மதுராந்தகம்: கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாத பவுர்ணமி மற்றும் சத்யநாராயண பூஜை நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் மாசி மாத பவுர்ணமி பூஜையை முன்னிட்டு யோகபிரவேசம் செய்து பூட்டிய அறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தவத்தில் அமர்ந்திருக்கும் கருங்குழி பிருந்தாவன் சித்தர் யோகிரகோத்தமா பக்தர்களை சந்திக்கும் 118வது பவுர்ணமி தரிசனம் நேற்று நடைபெற்றது.
பகல் 12 மணிக்கு சேஷபீடத்தில் தியானத்தில் அமர்ந்திருந்த சித்தருக்கு பக்தர்கள் தங்கள் திருகரங்களால் ஓம் நமசிவாய மந்திர உச்சாடனையுடன் அபிஷேகம் செய்து சித்தரின் அருள்ஆசி பெற்றனர். அதனை தொடர்ந்து மக்கள் சுபிக்சமுடன் வாழ ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில் யாகம் வளர்த்து சத்தியநாரயண பூஜையும் செய்து மகா தீப ஆராதனையை சித்தர் பக்தர்களுக்கு காண்பித்தார்.
இவ்விழாவில் கருங்குழி மட்டுமின்றி செங்கல்பட்டு, சென்னை, புதுசேரி, பெங்களுரு, கடலூர், மற்றும் விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சித்தரிடம் அருள் ஆசி பெற்றனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை யோகி ரகோத்தமா சுவாமிகள் அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலர் ஏழுமலைதாசன் தலைமையில் செய்திருந்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.