சானிட்டரி நாப்கின்… மாற்று என்ன?

நன்றி குங்குமம் டாக்டர்

இந்தியாவில், நகர்புறங்களில் வசிக்கும் பெண்களில் 90% பெண்கள் சானிட்டரி நாப்கின்கள்தான் பயன்படுத்துகின்றனர். அதில் 64 சதவீத பெண்கள் மட்டுமே சுகாதாரமான மாதவிடாய் பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில், நாப்கின்களின் பயன்பாடுகள் குறித்தும், நாப்கின்களுக்கான நவீன மாற்று சாதனங்கள் குறித்தும் அறிந்து கொள்வோம்.

நாப்கின்கள் என்னதான் பெரிய பிராண்டுகளின் தயாரிப்பாக இருந்தாலும், உடலுக்குக் கேடு விளைவிக்கும் ரசாயனங்களும், சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் பொருட்களும் அதில் நிறைந்துள்ளன. காரணம், நாப்கின்கள் ஈரத்தை உறிஞ்சுவதற்காக, ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படுகின்றன. இது பெண்களுக்கு கர்ப்பப்பை சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துவதோடு, தொடர்ந்து உபயோகித்தால் புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்தும் உள்ளது. எனவே முடிந்தவரை ரசாயனமற்ற நாப்கின்களை வாங்கி பயன்படுத்துவதே நல்லது.

நாப்கின் பராமரிக்கும் முறை

பொதுவாக, மாதவிடாய் காலங்களில் நாப்கின்களை பயன்படுத்தும் போது, 2 முதல் 4 மணி நேரத்துக்கு ஒரு முறை நாப்கின்களை மாற்றிவிடுவது நல்லது. இதன் மூலம் நாப்கின்களால் ஏற்படும் தொந்தரவுகளில் இருந்து சிறிதளவேனும் பாதுகாத்துக் கொள்ளலாம். அதிலும் உதிரப்போக்கு அதிகமாக இருப்பவர்கள் இதைக் கட்டாயமாக பின்பற்ற வேண்டும். நாப்கின்களை மாற்றும் போது கைகளைக் கழுவுதல் அவசியம். இது நோய் தொற்று ஏற்படாமல் தடுக்கும்மாதவிடாயின் போது அதிகமான உதிரப்போக்கை உணரும் பெண்கள், அடிக்கடி நாப்கினை மாற்றுவதையும், ஆடைகளில் கறை படிவதையும் தவிர்ப்பதற்காக ஒரே நேரத்தில் இரண்டு நாப்கின்களை பயன்படுத்துகின்றனர். இது நோய் தொற்றுக்கு வழிவகுக்கும்.

மாதவிடாய் நாட்களில் வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்யலாம். இதற்காக வேறு திரவத்தை பயன்படுத்தக்கூடாது. மாதவிடாய் நாட்களில் இரண்டு முறை குளிப்பது, உடலை சுத்தமாக வைத்திருப்பதோடு, சுறுசுறுப்பையும் தரும். நாப்கின் பயன்படுத்துவது போலவே, அதை அகற்றுவதிலும் கவனம் தேவை. பயன்படுத்திய நாப்கின்களை முறையாக காகிதத்தில் சுற்றி குப்பைத் தொட்டியில் போடவேண்டும். குப்பைத் தொட்டியில் இருக்கும் நாப்கின்களையும் அவ்வப்போது அகற்றிவிட வேண்டும்.

உடலோடு ஒட்டியிருக்கும் வகையிலான ஆடைகள் சிரமத்தை ஏற்படுத்தும். சருமத்தோடு ஒட்டாத, காற்றோட்டமான ஆடைகளை தேர்வு செய்து அணிய வேண்டும். நாப்கின்கள் வைத்திருக்கும் போது, இறுக்கமான உடைகள் அணிவதால் தொடை இடுக்குகளில் தடிப்பை உண்டாக்கி மேலும் அசவுகரியத்தை ஏற்படுத்தும். கோடை காலத்தில் உடலில் நீரிழப்பு அதிகமாக ஏற்படுவதால் சோர்வு உண்டாகும். இது மாதவிடாய் காலங்களில் இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால், போதுமான அளவிற்கு தண்ணீர் குடிப்பதோடு, புத்துணர்வு தரும் பழச்சாறுகளும் அருந்தலாம். மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிறு வலியின் காரணமாக சிலர் சாப்பிடாமல் இருப்பார்கள். அதைத் தவிர்த்து ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதோடு, எளிமையான உடற்பயிற்சிகள் செய்தால் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கலாம்.

பக்க விளைவு ஏற்படுத்தாத நாப்கின்களுக்கான நவீன மாற்றுகள் பீரியட் பான்டீஸ்: பீரியட் பான்டீசை, உள்ளாடை போல் அணிந்து கொள்ளலாம். பல அடுக்குகள் கொண்டு செய்யப்பட்டதால் லீக்கேஜ் பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம். இதையும் சுத்தம் செய்து மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாம். நீடித்து உழைக்கக்கூடிய இந்த பான்டீஸ், பலவிதமான துணிகளிலும், அளவுகளிலும் கிடைக்கிறது. அதிக உதிரப்போக்கு உள்ள பெண்களுக்கு இது மிகவும் ஏற்றது.

டாம்பான்கள்: நாப்கின்களை போலவே உறிஞ்சும் பொருள் டாம்பான். ஆனால், இவை நாப்கினை போல் பட்டையாக இல்லாமல், உருளை வடிவத்தில் இருக்கும். ஆகவே இதனையும் கப்பைப் போன்றே பொருத்தி பயன்படுத்த வேண்டும். இதில் உள்ள ஸ்ட்ரிங் போன்ற நூலை இழுத்தால் சுலபமாக நீக்கிவிடலாம். மாதவிடாய் உதிரப்போக்கின் தீவிரத்தை பொறுத்து 4 அல்லது 6 மணி நேரத்துக்கு ஒரு முறை இதை மாற்றி பொருத்திக் கொள்ள வேண்டும்.

மென்ஸ்ட்ருவல் கப்: மென்ஸ்ட்ருவல் கப்கள் என்பவை ஃபேனல் அல்லது கூம்பு வடிவில் சிலிக்கானால் செய்யப்பட்டவை. அளவில் சிறியதாக உள்ள இந்த கப்பை, மாதவிடாய் நாட்களில் நாப்கினுக்கு பதிலாக பொருத்திக் கொள்ள வேண்டும். இது சுமார் 12 மணிநேரம் வரை தாங்கும். கப் நிறைந்தபின், சுத்தப்படுத்தி மீண்டும் உபயோகிக்கலாம். மென்ஸ்ட்ருவல் கப் நீண்ட நேரம் தாங்கக்கூடியது என்பதால் கசிவு பற்றிய டென்ஷன் இல்லாமல் வேலைகளில் கவனம் செலுத்த உதவுவதுடன், பயண நேரங்களிலும் எந்தவிட டென்ஷன் இல்லாமலும் மேற்கொள்ளலாம். இதனை முதன்முதலில் பயன்படுத்த தொடங்கும்போது சற்று கடினமா க இருந்தாலும், பழகிய பின்னர் மிகவும் சவுகரியமான உணர்வை தரும்.

மென்ஸ்ட்ருவல் டிஸ்க்: மென்ஸ்ட்ருவல் கப் போலதான் மென்ஸ்ட்ருவல் டிஸ்க்கும் பயன்படுகிறது. இதையும் கப் போலவே பொருத்திக் கொள்ள வேண்டும். ஆனால், இதன் அளவும், பொருத்தும் முறையும் மாறுபடும். இந்த மென்ஸ்ட்ருவல் டிஸ்க்கும், மென்ஸ்ட்ருவல் கப் போன்றே 12 மணி நேரம் வரை தாக்குபிடிக்கக் கூடியவை. ஆரம்பத்தில் பொருத்திக் கொள்வது கடினமாக தோன்றினாலும், பழகியதும் வசதியாக இருக்கும். இது மிகவும் பாதுகாப்பான சாதனமாகும்.

துணி பேட்: காட்டன் நாப்கின்கள் வடிவத்திலேயே தான் கிளாத் நாப்கின்கள் இருக்கும். ஆனால் இது துணியால் செய்யப்பட்டிருக்கும். மென்ஸ்ட்ருவல் கப், டிஸ்க், டாம்பான்கள் போன்ற மாற்று சாதனங்களை பயன்படுத்துவது சிரமமாக இருந்தால், துணி நாப்கின்கள் நல்ல தேர்வாக இருக்கும். இவற்றை பயன்படுத்திய பின் தூக்கி எறிந்துவிடாமல், துவைத்து மீண்டும் பயன்படுத்தலாம். அந்தகாலத்தில் பெண்கள் மாதவிடாய் நேரத்தில் துணிகளை பயன்படுத்தியது போன்றதுதான் இது. சோப்பு போட்டு சுத்தம்செய்து நன்கு வெயிலில் படுமாறு காயவைத்து எடுத்து வேண்டும். இப்போது லீக் ப்ரூஃப் க்ளாத் பேட்கள் கிடைப்பதால், கசிவு நீடிக்கும் தன்மை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. இவை சானிட்டரி நாப்கின்களுக்கு சிறந்த மாற்றாக இருக்கும்.

ஒவ்வொரு மாதமும் நாப்கின்களுக்கு என்று தனியே செலவுசெய்து, உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்வதை விட, மேற்கூறப்பட்ட பட்ஜெட் ஃப்ரண்ட்லி தயாரிப்புகளை உபயோகித் தொடங்கினால், உடலின் ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள உதவும். இவற்றை முதன்முதலில் பயன்படுத்துவது அசெளகரியமாக , தொந்தரவாக உணர்ந்தாலும், பயன்படுத்த பழகிய பின் சவுகரியமாகவும் லேசாகவும் உணர தொடங்கிவிடுவார்கள்கள் என்கின்றது ஆய்வுகள்.

அதிலும் தற்போது கோடைக்காலம் தொடங்கிவிட்டது. பொதுவாகவே கோடைகாலத்தில் வெப்பத்தின் காரணமாக, பெண்கள் சரும பாதிப்பு, வறட்சி, வியர்க்குரு போன்ற பிரச்னைகளை சந்திப்பதோடு, மாதவிடாய் நாட்களில் சானிட்டரி நாப்கின்களாலும், பல பிரச்னைகளையும் அசவுகரியத்தையும் எதிர்கொள்ள நேரிடும். எனவே, முடிந்தளவு பாதிப்பில்லாதவற்றை பயன்படுத்தி பாதுகாப்பாக இருங்கள்.

தொகுப்பு : ஸ்ரீதேவி குமரேசன்

Related posts

அதிகரிக்கும் லேட் நைட் உணவுகள்… காத்திருக்கும் ஆபத்துகள்!

நலம் தரும் நவதானியங்கள்!

வாய் துர்நாற்றத்தை போக்க எளிய வழிகள்!