சத்தியமங்கலம்-தலமலையில் சாலையில் படுத்திருந்த 2 புலிகள் : வீடியோ வைரல்-வாகன ஓட்டிகள் பீதி

சத்தியமங்கலம் : தலமலை சாலையில் பகல் நேரத்தில் 2 புலிகள் படுத்திருந்த வீடியோ வைரலாகி வருவதால் வாகன ஓட்டிகள் பீதியடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் சிறுத்தை, யானை, கரடி, புலி போன்ற வன விலங்குகள் அதிகளவில் உள்ளன. புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புலிகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.

திம்பத்திலிருந்து தலமலை செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதி ஆகும். தலமலை பகுதியில் 5 பழங்குடியின கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் இந்த சாலை வழியாக சத்தியமங்கலம் மற்றும் பிற பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். சுற்றுலா பயணிகள் தலமலை செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெற்று செல்ல வேண்டும். வன சாலைகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் புலிகள் நடமாடுவது வழக்கம்.

இந்த நிலையில் திம்பம் வன சோதனைச்சாவடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் ராமரணை வனப்பகுதியில் சாலையோரத்தில் 2 புலிகள் ஹாயாக படுத்திருப்பதை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே புலிகள் படுத்திருந்த காட்சியை செல்போனில் வீடியோ எடுத்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியில் உள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் தலமலை பகுதிக்கு சுற்றுலா பணிகள் செல்ல தடை விதித்துள்ளனர். இரவு நேரங்களில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் தலமலை சாலையில் வாகனங்களை விட்டு கீழே இறங்கக்கூடாது. வனப்பகுதியில் நடமாடும் புலி, சிறுத்தை, யானை உள்ளிட்ட வனவிலங்குளை புகைப்படம், வீடியோ எடுப்பதை தவிர்க்க வேண்டும். மேலும், வனப்பகுதியில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் மலை கிராம மக்கள் பைக்கில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

மேலும், இரவு நேரங்களில் தனியாக வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறையினர் அப்பகுதியில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பகல் நேரத்தில் தலமலை சாலையில் 2 புலி படுத்திருந்த வீடியோ வெளியானதால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல்; பின்பற்ற வேண்டிய நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக தேர்தல் ஆணையம்

தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

ரூ.4 கோடி பறிமுதல் வழக்கு பாஜக பொருளாளர் ஆஜராக ஆணை