நள்ளிரவு 2 மணிக்கு தூக்கத்தில் முடிவெடுத்து காலையில் நிறைவேற்றினார் சமத்துவ மக்கள் கட்சியை பாஜவுடன் இணைத்தார் சரத்குமார்

* மனைவியிடம் கேட்டு கட்சியை இணைத்தேன் என்று பேச்சு

* பாஜ வேண்டாம் என்று தொண்டர்கள் எதிர்ப்பால் பரபரப்பு

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நள்ளிரவு 2 மணிக்கு தூக்கத்தில் மனைவியுடன் பேசி முடிவெடுத்து காலையில், சமத்துவ மக்கள் கட்சியை பாஜவுடன் சரத்குமார் இணைத்தது பேசும் பொருளாகியுள்ளது. இணைப்பு விழாவில், பாஜ வேண்டாம் என்று சமக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாஜ கூட்டணியில் தமாகா, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

பொதுவாக சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைப்பது வழக்கம். இந்த தேர்தலில் வித்தியாசமாக சிறிய கட்சி ஒன்று கூட்டணிக்காக பேசச் சென்று கடைசியில் பெரிய கட்சியுடன் இணைந்துள்ளது. கூட்டணியாக இல்லாமல் கட்சி அப்படியே பாஜவில் திடீரென இணைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று காலை சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு சரத்குமார் சென்றார்.

அப்போது, சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் தொகுதிகளை இறுதி செய்வார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை முன்னிலையில் சரத்குமார் தனது கட்சியை பாஜவுடன் இணைத்ததாக அறிவித்தார். இந்நிகழ்ச்சியில் பாஜ தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘‘சமத்துவ மக்கள் கட்சியை முழுவதுமாக பாஜவில் இணைத்து வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக பாடுபடப் போகிறேன் என சரத்குமார் சொன்னார்.

சரத்குமாரை தமிழகத்தில் அடைத்து வைக்க விரும்பவில்லை. அவர் இன்று தேசியத்திற்கு தேவைப்படுகிறார்’’ என்று கூறி இணைப்பை வரவேற்றார். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் சரத்குமார் தனது கட்சியை பாஜவில் இணைத்திருப்பதை சற்றும் எதிர்பார்க்காத சமக நிர்வாகி ஒருவர் எழுந்து, பாஜவில் சமகவை இணைக்கும் முடிவிற்கு ஆவேசமாக எதிர்ப்பு தெரிவித்தார். ‘கட்சியை முழுவதுமாக சரத்குமார் அடமானம் வைத்து விட்டார்’ என்று ஒருமையில் பேசினார். உடனே அங்கிருந்து அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். இதை தொடர்ந்து, விழாவில் சரத்குமார் பேசியதாவது:

இந்த தேசத்தின் நலனுக்காகவும், நமது வருங்கால இளைய சமுதாயத்தின் நலனுக்காகவும் பாஜவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைக்கும் முடிவை நான் எடுத்தேன். நள்ளிரவு 2 மணி இருக்கும்… அந்த நேரத்தில் என் மனைவியை எழுப்பி, எனக்கு பாஜவுடன் இணைய தோன்றுகிறது என கூறினேன். அதற்கு அவர் ‘நீங்கள் எந்த ஒரு முடிவு எடுத்தாலும், நான் உங்களோடு உறுதுணையாக இருப்பேன்’ என்று கூறினார்.. இந்த இணைப்பு எழுச்சியின் தொடக்கம்.

எளிய குடும்பத்தில் பிறந்து நாட்டின் பிரதமராக மோடி வந்திருக்கிறார். நமது சக்தியை மிகப்பெரிய சக்தியுடன் இணைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜவுடன் கூட்டணி அமைத்து தென் மாவட்டங்களில் போட்டியிடுவார் என எதிர்பார்த்த நிலையில் தற்போது அவரது கட்சியையே கலைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

* சரத்குமார் அரசியல் பயணம்
சரத்குமார் தனது அரசியல் பயணத்தை திமுக கூட்டணியில் தொடங்கினார். பின்னர் அதிமுகவில் சேர்ந்தார். அதிமுகவிலிருந்து விலகி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை சரத்குமார் 2007 ஆகஸ்ட் 31ம்தேதி தொடங்கினார். தேர்தல் சமயங்களில் தனித்து போட்டி என அறிவித்தாலும் கடைசியில் கூட்டணி அமைத்தே களமிறங்குவார். குறிப்பாகக் கடந்த 2011, 2016 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றனர்.

அதன் பின்னர் உட்கட்சிப் பூசல்களால் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டது. வரும் தேர்தலில் பாஜகவுடன் இணைந்து சரத்குமார் களம் காண்பார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரகசியமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி பாஜகவில் கட்சியை இணைத்துள்ளார். சுமார் 17 ஆண்டுகளாகத் தமிழக அரசியலில் இருந்த சமத்துவ மக்கள் கட்சியின் பயணம் இன்றுமுடிவுக்கு வந்துள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு