Monday, September 9, 2024
Home » மங்களம் தரும் சனி பகவான்

மங்களம் தரும் சனி பகவான்

by Porselvi

நமக்கு ராகு காலம், எமகண்டம் தெரியும் அது என்ன குளிகன்? என்ற கேள்வி வரும். அதுமட்டுமின்றி, சில ஜாதகக் கட்டங்களில் ஜோதிடர்கள் மாந்தி (அ) மா என எழுதியிருப்பார்கள். யார் இந்த மாந்தி? ஏன் குறிப்பிட்டார்கள் என்ற கேள்வி வரலாம். இந்த மாந்தியையும், குளிகனையும் பற்றி அறிவோம்.சனி பகவானுக்கு இரண்டு மனைவிகள். ஒரு மனைவி பெயர் ஜ்யேஷ்டா. இவருக்குப்பிறந்த குழந்தையின் பெயர் குளிகன். குளிகன் எருமைத்தலையும் மனிதஉடலும் கொண்டவன் ஆவான். மற்றொரு மனைவி பெயர் மாந்தா (எ) தாமினி. மாந்தாவிற்கும் சனிக்கும் பிறந்த மகனின் பெயர் மாந்தி. இவர்களே சனி பகவானின் பட்டத்து இளவரசர்கள்.

மாந்தி புராணம்

சனிக்கிரகத்தின் துணைக்கிரகம் மாந்தி ஆகும். துணைக் கிரகம் என்றால் சனியின் நிலா என வைத்துக் கொள்ளுங்கள். சனியின் ஈர்ப்பு விசையால் சனியை சுற்றி வருகின்ற ஒரு கோள்.இராவணனின் மனைவி மண்டோதரி கருவுற்ற போது, சுக்ராச்சாரியாரிடம் ஆலோசனை கேட்கிறார். சுக்ராச்சாரியார் 11-ல் அனைத்து கிரகங்களும் இருந்தால் பிறக்கும் குழந்தை எப்பொழுதும் வெற்றியாளனாக இருப்பான் என்றும், கிரகங்கள் 12-ஆம் இடத்திற்கு சென்றால் பிறக்கும் குழந்தைக்கு சுப பலன்கள் இல்லை எனவும் ஆலோசனை சொல்கிறார், சுக்ராச்சாரியார். அப்பொழுது, இராவணன் தனது தவவலிமையால் நவகோள்களையும் சிறை வைக்கிறான். நிலத்தில் இருந்தால் இவைகளின் வலிமை அதிகம் என்பதால், நீரில் சிறை வைக்கிறான். அக்கணம், நவகோள்களும் ஈசனிடம் பிரார்த் தனை வைக்கின்றன. சுக்ராச்சாரியாரிடமே நவகோள்களும் ஆலோசனை கேட்கின்றன. சுக்ராச்சாரியார், “உங்கள் ஒன்பது பேருக்கும் சமமான ஒருவரை படைத்து விடுங்கள் நீங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவீர்கள்’’ என ஆலோசனை சொல்கிறார்.

சனி கடமை தவறாதவன், ஆதலால், 12-ஆம் இடம் நோக்கி நகர்கிறான், அப்பொழுது இராவணன் அவனது காலை துண்டிக்கிறான். எப்படியும் தனது கடமையை செய்துவிட வேண்டும் என்ற முனைப்பில், சனிபகவான் தன் காந்த சக்தியால் சிறையில் இருந்தவாறு தனது மனைவியான மாந்தாவை கர்ப்பமுறச் செய்து மாந்தியை பிறக்கச் செய்கிறார். இராவணன் மாந்தியை பற்றி அறியாததன் காரணத்தால், மாந்தி தன் தந்தையின் ஆணையால் கடமையை 12-ஆம் இடத்திற்குள் சென்று செய்யவே பிரவேசிக்கிறான். அச்சமயத்தில், இராவணனுக்கும் மகன் பிறக்கிறான். மிகுந்த மகிழ்ச்சியின் காரணமாக நவகிரகங்களை விடுவிக்கிறான் இராவணன். விடுவிக்கப்படுவதால் நவகோள்களும் மாந்தியை கொண்டாடுகின்றன. அப்பொழுது, மேகம் பிளக்கும் அளவிற்கு இடியுடன் கூடிய மழை பெய்கிறது. ஆதலால், இராவணன் தனது மகனுக்கு மேகநாதன் என்று பெயர் சூட்டுகிறான். பிறகு, மேகநாதன் வலிமையின் காரணமாக இந்திரனிடம் பல ஆயுதங்களைப் பெற்று இந்திரனையும் வெல்வதால், அவனுக்கு இந்திரஜித் என்ற பெயர் வருகிறது. 12-ஆம் இடத்தில் அமர்ந்த மாந்தி. மேகநாதன் (எ) இந்திரஜித்திற்கு அற்ப ஆயுளைச் செய்துவிட்டது. இதுவே மாந்தி ஜோதிடத்திற்குள் நுழைந்த (பிறந்த) புராண வரலாறு.

ஏன் மாந்தியை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை?

மாந்தி என்னும் கிரகம் அதிகமாக அசுபப் பலன்களை தருவதாலும், மாந்திக்கு என நட்சத்திரங்கள் இல்லாததால் திசா நடைபெறாததாலும் மாந்தியை சில ஜோதிடர்கள் கட்டத்திற்குள் கொண்டுவ ருவதில்லை. மாந்தி 11-ம் இடத்தில் தனியாக இருக்கும் போதும் மட்டும் அதிக சுப பலன்களை தருகிறார். மேலும், கடிகாரச்சுற்றில் வலம் வந்தாலும் முறையான காலக் கணக்கிற்குள் மாந்தி சுழல்வதில்லை.

மாந்தி தோஷம் எப்பொழுது ஏற்படும்?

மாந்தி என்பவர் சனிபகவானின் வெட்டுப்பட்ட கால் உண்டான போது பிறந்தவர். வெட்டுப்பட்டபோது பிறந்ததால், மாந்தி சவத்துக்கு சமமானவர். சவ ஊர்வலங்கள் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும். இல்லாவிடில், மாந்தி தோஷம் உண்டாகும். ஜாதகத்தில் கிரகங்களுடன் சேரும் போதும் எந்த கிரகத்துடன் எந்த ராசியில் இணைகிறாரோ அதை பொறுத்தும் தோஷம் ஏற்படும்.

மாந்தி தோஷத்திற்கான பரிகாரங்கள் என்ன?

இறந்தவரின் ஆன்மாக்களுக்கு ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்வதும், சவ அடக்கத்திற்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதும், மாந்தியின் தோஷத்தை வெகுவாகக் குறைக்கும். இன்னும் சொல்லப்போனால் மாந்தி தோஷம் இல்லாமலே போகும்! ேதாஷத்தை குறைக்க மாந்தி உள்ள கோயில்களுக்கும் செல்லலாம்.

மாந்தி மற்றும் குளிகனுக்கு கோயில்கள்

*கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் அருகில் திருநறையூர் எனும் ஸ்தலத்தில் சனிபகவான் தனிச்சந்நதியில் எழுந்தருளுகிறார். தன் மனைவி நீலாதேவி மகன்கள் குளிகன் மற்றும் மாந்தி என குடும்பத்தோடு அருள்பாலிக்கிறார். அங்கே சென்று முறையாக பூஜை செய்து வழிபட்டால், மாந்தி தோஷம் விலகும்.
*பஞ்ச சபைகளில் ஒன்றான திருவாலங்காடு ஆலயம், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ளது. இந்தத் தலத்தில் மாந்தி வழிபட்ட லிங்கம் உள்ளது, அங்கே சென்று அந்த சிவலிங்கத்தை வழிபட்டாலும் மாந்தி தோஷம் நீங்கும்.
*பட்டுகோட்டைக்கு அருகே விளங்குளம் ஊரில் அமைந்துள்ள சிவாலயத்தில் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயிலில் சனி பகவான் குடும்பத்தோடு காட்சி தருகிறார். இந்த தலத்தில்தான் சிவபெருமான் அருளால் சனி பகவானுக்கு திருமணமாகும் பாக்கியமும் கிடைத்தது. இங்கு மந்தாதேவி, ஜேஷ்டாதேவி என்ற இரு பத்தினிகளுடன் சனீஸ்வரர் தனிச் சந்நதியில் அமைந்திருக்கிறார். இங்கு சனிபகவானின் ஊனத்தை காகம் வந்து பெற்றுக் கொண்டதாம். ஆதலால், சனிபகவான் அந்தக் காகத்தை தன் வாகனமாக ஏற்றார் எனவும் தலபுராணம் சொல்கிறது. விபத்துகள், துர்மரணங்கள் ஏற்படாமல் இருக்க, எம பயம் நீங்கி, நீண்ட ஆயுளைப் பெற, எதிரிகளால் ஏற்படும் அச்சம், தொந்தரவுகள் நீங்கவும் மாந்தியின் அருளை பெறவும் இங்கு வழிபாடு செய்யலாம்.

குளிகனுக்கு கொடுக்கப்பட்ட நேரம்

மாந்தி ஜோதிடத்தில் நுழைந்தான். குளிகன் காலத்திற்குள் நுழைந்தான், அதாவது தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் குளிகை (எ) குளிக நேரமாக வருகிறது. குளிக நேரத்தில் எந்த காரியத்தை
செய்தாலும் அக்காரியம் தொடர்ந்து திரும்ப திரும்ப நடைபெறும் என சொல்லப்படுகிறது.

குளிகன் நேரத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது?

பதவியேற்கலாம், வீடு, மனை பத்திரம் பதிவு செய்யலாம். தங்க நகைகள், ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம், வங்கியில் கணக்கு தொடங்கலாம், சேமிப்பு ஆரம்பிப்பது போன்ற சுப விஷயங்கள் அனைத்தும் இந்த குளிகை நேரத்தில் தொடங்கலாம். முக்கியமாக பலர் கடனால் அவதியுறுவர், அவர்கள் இந்த நேரத்தில் கடனை அடைத்தால் மீண்டும் மீண்டும் அச்சம்பவம் நடைபெறும் காரணத்தால் விரைவாக கடன் அடைபடும் என்பது குளிகையின் சிறப்பு.இறந்தவர்களின் சவத்தை இந்தக் காலத்தில் எடுக்கக்கூடாது. பெண் பார்க்கும் படலம் செய்யக் கூடாது, திருமண வைபவத்தை குளிகை நேரத்தில் செய்யக் கூடாது. கடன் வாங்கக்கூடாது. வரன் தேடுவதை குளிகையில் ஆரம்பித்தால் வரன்களை தேடிக்கொண்டே இருக்கவேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். எந்த ஒரு கிரகங்களுக்கும் குறிப்பிட்ட வழிபாடு செய்து, நமது பாவத்தை தொலைத்து புண்ணியம் என்ற நன்மையை அடைவோம்.

You may also like

Leave a Comment

three × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi