Tuesday, October 8, 2024
Home » சகல கலைகளையும் அருளும் சரஸ்வதி

சகல கலைகளையும் அருளும் சரஸ்வதி

by Porselvi

கூத்தனூர் சரஸ்வதி ஆலயம்

தமிழகத்தில் சரஸ்வதிக் கென்று அமைந்துள்ள பழம்பெரும் ஆலயம் கும்பகோணம் காரைக்கால் சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ. தொலைவில் கூத்தனூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது. ஹரிநாதேஸ்வரம் மற்றும் அம்பாள்புரி என்ற திருநாமத்துடன் விளங்கிய இவ்வூரை இரண்டாம் ராஜராஜன் தன் அவைக்களப் புலவராக விளங்கிய ஒட்டக் கூத்தருக்கு பரிசாக வழங்கினான். ஆதலால் இவ்வூர் கூத்தனுடைய ஊராகி ‘கூத்தனூர்’ ஆக மாறியதென்பர். புருஷோத்தமன் என்ற சிறுவன் பிறவியிலேயே ஊமையாக இருந்தான். அதனால் ஊரார் அவனை கேலி பேசினார். அச்சிறுவன் தினமும் ஹரிநதியில் நீராடி சரஸ்வதியை வணங்கி வந்தான். ஒருநாள் சகலகலா வல்லி அவன் முன்தோன்றினாள். அவனது வாயில்தான் தரித்திருந்த தாம்பூலத்தை அருளி நல்லாசி புரிந்து மறைந்தாள். அது முதல் ஊமையாயிருந்த புருஷோத்தமன் கவிபாடும் ஆற்றலைப் பெற்றான். சரஸ்வதி மீது பல பாடல்களை பாடினான். அதனால் பாரதி என்ற பெயர் அவனுடைய பெயருடன் சேர்ந்து ‘புருஷோத்தம பாரதி’யானான் (பாரதி-சரஸ்வதி)பின்னாளில் ஒட்டக்கூத்தர் என்றழைக்கப்பட்ட புருஷோத்தம பாரதி சோழ மன்னர்களாக பெருமையுடன் விளங்கிய விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன் ஆகிய மன்னர்களின் அரசவையில் அவைப்புலவராக பெருமையுடன் விளங்கினார். கூத்தனூர் ஆலயம் சிறிய ஆலயமானாலும் மிகவும் புகழ்பெற்ற ஆலயம். இங்கு சரஸ்வதி தேவியே கருவறையில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார். மேலும் திருச்சுற்று, முகமண்டபம், அர்த்தமண்டபம், அந்தராளம் ஆகியவை முறைப்படி கட்டப் பட்டுள்ளன. இத்திருக்கோயிலின் முகமண்டபத்தின் இடது பக்கத்தில் தேவியின் அருள் பெற்ற ஒட்டக் கூத்தர் வலக்கையில் எழுத்தாணியும் இடக்கையில் ஏடும் கொண்டு அமர்ந்திருக்கிறார்.

அர்த்தமண்டபத்தில் விநாயகர், லிங்கம், முருகப் பெருமான் ஆகியோர் காட்சி தருகின்றனர். பலிபீடத்தருகில் வலம்புரி விநாயகரும், திருச்சுற்றின் தென் மேற்கு மூலையில் நர்த்தன கணபதியும் இடம் பெற்றுள்ளனர்.கர்ப்பகிருஹத்தில் பிரம்மதேவரின் துணைவியான ஸ்ரீசரஸ்வதி தேவி தாமரை மலரில் பத்மாசனத்தில் அமர்ந்து அருள்புரிகிறாள். தேவியின் திருக்கரங்களில், பின் இரு கரங்களில் ஜபமாலையும் கமண்டலமும் இடம் பெற்றிருக்க முன் இருகரங்களில் ஏடும். சின்முத்திரையும் இடம் பெற்றுள்ளன. ஜடா மகுடத்துடன் கூடிய இவளுக்கு மூன்று கண்கள் உண்டு. எல்லாவிதமான ஆபரணங்களுடன் அழகுடையவளாக புன்னகைப் பூக்கும் கருணைத் திருமுகத்துடன் தன் பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.நவராத்திரி ஒன்பது நாளும் இத்திருக்கோயிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சரஸ்வதி பூஜையன்று கருவறையில் குடி கொண்டுள்ள சரஸ்வதி தேவியின் திருப்பாதங்கள் கருவறையின் வெளியிலுள்ள அர்த்த மண்டபம் வரை நீண்டிருக்குமாறு அலங்காரம் செய்யப்படுகிறாள். இதன்மூலம் தேவியின் திருப்பாதங்களுக்கு பக்தர்களே நேரடியாக அர்ச்சிக்க முடியும். இன்றும் இந்த மரபு கடைபிடிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பத்மநாபபுரம்

கம்பர் தமிழ் நாட்டிலிருந்து தென்பகுதிக்கு வந்தபோது, தான் வணங்கி சரஸ்வதி தேவியின் திருவுருவையும் தன்னுடன் எடுத்து வந்துவிட்டார். அச்சிலையே இன்று பத்பநாபபுரம் கோட்டையின் உள்ளே நிறுவப்பட்டுள்ளது. (இது பற்றிய விவரங்கள் கம்பர் பற்றிய தலைப்பில் இப்புத்தகத்தின் பிற பக்கங்களில் இடம் பெற்றுள்ளது) பத்மாசனத்தில் காட்சி தரும் இப்பெருமாட்டி நவராத்திரி உற்சவத்தின் போது திருவனந்தபுரம் எழுந்தருளுகிறார். அவ்வாறு எழுந்தருள வரும்போது அன்னையை தமிழக கேரள எல்லையில் இரு மாகாணமக்களும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாகக் கொண்டாடுகின்றனர்.

வேதாரண்யம்

திருமறைக்காடு என்றழைக்கப்படும் வேதாரண்யத்தில் சரஸ்வதி தேவி கலைகளின் வடிவாய் நின்று வழிபட்டதால் இங்கு அமைந்துள்ள சரஸ்வதி ‘வேத சரஸ்வதி’ என்று போற்றப்படுகிறாள்.

திருநெய்த்தானம்

இருதயபுரிஸ்வரரை சரஸ்வதி பூஜித்து பேறு பெற்ற தலம் இது. இது திருஐயாறு சப்ததானத்தலங்களில் ஒன்றாகும். இங்கும் சரஸ்வதி தீர்த்தம் உள்ளது.

ஆவுடையார் கோயில்

ஆவுடையார் கோயில் தூணில் சகல ஆபரணங்களையும் தரித்துக் கொண்டு தன் திருக்கரங்களில் வீணையை ஏந்தியவாறு சரஸ்வதியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

குருகாவூர்

இவ்வூரில் உள்ள சிவபெருமானை பிரம்மனும் சரஸ்வதியும் சேர்ந்து வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள தீர்த்தத்திற்கு சரஸ்வதி தீர்த்தம் என்றே பெயர்.

தோட்ட பாளையம்

வேலூரில் உள்ள தோட்ட பாளையம் தாரகேஸ்வரர் ஆலயத்தில் கோஷ்ட தெய்வமான பிரம்மாவிற்கு நேர் எதிரில் சரஸ்வதி தேவி அமர்ந்துள்ளாள்.

திருப்பூந்துருத்தி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள திருப்பூந்துருத்தியில் உள்ள ஸ்ரீபுஷ்பவனேஸ்வரர் ஆலயத்தில் கருவறைக் கோஷ்ட தேவதையாக சரஸ்வதி விளங்குகிறாள். இவளது மேலிரண்டு கரங்களில் அட்சமாலையும் சுவடியும் காணப்படுகிறது. கீழிரண்டு திருக்கரங்களில் அபய ஊரு முத்திரைகளைத் தாங்கியுள்ளாள்.

 

You may also like

Leave a Comment

2 − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi