புடவை மடிப்பு வைத்துக் கொடுக்க ரூ. 850… கட்டி விட ரூ.1500!

நீங்கள் படித்தது உண்மைதான். ஒரு புடவையை சீராக மடிப்பு வைத்து, கச்சிதமாக அடுத்த நாள் கட்டுவதற்கு ஏற்ப தயார் செய்து கொடுக்க ரூ.850. மேலும் நேரில் வந்து புடவை கட்டிவிட ரூ.1300. இல்லை புடவையை அப்படியே ரெடி டூ வேர் புடவையாக தைத்துக் கொடுக்க வேண்டும் எனில் அதற்கு ரூ.1500 இப்படி தனித்துவமான வகையில் தனக்கென ஒரு பிஸினஸை உருவாக்கி மாஸ் காட்டிக் கொண்டிருக்கிறார் அபர்ணா சுந்தரராமன். இவர் 2015, 2016 கால கட்டத்தில் டிக் டாக், டப்ஷ்மாஷ் உள்ளிட்ட தளங்களில் வடிவேலு வசனங் களில் வீடியோக்கள் பகிர்ந்து பிரபலமாக வலம் வந்தவர். தற்போது பொட்டிக், டிசைனிங், புடவை டிரேப்பிங் என பிஸியாக இருக்கிறார். ‘ எனக்கு சொந்த ஊர் தஞ்சாவூர், 2016க்குப் பிறகு சென்னையிலே செட்டிலாகிட்டேன். பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சேன். பின்னர் ஃபேஷன் டிசைனிங்கில் டிப்ளமா படிச்சேன். நான் 9ம் வகுப்பு படிக்கும் காலத்திலே இருந்தே தையல் பழக்கம் உண்டு. அம்மா தையல் கத்துக்கச் சொல்லி வற்புறுத்தினாங்க. ஆனால் எனக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. ஆனாலும் சரி அம்மா சொல்றதைக் கேட்கலைன்னா அடி விழும்ன்னு சும்மா தைச்சுப் பழகிட்டு இருந்தேன், ஆனாலும் கிளாஸ்லாம் போகாம அடிக்கடிஓடி வந்திடுவேன்.

பின்னர் கல்லூரியிலே கம்ப்யூட்டர் சைன்ஸ் படிக்கும் போது நாங்க ஆறு பேர் தோழிகள், என் கேங்ல எல்லாரும் திடீர்ன்னு ஃபேஷன் டிசைனிங் கிளாஸ்ல சேர்ந்தாங்க, சரி எல்லாருமே சேர்ந்திட்டாங்க, நாம மட்டும் என்ன செய்வதுன்னு சேர்ந்தேன். இதிலே சிறப்பு என்னன்னா, என் கூட சேர்ந்த எல்லாருமே பாதியிலேயே கிளாஸ் கட், நான் மட்டும்தான் முழுதா முடிச்சேன். அப்பறம் 2016ல் சென்னை வர வேண்டிய சூழல், ஃபேஷன் டிசைனிங் படிப்பையே சென்னைக்கு டிரான்ஸ்பர் செய்துக்கிட்டேன்’என்னும் அபர்ணா எப்படி இந்த புடவை கட்டுவதையே பிஸினஸாக மாற்றினார் என மேலும் தொடர்ந்தார். ‘கல்லூரி காலங்களிலேயே வீட்டில் எல்லோருக்கும் புடவை மடிப்பு வைக்கிறது என்னுடைய பொறுப்புதான். எனக்கே புடவை கட்டத் தெரியாத காலத்தில் கூட அம்மா கட்டி முடிச்ச பிறகு நானே எனக்குத் தெரிந்த மாதிரி சீராக மடிப்பு வெச்சிப்பேன். தொடர்ந்து கலேஜ்ல எதாவது நிகழ்ச்சின்னா கூட புடவையே தனக்குத் தெரிஞ்சபடி கட்டிக்கிட்டு வந்து என் கிட்டதான் தோழிகள் நல்லா கட்ட சொல்லிக் கேட்பாங்க. இன்னும் சில ஃப்ரண்ட்ஸ் சல்வாருடன் வந்து புடவையே என் கிட்ட கட்டிப்பாங்க. அப்படித்தான் எனக்கு இந்தப் புடவை கட்டிவிடுவதில் பழக்கம் அதிகரிக்க ஆரம்பிச்சது. ஒரு சில தோழிகள் என் கல்யாணத்துக்கு நீதான் புடவை கட்டிவிடணும்ன்னு என்னை அட்வான்ஸா புக் செய்துக்க துவங்கினாங்க. அப்பறம் சென்னை வாழ்க்கை, தொடர்ந்து பொட்டிக் ஷோரூம், கஸ்டமர்கள் இப்படி வாழ்க்கையும் நகரத் துவங்கிடுச்சு.

அப்படியான வேளைதான் ஒரு சிலர் புடவை டிரேப்பிங் செய்வீங்களான்னு கேட்டு வந்தாங்க. நானும் தொடர்ந்து புடவை கட்டிவிட அவர்கள் என்னுடைய பொட்டிக்கில் இருந்து கிளம்பி நிகழ்ச்சிகளுக்குப் போகும் பழக்கம் அதிகரிச்சது. ஆரம்பத்தில் ஒரு சின்ன பணம் வாங்கினேன். தொடர்ந்து கொரோனா ஊரடங்கு காலம், பிஸினஸ் கொஞ்சம் டவுன். ஊரடங்குக்குப் பிறகு புதுமையா, சிறப்பா பொட்டிக்கை மாத்த நினைச்சேன். உடன் இந்த புடவை டிரேப்பிங், ப்ளீட்ஸ் வைக்கிறது, ரெடி டூ வேர் சேலைகள் தைத்துக் கொடுக்கறதும் செய்யத் துவங்கினேன். ஆன்லைனில் என்னை நானே போட்டோ எடுத்து என்னென்ன விதங்களில் புடவை கட்டுவேன் என்கிறதையும் பதிவு செய்தேன். தொடர்ந்து யூடியூப் தளத்திலும் ஒரு சேனல், அதிலும் 30,000 சப்ஸ்கிரைபர்கள் இருக்காங்க’ என்னும் அபர்ணா ஆறு விதமாக புடவைகள் கட்டி
விடுகிறார்.

‘எப்போதுமான தமிழ் முறை புடவை ஸ்டைல், சேலையையே லெஹெங்கா போல் இரண்டு விதங்களில் கட்டிவிடுவது. புடவை, ஸ்கர்ட் இணைந்த தாவணி முறையிலும் கல்லூரிப் பெண்கள் பலரும் கட்டிக்கிறாங்க. புடவையையே லெஹெங்கா பாணியில் கட்டும் போது உடல் பருமனாக இருக்கும் பெண்களும் கூட தயங்காமல் இந்த ஸ்டைல் லெஹெங்காக்களைக் கட்டலாம். மேலும் இடுப்புத் தெரியக் கூடாது என்னும் பெண்களும் கூட முன் – பின் இடுப்பே தெரியாத வண்ணம் இந்த லெஹெங்காக்களை அணியலாம். புடவை மடிப்பு வைத்து வேண்டுமென்றால் முதல் நாளே புடவையைக் கொடுத்துவிட்டுச் சென்றால், சீராக மடித்து, முன் கொசுவம், பல்லு எல்லாமே வைத்து அப்படியே பேக்கிங்காகக் கொடுத்திடுவேன். அதற்கு ரூ.850. திருமணங்கள், நிச்சயதார்த்தம் என நேரில் சென்று புடவை கட்டிவிடுவதும் செய்கிறேன், ரூ.1300. இது இல்லாம புடவையை எப்போதுமே அப்படியே எடுத்து லெஹெங்கா போல் மாட்டிக்கொள்ளும் ரெடி டூ வேர் புடவைகள் தைத்துக் கொடுக்க ரூ. 1500. இதில் கூடுமானவரை நான் பட்டுப் புடவைகளைத் தைத்துக் கொடுப்பதில்லை. காரணம் பட்டுப் புடவை மட்டும் பழமையான முறையில் கட்டிக்கொண்டு மடித்துப் பாதுகாப்பதுதான் நல்லது. மேலும் தைத்து விட்டால் பழைய பட்டுப் புடவைகள் விற்பனை கான்செப்ட்டில் பிரச்னை வரும். போலவே ரெடி டூ வேர் என புடவையை தைத்துவிட்டால் கூடுமானவரை டிரை வாஷ் கொடுப்பதுதான் நல்லது. இல்லையேல் மடிப்புகள் களைந்து வீணாகிடும். தையல் பகுதியிலும் சேதமாகும்.
– ஷாலினி நியூட்டன்

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை