பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்

பொன்னேரி: மீஞ்சூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து திடீர் போராட்டம் நடத்தினர். மீஞ்சூர் பேரூராட்சியில் 18 வார்டுகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பேரூராட்சியில் உள்ள வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை, கழிவுகளை சேகரிக்கும் பணியில், மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் சுமார் 60க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து பேரூராட்சி வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், ஊதிய உயர்வு வழங்கிட வேண்டும், பி.எப் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் ஒப்பந்ததாரரும், பேரூராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாததால் இந்த, போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தனர். மேலும், தினந்தோறும் அதிகாலை நேரத்தில் வந்து தூய்மை பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், பிற்பகல் இடைவெளிக்கு பிறகும் மீண்டும், மாலையில் இரண்டாவது முறையாக பணிக்கு வர வேண்டும் என இரண்டு ஷிப்ட்டுகளாக பணி நேரத்தை மாற்றியதற்கும் தூய்மை பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டத்தை நடத்துவதாக கூறினர்.

தூய்மை பணியாளர்கள் நடத்திய திடீர் போராட்டத்தால் பேரூராட்சி நிர்வாகமும், காவல்துறையினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். காலை நேரத்தில் துப்புரவு பணிகளை புறக்கணித்து, தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள சாலைகளில் குப்பை, கழிவுகள் தேங்கியதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Related posts

ராகுல்காந்தி குடியுரிமை விவகாரம்; ஒன்றிய அரசுக்கு அலகாபாத் ஐகோர்ட் சரமாரி கேள்வி: அக். 24ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை