பயன்படுத்திய சானிட்டரி நாப்கின்கள்…உஷார்!

ஒரு பெண் தன்னுடைய வாழ்நாளில் மாதவிலக்கு காலங்களில் 23 முதல் 24 கிலோ வரை சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துகிறார்கள். இந்த நாப்கின்களை பயன்படுத்திவிட்டு கழிவுகளாக குப்பைகளில் சேரும் போது சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. பல இடங்களில் மழைநீர் வடிகால்கள் மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் இந்த நாப்கின்கள் அடைத்துக் கொள்வதால் மழைநீர் பூமிக்கு செல்வதில் தடை ஏற்படுகிறது. இவை மட்டுமா சுற்றுச்சூழலியல் சமீபத்திய ஆய்வில், சுமார் 121 மில்லியன் இந்தியப் பெண்கள் அதாவது இந்திய மக்கள் தொகையில் 36% பெண்கள் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். அதில் 12.3 பில்லியன் நாப்கின் கழிவுகள் உண்டாவதாகவும், இது ஆண்டுக்கு 1,13,000 டன் கழிவுகளாக கிடங்குகளுக்கு செல்கிறது எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இவை ஒன்றிணைந்து நிலம், நீர், காற்று என மாசுப்படுத்தும் காரணி களில் மிக முக்கியமான ஒன்றாகவும் மாறியிருக்கிறது.

சானிட்டரி நாப்கின்கள், குழந்தைகளின் டயபர்கள் போன்றவை மருத்துவக்கழிவுகள், ஆனால் வீட்டுக் கழிவுகளாக குப்பைகளில் வீசப்படுகின்றன. இவைகள் சரியாக பிரிக்கப்படு மறுசுழற்சி முறைக்குச் செல்லப்பட வேண்டியவை. இதனால் குப்பைகளை அப்புறப்படுத்துவோர் முதல், குப்பைக் கிடங்கில் வேலை செய்வோர் வரை நுண்ணுயிரிகளால் பாதிக்கப்படுகிறார்கள். பொதுவாக சில பிராண்டுகள் பருத்தி பஞ்சுகளுக்கு பதிலாக ‘அதிக நேரம் நீடித்த சானிட்டரி நாப்கின்கள்’ என்னும் கண்கவர் விளம்பரங்களுக்காகவே பிளாஸ்டிக்குகளை பயன்படுத்துகிறார்கள். இதனை சரியான முறையில் மருத்துவக் கழிவுகளாக அப்புறப்படுத்தும் போதுதான் மறுசுழற்சி முறைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இவை மீண்டும் சுத்திகரிப்புக்கு ஆளாகும். இல்லையேல் நிலத்தில் பலநூறு வருடங்கள் கிடந்து மண்வளத்தைக் கேள்விக் குறியாக்கும்.

சானிட்டரி பேடை நீண்ட நேரம் குப்பைத் தொட்டியில் வைத்திருந்தால், சானிட்டரி நாப்கின்களில் உள்ள மாதவிடாய் திரவம் கிருமிகளால் மாசுபட்டு துர்நாற்றம் வீசக்கூடும். மேலும் பாக்டீரியாக்களை உற்பத்தி செய்யும். எனவே, முதலில் உங்கள் வீட்டில் துர்நாற்றம் வீசுவதைத் தடுக்க குப்பைத் தொட்டியை மூடி வைக்க வேண்டும், இரண்டாவதாக, குப்பைத்தொட்டியில் உள்ள குப்பைகளை உடனடி யாக அப்புறப்படுத்த வேண்டும், இந்த குப்பைகளைச் சுற்றி சேகரிக்கும் ஈக்கள்மற்றும் பிற பூச்சிகளால் நோய் பரவுவதைத் தடுக்க வேண்டும். வெளிப்புற குப்பைத் தொட்டிகளிலும் மக்கும் குப்பை மக்காத குப்பை எனும் வாசகம் இருக்கும் அதில் மக்காத குப்பைகள் தொட்டிகளில் சானிட்டரி நாப்கின்கள், மற்றும் டையபர்களை போட வேண்டும். இல்லையேல் மக்கும் குப்பைகளுடன் இணைந்து கிடங்கிற்கு செல்ல அங்கே நெருப்பில் வாட்டினாலும் கூட எரியாமல் அப்படியே நிலத்தில் பிளாஸ்டிக் திரவமாக படியும். இதனைக் கருத்தில்கொண்டு சானிட்டரி நேப்கின்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்துங்கள்.

சானிட்டரி நாப்கின் அகற்றும் பைகள்!

சானிட்டரி நாப்கின் அகற்றும் பைகள் (Sanitary Disposal Bags). மார்கெட்டில் இவை ரூ. 125க்கு 50 பைகள் வீதம் விற்பனைக்கு உள்ளன. மேலும் இவை மொத்தமாக வாங்கும் போது இன்னும் சிறப்பான சலுகைகளும் கிடைக்கும். இவற்றை தனிநபர்கள் மட்டுமின்றி, அலுவலகங்கள், திரையரங்கங்கள், மால்கள் என வாங்கி வைத்து சிறு தொகைக்குக் கூடகொடுக்கலாம். ஏனெனில் ஒவ்வொரு பெரு நிறுவனங்கள் மற்றும் மால்கள், பொது இடங்களில் குப்பைகளை பிரித்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என தூய்மைப் பணியாளர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். இப்படி பயன்படுத்தப்பட்ட நாப்கின்களை அகற்றும் பைகளில் போட, அவர்களே தனியாக பிரித்து மக்காத குப்பைகளாக எடுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கும் வேலை மிச்சம். மேலும் சரியான முறையில் மறுசுழற்சிக்கும் எடுத்துக்கொள்ளப்படும். இதனால் சுற்றுச்சூழலும் கூட பாதிப்பில் இருந்து ஓரளவு பாதுகாக்கப்படும். வீட்டிலும் 50 பைகள் வாங்கினாலே சுமார் நான்கைந்து மாதங்கள் வரும் என்பதால் வாங்கி வைத்து பயன்படுத்தலாம். தெருக்களில் வைக்கப்பட்டிருக்கும் இரண்டு குப்பைத் தொட்டிகளில் எது மக்காத குப்பை என ஆராய்ந்து அதில் நாப்கின்களை அப்புறப்படுத்தினால் நல்லது.

நாப்கின்கள் இல்லா மாதவிடாய்!

பல பெண்கள் நாப்கின்களே இல்லாத மாதவிடாய் கப்களுக்கு (Menstrual Cup மாறிவிட்டனர். இவைகள் ஆரம்பத்தில் நிறைய தயக்கங்கள், கேள்விகளை உருவாக்கினாலும், சூழலுக்கும், உடலுக்கும் நன்மை தரும் கப்களாக மருத்துவத் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரமான நாட்கள், உடையில் கறை படுமோ என்கிற பயமில்லா நிலையும் கொடுப்பவை எனவும் கருத்துக்கணிப்பிலும் முதலிடம் பெற்றிருக்கிறது. இதனையும் பயன்படுத்தப் பழகிக்கொள்ளலாம்.
– ஷாலினி நியூட்டன்

Related posts

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு அளிக்கவில்லை

யானைகள், புலிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அரிய வகை செந்நாய்கள் என்ட்ரி : மூணாறு தொழிலாளர்கள் கலக்கம்

ரெட்டியார்சத்திரம் அருகே நான்கு வழிச்சாலை பணிக்காக 40 தென்னை மரங்கள், 2 வீடுகள் அகற்றம் : இழப்பீடு கோரி விவசாயிகள் போராட்டம்