சத்யேந்திரநாத் போஸ் : நுண்துகள் கோட்பாட்டைக் கண்டறிந்தவர்

சத்தியேந்திர நாத் போஸ் (Satyendra Nath Bose) மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர். இந்திய இயற்பியலாளரான இவர் கணித இயற்பியலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். இவர் 1920களில் குவாண்டம் பொறிமுறையில் மேற்கொண்ட ஆய்விற்காகவும் அதன் மூலம் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருள், போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் போன்ற தத்துவங்களுக்காகவும் அறியப்படுகிறார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்றவரான பால் டிராக் என்பவரால் போசான் வளிமத்திற்கு இவரது நினைவாக இப்பெயர் சூட்டப்பட்டது. மட்டுவ இயற்பியல் (குவாண்டம் இயற்பியல்) உருவாகக் காரணமாயிருந்த பிளாங்கின் ‘தெர்மோடைனமிக் உண்ட் வாமஸ்டிராலங்’ என்ற புத்தகத்தில் ஊகத்தின் அடிப்படையில் பிளாங்க் ஒரு சமன்பாட்டை எழுதியிருந்தார். உனக்கு ஐயத்திற்கிடமின்றி ஏற்புடையதாக இல்லாத வரையில் எந்த ஒரு கருத்தையும் ஒப்புக்கொள்ளாதே என்ற குறிக்கோள் கொண்டிருந்த சத்யேந்திரநாத்தால் பிளாங்கின் வழிமுறையை ஏற்க முடியவில்லை. உடனே அதை வேறு வழிமுறையைக் கையாண்டு திருத்தம் செய்கையில் பிறந்ததுதான் போஸ்-ஐன்ஸ்டைன் செறிபொருள். இதைச் செய்தபோது போஸுக்கு வயது முப்பது. மேலும் இவர் போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் மற்றும் போஸ் வளிமம் ஆகியவற்றை கண்டுபிடித்தார்.

நுண்ணிய அணுக்கள் இணைந்தே நாம் காணும் உலகம் உருவானது என்பது அறிவியல் தேற்றம். இந்த அணுவுக்குள் 16 வகையான நுண்துகள்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அவற்றுள் முக்கியமானவை எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவை. இந்த அணுக்களுக்கு எடையை அளிக்கும் நுண்துகள் உள்ளது என்பதற்கான கோட்பாட்டை (போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியல்) கண்டறிந்தவர் இந்திய விஞ்ஞானி சத்யேந்திரநாத் போஸ். 2012ல் கண்டறியப்பட்ட அந்தப் புதிய துகளுக்கு ‘போஸான்’என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். உலகப்புகழ் பெற்ற சார்பியல் கோட்பாட்டு விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தவர் இவர்.ஐன்ஸ்டீனின் சார்புநிலைக் கோட்பாட்டை விளக்கி போஸ் எழுதிய கட்டுரையின் கணித அணுகுமுறை ஐன்ஸ்டீனை பெரிதும் கவர்ந்தது. அந்த முறையையே ஐன்ஸ்டீனும் பின்பற்றத் தொடங்கினார்.போஸுக்கு புகழ் பெற்றுத் தந்தது, நுண்துகள் புள்ளியியலில் (Quantum Statistics) அவர் 1924-25ல் அளித்த வரையறைக் கோட்பாடாகும். அதை பின்னாளில் ஐன்ஸ்டீன் மேலும் மேம்படுத்தினார். எனவே இது ‘போஸ்- ஐன்ஸ்டீன் புள்ளியியல்’(Bose-Einstein Statistics) என்று பெயர் பெற்றது.1925ல் ஜெர்மனியில் ஐன்ஸ்டீனும் போஸும் இணைந்து இயற்பியல் குளிர்விப்பு கருதுகோளை வெளியிட்டனர். அந்தக் கருதுகோள், ‘போஸ்- ஐன்ஸ்டீன் செறிபொருள்’(Bose-Einstein Condensate) என்று பெயர் பெற்றது. இவரது விஞ்ஞான சாதனைகளைப் பாராட்டி இந்திய அரசு 1954ல் பத்மவிபூஷண் விருது வழங்கி கௌரவித்தது.

 

Related posts

சென்னையில் ரூ.10.85 கோடியில் புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

2013 முதல் 2022ம் ஆண்டு வரை வெப்ப அலையால் 10,617 பேர் பலி: கடந்த 80 ஆண்டை காட்டிலும் இந்தாண்டு வெயில் அதிகம்

2024 – 2025 ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி – மருத்துவ பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை