கழிவுநீரும், குடிநீரும் கலந்து சகதியால் திருச்செந்தூர் கோயில் அருகே சுகாதாரக்கேடு: பக்தர்கள் அவதி


திருச்செந்தூர்: திருச்செந்தூர் கோயில் செல்லும் வழியில் தூண்டுகை விநாயகர் கோயில் பகுதியில் கழிவுநீரும், குடிநீரும் கலந்து சேறும், சகதியமாக காட்சியளித்தது. பக்தர்கள் அதனை மிதித்துவிட்டே கோயிலுக்கு சென்று வந்ததால் மனவேதனை அடைந்தனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிக அளவில் பாதயாத்திரை பக்தர்கள் வந்தனர். அதிலும் தைப்பொங்கலை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த வாரத்தில் மட்டும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்தனர். மேலும் பொங்கலுக்கு முந்தைய தினத்தில் லட்சக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தவுடன் சன்னதித்தெருவில் தூண்டுகை விநாயகர் கோயிலில் தேங்காய் விடலை போட்டு வேண்டி விட்டு முருகப்பெருமானை வழிபடுவது வழக்கமாகும்.

இதனால் நடந்து செல்லும் பக்தர்களால் சன்னதித்தெரு எப்பொழுதுமே பரபரப்பாக இருக்கும். இந்நிலையில் கடந்த 13ம்தேதி கோயில் செல்லும் வழியில் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வெளியேறி அங்கிருந்து இறக்கத்தில் வழிந்து தூண்டுகை விநாயகர் கோயில் வழியாக சன்னதித்தெருவில் ஓடியது. மேலும் பக்தர்கள் குளிக்கும் இடத்திலிருந்து வெளியேறும் தண்ணீரும் கலந்து கழிவு நீராக மாறி அப்பகுதியில் சேரும் சகதியமாக காட்சியளித்தது. அங்கு நிலவிய சுகாதார சீர்கேட்டால் தூண்டுகை விநாயகர் கோயிலில் தேங்காய் விடலை போட வந்த பக்தர்களும் முகம் சுழித்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தியும் முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதனால் குடிநீர் வீணானதுடன் தொடர்ந்து சேறும், சகதியுமே காட்சியளித்தது. விரதம் இருந்து காலில் செருப்பு கூட அணியாமல் பல மைல் தூரம் பாதயாத்திரை வந்த பக்தர்கள் முருகனை வழிபட வரும் போது சேற்றிலும் சகதியிலும் மிதித்து மனவேதனையுடன் கோயிலுக்கு சென்று திரும்புகின்றனர். மேலும் தூண்டுகை விநாயகர் கோயிலைச் சுற்றி கால்நடைகள் கூட்டமாக திரிவதால் பக்தர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இதனை நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கால்நடைகளை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கோயில் – நகராட்சி மோதல் போக்கு
திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமான மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைந்துள்ளது. அங்கிருந்து தான் சில பகுதி குடியிருப்புகளுக்கு குடிநீர் திறந்து விடப்படும். கடந்த 4 நாட்களாக குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் வீணாக வெளியேறி பொங்கல் பண்டிகையின் போதும் குடியிருப்புவாசிகளுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதியடைந்தனர். இது குறித்து நகராட்சியில் பணியாளர்கள் இருந்தும் பொங்கல் விடுமுறையை காரணம் காட்டி வேலை நடக்கவில்லை. கோயில் வளாகத்தில் குடிநீர் வீணாவது குறித்து கோயில் நிர்வாகத்திடம் தெரிவித்த போது அவர்கள் இது நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய் என பதில் கூறினர்.

நகராட்சியோ நம் பகுதியில் இல்லையே கோயில் வளாகத்தில் தானே வெளியேறுகிறது என அலட்சியம் செய்தனர். இப்படி ஒருவருக்கொருவர் முரண்பாடு இருந்ததால் வீணான தண்ணீரால் பொதுமக்களும், கழிவுநீருடன் கலந்து ஓடியதால் கோயிலுக்கு வந்த பக்தர்களும் அவதியடைந்தனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு கோயில் வளாகத்தில் நகராட்சிக்கு சொந்தமானது என்றோ கோயிலுக்கு சொந்தமானது என்றோ பாரபட்சம் பார்க்காமல் எந்த தரப்பும் வேலையை செய்ய வேண்டிய நேரத்தில் செய்தால் மட்டுமே பொது நலன் என்பதை அறிவுறுத்த வேண்டும்.

Related posts

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை

காமாட்சி அம்மன் பாடலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணி தீவிரம்: சுற்றுலாத்துறை நடவடிக்கை