சத்தியமங்கலம் அருகே நகை திருட்டு வழக்கு தம்பதியர் கைது

சத்தியமங்கலம் : சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன் (54). இவர் புங்கம்பள்ளி பகுதியில் உள்ள தனியார் மில்லில் எலக்ட்ரீசியனாக பணி புரிந்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மோகனின் தாயார் ராஜம்மாள் (73) வீட்டில் விருதுநகரை சேர்ந்த குமாரசாமி (36), அவரது மனைவி முருகேஸ்வரி (31) ஆகிய இருவரும் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தனர்.

ராஜம்மாளிடம் முருகேஸ்வரி நன்கு பழகி வந்த நிலையில் கடந்த மார்ச் மாதத்தில் ராஜம்மாளின் வீட்டில் டப்பாவில் போட்டு வைத்திருந்த ரெண்டே முக்கால் பவுன் தங்க நெக்லஸ் மற்றும் இரண்டு பவுன் தங்க செயின் திருடு போனது. இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று சத்தியமங்கலம் பஸ் நிலையத்தில் ராஜம்மாளின் உறவினர் தேவராஜ் என்பவர் குமாரசாமி, முருகேஸ்வரி இருவரும் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருப்பதை பார்த்துள்ளார். பின்னர் அருகே சென்று பார்த்தபோது முருகேஸ்வரியின் கழுத்தில் ராஜம்மாள் வீட்டில் திருடு போன தங்க நெக்லஸும், தங்கச் செயினும் அணிந்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தேவராஜ் உடனடியாக அவரது உறவினர்கள் உதவியுடன் இருவரையும் பிடித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் குமாரசாமியும் முருகேஸ்வரியும் சேர்ந்து ராஜம்மாள் வீட்டில் தங்க நகைகள் திருடியதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நகைகளை பறிமுதல் செய்த போலீசார் தம்பதியரை கைது செய்து சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related posts

செட்டிகுளம் முருகன் கோயிலில் புரட்டாசி கிருத்திகை விழா கோலாகலம்: வெள்ளி தேர் இழுத்து பக்தர்கள் தரிசனம்

சென்னை கிண்டியில் 118 ஏக்கர் பரப்பளவில் தோட்டக்கலை மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி உருவாக்கப்படும்: தமிழ்நாடு அரசு அரசாணை

பில்லி சூனியம், செய்வினை சிறப்பாக செய்வார்; அதிமுக மாஜி எம்எல்ஏ பற்றி பரபரப்பு போஸ்டர்