிடலாம். சவூதியின் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகவும் மார்கூக் கருதப்படுகிறது.

ஷகவ்கா

சவூதியில் காலை உணவாக சாப்பிடப்படும் உணவு வகைகளில் ஷகவ்காவுக்குத்தான் முதலிடம். முட்டை, தக்காளி, கெய்ன் மிளகு உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த உணவு வீட்டு உணவாகவும், ஓட்டல் உணவாகவும் விரும்பி உண்ணப்படுகிறது. ஓட்டல்களில் இதன் சுவையைக் கூட்ட வினிகரை ஒரு துளி சேர்த்து பரிமாறுகிறார்கள். அதை சிலர் விரும்பவும் செய்கிறார்கள்.

தரித்

சவூதியின் புனிதமான உணவுகளைப் பட்டியல் இட்டால் தரித் தான் முதல் இடத்தில் வரும். முஹம்மது நபியின் விருப்பமான உணவு தரித் என்று ஒரு பிரபலமான நம்பிக்கை சவூதி மக்களிடம் இருக்கிறது. அங்கு ஏன் இந்த உணவு புனிதமாக கருதப்படுகிறது என்பதற்கு இதுதான் முக்கிய காரணம். ரம்ஜானில் பெரும்பாலும் இது மாலை உணவாக சாப்பிடப்படுகிறது. இதற்கும் முஹம்மது நபி இந்த உணவை விரும்பியதே காரணம். அதன் ஆன்மீக முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு சவூதியின் புனித உணவுப்பட்டியலில் இது நீண்ட காலமாக இருக்கிறது. பழைய மற்றும் புதிய தலைமுறை மட்டுமில்லை. வருங்கால தலைமுறைக்கும் தரித் தான் புனித உணவு. இதனைப் பலர் குடும்பத்துடன் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

லுகைமத்

லுகைமத் சவூதிக்காரர்களுக்கு ஒரு இன்றியமையாத உணவு. மொறுமொறுப்பாகவும், மேப்பிள் அல்லது தேன் சிரப் நனைத்த பாலாடையுடன் வழங்கப்படும் இந்த உணவுக்கு பலர் ரெகுலர் கஸ்டமர்ஸ். சவூதிக்கு சுற்றுலா செல்லும் பலர் லுகைமத்தைத்தான் முதலில் ஆர்டர் செய்கிறார்கள்.

Related posts

நேற்று 4 தீவிரவாதிகள் பலியான நிலையில் ராணுவ முகாம் மீது இன்று தாக்குதல்: 2 வீரர்கள் வீரமரணம்

அரசு மரியாதை வழங்கக் கோரிய விண்ணப்பம் மீது அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம்: நீதிபதி!

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலை திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்ய அனுமதி!